/

ஆக்கிரமிப்பில் உள்ள பழனிக்கோயிலுக்கு சொந்தமான கோடிக்கணக்கான சொத்துக்கள் விரைவில் மீட்கப்படும்

பழனி திருக்கோயிலுக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் மீட்கப்படும் என்றும் திருத்தொண்டர்

News image
Updated On :23 ஜனவரி 2015, 1:08 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி திருக்கோயிலுக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் மீட்கப்படும் என்றும் திருத்தொண்டர் பேரவை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

     தமிழகத்தில் திருத்தொண்டர் பேரவை தமிழக அரசின் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள திருக்கோயில் சொத்துக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.  பல்வேறு இடங்களில் திருக்கோயில் நிலங்களையும், வக்பு வாரியத்தின் நிலங்களையும் இந்த அமைப்பு மீட்டுத்தந்துள்ளது.  இந்நிலையில் திருத்தொண்டர் பேரவை நிறுவனர் ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை பழனியில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.  தொடர்ந்து பழனி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள், திருக்கோயில் அதிகாரிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

 கூட்டம் முடிந்த பின்னர் தண்டபாணி நிலையத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது, பழனி திருக்கோயிலுக்கு கட்டளைக்காக சென்னிமலையை சேர்ந்த ஒருவரால் வழங்கப்பட்ட தம்பிரான் தோட்டம், அவ்வையம்மாள் சொத்துக்கள் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.  இவை கோயிலுக்கு வேண்டிய பூக்கள் வழங்கும் நந்தவனமாகவும், அபிஷேகத்துக்கு வேண்டிய கைங்கர்ய பொருட்கள் வழங்கவும் தானமாக வழங்கப்பட்டவை.  இவை தற்போது வணிக வளாகங்கள், பள்ளிகள், திருமண மண்டபங்கள், உணவு விடுதிகள், வீடுகள் என பல்வேறு பரிணாமங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.  இவற்றில் சிலவற்றிற்கு முறைகேடாக பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளது.  எந்த அடிப்படையில் மேற்படி இடங்களுக்கு மின்இணைப்பு, நகராட்சி குடிநீர் இணைப்பு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டது என அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்பட்டு மீண்டும் நந்தவனங்களாக மாற்றப்படும்.  பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு திருக்கோயில் பெயருக்கு மாற்ற ஏற்பாடுகள் செய்யப்படும். 

 இவற்றின் தற்போதைய மதிப்பு சுமார் நூறுகோடி என தெரியவந்துள்ளது.  திருக்கோயில் நிர்வாகத்தின் சொத்துக்கள் தாய் வசம் உள்ள குழந்தை போன்றது.  இதை கருத்துடன் பராமரிக்க வேண்டியது முக்கியமாகும்.  திருக்கோயிலுக்கு சாதமாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தபிறகும் இதை யாரும் கவனிக்காமல் விட்டுள்ளனர்.  அதே நேரம் திருக்கோயில் சொத்துக்கள் பாராதீனம் செய்வதோ, விற்பதோ, வாங்குவதோ பெரிய குற்றமாகும்.   பழனி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை தனி அதிகாரம் உள்ளது.  அதை பயன்படுத்தி அவர்கள் அகற்றலாம்.  யாரிடமும் அனுமதி பெற வேண்டியதில்லை. 

நீண்டகாலமாக ஆக்கிரமிப்பில் வசித்து வரும் உண்மையான ஏழை மக்களுக்கு மாற்றுஇடம் வழங்க வருவாய்துறை ஏற்பாடு செய்யும்.   மரம் வளர்ப்பது மிக முக்கியமான ஒன்று.  தற்போது மக்கள் மத்தியில் அதற்கான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.  இது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.  பேட்டியின் போது வட்டாட்சியர் மாரியப்பன் மற்றும் திருக்கோயில் ஆய்வாளர்கள் உடனிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.