/

முகாம் நிறைவு செய்து திரும்பிய கோயில்யானை கஸ்தூரிக்கு சிறப்பு வரவேற்பு

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாமை முடித்து புதன்கிழமை பழனி திரும்பிய பழனிக்கோயில் யானை கஸ்தூரிக்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

News image
Updated On :28 ஜனவரி 2015, 11:52 am

என்.​ அங்​கு​பாபு

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாமை முடித்து புதன்கிழமை பழனி திரும்பிய பழனிக்கோயில் யானை கஸ்தூரிக்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

பழனி திருக்கோயிலில் சுவாமி புறப்பாடு மற்றும் கோயில் தேரோட்டங்களில் பங்கேற்று பக்தர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது பழனி கோயில் யானை கஸ்தூரி ஆகும். 48 வயது நிரம்பிய கோயில்யானை கஸ்தூரி தமிழக அரசின் யானைகள் புத்துணர்வு முகாமிற்காக கடந்த டிசம்பர் மாதம் 10ம் தேதி மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டிக்கு கிளம்பி சென்றது. 48 நாட்கள் நடைபெற்ற யானைகள் புத்துணர்ச்சி  முகாம் ஜன.27ம் தேதி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரவு கிளம்பிய பழனிக்கோயில் யானை கஸ்தூரி இன்று  காலை 9 மணியளவில் பழனி புதுதாராபுரம் சாலையில் உள்ள தமிழ்நாடு சிறப்புக்காவல் படை கல்லூரி முகாமிற்கு வந்து சேர்ந்தது.  அங்குள்ள திடலுக்கு லாரியில் இருந்து இறக்கப்பட்டு சிறிது நேரம் நடைபயிற்சி, தண்ணீர் வழங்கப்பட்டது.  பின்னர் எடைபார்க்கப்பட்டு பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலுக்கு வந்தது. கோயிலுக்கு வந்த யானை கஸ்தூரிக்கு திருக்கோயில் சார்பில் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.  முகப்பட்டம், அங்கி, காலுக்கு கொலுசு மற்றும் பெரிய மாலை அணிவிக்கப்பட்டு பூசணிக்காய் சுற்றப்பட்டு கோயிலுக்குள் அழைத்து வரப்பட்டது. பின்னர் யானை கஸ்தூரிக்கு பழங்கள், கரும்பு போன்றவை வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் பழனி எம்எல்ஏ., வேணுகோபாலு, பழனிக்கோயில் இணை ஆணையர்(பொறுப்பு) ராஜமாணிக்கம், உதவி ஆணையர் மேனகா, கந்தவிலாஸ் செல்வக்குமார், ஹோட்டல் கண்பத் ஹரிஹரமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  கால்நடை உதவி மருத்துவர் சுரேஷ் கூறும்போது, பழனிக்கோயில் யானை கஸ்தூரி முகாமிற்கு செல்லும் போது 4,920 கிலோ இருந்தது. அதிக எடை இருந்ததால் கால்வலி உள்ளிட்ட பிரச்னை ஏற்படும் என்பதால் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு தற்போது முகாம் முடித்து திரும்புகையில் 110 கிலோ குறைந்து 4,810 கிலோ எடையுள்ளது. 

முகாமில் யானைக்கு முழு உடல் பரிசோதனை, இயற்கையான சூழலில் நடைப்பயிற்சி, நல்ல பராமரிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும்,  யானை நல்ல மனநிலையுடன் புத்துணர்ச்சியுடன் உள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், முகாமில் நிறைவுநாளில் நடைபெற்ற கயிறு இழுக்கும் போட்டியில் கஸ்தூரி முதல் பரிசை வென்று உடலை போர்த்தும் சிகப்பு வெல்வெட் போர்வை பரிசு பெற்றது.  தவிர, கடைசியானை லாரி ஏறும் வரை நின்றிருந்து கும்கியாக செயல்பட்டு கடைசியாக கிளம்பி வந்தது என்றும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.