/

பழனி தைப்பூசத் திருவிழா: ஜன.28 திருக்கொடியேற்றம்: பிப்.3 தைப்பூசத் தேரோட்டம்

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் புகழ்பெற்ற தைப்பூசத் திருவிழா வரும் ஜனவரி மாதம் 28ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்குகிறது.  வரும் பிப்ரவரி 3ம் தேதி தைப்பூசத்

News image
Updated On :21 ஜனவரி 2015, 1:30 pm

என்.​ அங்​கு​பாபு

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனியில் புகழ்பெற்ற தைப்பூசத் திருவிழா வரும் ஜனவரி மாதம் 28ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்குகிறது.  வரும் பிப்ரவரி 3ம் தேதி தைப்பூசத் தேரோட்டமும், பிப்.6ம் தேதி தெப்பத்தேரோட்டமும் நடைபெறுகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக விளங்குவது பழனித்தலமாகும். கனியொன்றுக்காக மனம் நொந்து ஞானதண்டாயுதபாணி சுவாமியாக பழனியம்பதியில் வீற்றுள்ள முருகப்பெருமான் இங்கு மனமுருகி வருவோர்க்கு வேண்டுவதை தருபவராக காட்சியளிக்கிறார்.  இக்கோயிலில் வருடம் முழுக்க திருவிழா நடைபெற்ற வண்ணம் இருப்பினும் தைப்பூசத் திருவிழாவும், பங்குனி உத்திரத் திருவிழாவும் முக்கிய இடத்தை பெற்றுள்ளன. 

பழனி தைப்பூசத் திருவிழாவின் போது தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இலட்சக்கணக்கான பக்தர்கள் பால்காவடி, பன்னீர்காவடி, மயில் பீலிக்காவடி, மலர்க்காவடி என பல்வேறு காவடிகள் எடுத்து களைப்பு தீர ஆடிப்பாடி பாதயாத்திரையாக வருகின்றனர். பக்தர்கள் வருகையை முன்னிட்டு பல இடங்களில் பக்தர்கள் இளைப்பாறும் இடம், குடிநீர் வசதி, தற்காலிக பேருந்து நிலையம், சுகாதார மையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அனைத்து நிர்வாகமும் இணைந்து மேற்கொண்டு வருகிறது. 

இப்பெருமை மிக்க தைப்பூசத் திருவிழா வரும் ஜனவரி மாதம் 28ம் தேதி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் உள்ள கொடிக்கட்டி மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதர் முத்துக்குமாரசாமி தினமும் புதுச்சேரி சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளிக் காமதேனு, வெள்ளி யானை, தந்தப்பல்லக்கு, தங்ககுதிரை, தங்கமயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் நான்கு இரதவீதி உலா எழுந்தருள்கிறார்.  முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் பிப்ரவரி 2ம் தேதி மாலை 7.30 மணிக்கும், அதைத் தொடர்ந்து வெள்ளித்தேர் புறப்பாடும் நடைபெறுகிறது.

தொடர்ந்து பிப்ரவரி 3ம் தேதி மாலை 4.35 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.  நிறைவு நாள் நிகழ்ச்சியாக பிப்ரவரி 6ம் தேதி தெப்பத் தேரோட்டமும், திருக்கொடி இறக்கமும் நடைபெறுகிறது.  திருவிழாவை முன்னிட்டு விழா நாட்களில் அடிவாரம் குடமுழுக்கு நினைவரங்கில் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு, பட்டிமன்றம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.  விழாவிற்கான ஏற்பாடுகளை பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம் தலைமையில் உதவி ஆணையர் மேனகா மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.