/

24அடி நீளம், 6அடி அகலத்தில் 55,000 கை பெருவிரல் ரேகையால் தேசியக்கொடி வரைந்து சாதனை

பழனி அருகே அமரபூண்டியில் முனைவர் ஆராய்ச்சிப்பட்ட மாணவர் ஒருவர் 24 அடி நீளம், 6 அடி அகலத்தில் 55,000 பெருவிரல் ரேகை மூலமாக தேசியக்கொடி வரைந்து சாதனை புரிந்துள்ளார்.

News image
Updated On :25 ஜனவரி 2015, 2:18 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி அருகே அமரபூண்டியில் முனைவர் ஆராய்ச்சிப்பட்ட மாணவர் ஒருவர் 24 அடி நீளம், 6 அடி அகலத்தில் 55,000 பெருவிரல் ரேகை மூலமாக தேசியக்கொடி வரைந்து சாதனை புரிந்துள்ளார்.

பழனி அருகே அமரபூண்டியை சேர்ந்தவர் கணேசன் மகன் சக்திவேல்(33).  இவர் பி.ஏ., பி.எட்., எம்.பி.,ல் முடித்துள்ளார்.  தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முனைவர் ஆராய்ச்சிப் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார். மிகவும் வறுமையான சூழலிலும் சிலம்பம், பழங்கால நாணயங்கள் சேமிப்பு, ஸ்டாம்ப் சேகரிப்பு, ஆராய்ச்சிப்படிப்பு என பல்வேறு முயற்சிகள் செய்து வரும் இவர் வித்தியாசமான முயற்சியாக குடியரசு தினத்தை முன்னிட்டு கை பெருவிரல் ரேகைளை பதித்து தேசியக்கொடி வரைந்துள்ளார். அமரபூண்டி சரசுவதி மேல்நிலைப் பள்ளியில் அடிப்படைக் கல்வி பயின்ற இவர் தனது சாதனைக்கான முயற்சியை இந்த பள்ளி வளாகத்திலேயே மேற்கொண்டார்.  24 அடி நீளம், 6 அடி அகலத்தில் துணியை தயார் செய்து அதில் கை பெருவிரல் ரேகையை பதித்து தேசியக்கொடி படம் வரைந்துள்ளார்.

பச்சை, சிகப்பு, நீல நிறத்தில் எமல்சன் மற்றும் பிக்மெண்ட் நிறமிகளை வைத்து அதில் கை பெருவிரல் ரேகையை பதித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை காலை 10 மணிக்கு துவக்கி மாலை 6 மணிக்கு நிறைவு செய்தார்.  இந்த நிகழ்ச்சியை பள்ளியின் தலைமையாசிரியர் சந்திரசேகரன் துவக்கி வைத்தார்.  சாதனைக்கு இடைப்பட்ட நேரத்தில் வெறும் ஐந்து நிமிடம் மட்டுமே சக்திவேல் ஓய்வு எடுத்துக் கொண்டார்.

இந்த தேசியக்கொடிக்காக 55,000 முறை கைவிரலை நிறமியிலை நனைத்து துணியில் பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த சாதனை ஓவியம் வரைந்த பின்பு ஏராளமான உள்ளூர் பிரமுகர்களும், மாணவ, மாணவியரும் வந்திருந்து பார்த்து கரகோஷம் எழுப்பி தங்கள் பாராட்டை தெரிவித்தனர்.   இந்த சாதனையின் போது சக்திவேலுடன் தமிழ்நாடு புத்தக சாதனையாளர் அன்புச்செல்வன், சாதனையாளரும், சாதனைப்புத்தக ஒருங்கிணைப்பாளருமான சூரியா, லியாஸ்கர், வசந்தரூபன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதுகுறித்து சக்திவேல் கூறுகையில், வித்தியாசமான சாதனை செய்ய வேண்டும் என நீண்டகாலமாக நினைத்திருந்தேன்.  குடியரசு தினம் வரும் வேளையில் சாதனைப்புத்தகத்தில் இடம் பெறுவதை விட இதுபோன்று மூவர்ண தேசியக்கொடி, அசோகசக்கரம் வரைந்தது மிகவும் பெருமையாக உள்ளது என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.