/

பழனி லட்சுமிபுரத்தில் சாலைகள் நிலைமையை சீர் செய்ய கோரிக்கை

பழனி நகரில் பிரதான பகுதியாக கருதப்படும் இடங்கள் அண்ணாநகர், சண்முகபுரம், இலட்சுமிபுரம் ஆகும். இந்த பகுதிகளில் சாலைகள் 20 அடி, 30அடி மற்றும் 40அடி அளவில் அமையப்பெற்றுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2015, 2:31 pm

என்.​ அங்​கு​பாபு

பழனி லட்சுமிபுரத்தில் பிரதான சாலை மிகவும் சீர்கேடான நிலையில் இருப்பதால் இதை சீர்செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழனி நகரில் பிரதான பகுதியாக கருதப்படும் இடங்கள் அண்ணாநகர், சண்முகபுரம், இலட்சுமிபுரம் ஆகும். இந்த பகுதிகளில் சாலைகள் 20 அடி, 30அடி மற்றும் 40அடி அளவில் அமையப்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த சாலைகளை குடிநீர் குழாய்கள் பதிக்கும் பொருட்டு நகராட்சி நிர்வாகம் இருபுறமும் தோண்டியதால் 30அடி சாலை 10அடி மண்ரோடாக மாறிவிட்டது.  இதனால் இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதற்கு பயன்பாடற்ற நிலையில் உள்ளது.  இந்த சாலையில் முன்னாள் எம்பி., குமாரசாமி, முன்னாள் எம்எல்ஏ., சுப்புரத்தினம், பழனி ஒன்றியகுழு தலைவர் செல்லசாமி, தொப்பம்பட்டி ஒன்றியகுழு தலைவர் வெள்ளைத்தாய்கிட்டுசாமி ஆகியோர் வீடுகள் உள்ளது.  தவிர நகரின் முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் வீடுகள் பலவும் இந்த சாலையிலேயே உள்ளது.  இதை விட முக்கியமாக பழனி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இந்த சந்திப்பில்தான் உள்ளது. 

இந்நிலையில் இந்த சாலையை சரிசெய்ய நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் சரிசெய்யப்படாத நிலை நீடித்து வருகிறது. தற்போது தைப்பூசம் துவங்கவுள்ள நிலையில் நகராட்சி மேல்நிலைப் பள்ளி மைதானத்துக்கு தற்காலிக பேருந்து நிலையம் மாற்றப்படவுள்ளது.  இதனால் பேருந்துகளும் இந்த வழியேதான் செல்லவேண்டியுள்ளது.  இப்பாதையில் பிரபலமான இரண்டு மகப்பேறு மருத்துவமனைகள், இரண்டு குழந்தைகள் நல மருத்துவமனைகள் உள்ளது.  இச்சாலையில் பேருந்துகள் செல்லும் போது ஏற்படும் தூசுமண்டலம் வீடுகளுக்குள்ளும், மருத்துவமனைக்குள்ளும் சென்று கடந்த ஆண்டே பெரும் இன்னல் செய்ததால் அப்போது தண்ணீர் தெளிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டது.  இன்றும் இதே நிலை உள்ளதால் போர்க்கால அடிப்படையில் இந்த சாலையை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுகுறித்து நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், கவுன்சிலர் கந்தசாமி ஆகியோரிடம் கேட்டபோது, இந்த சாலையை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் தற்போது ரூ.20 இலட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.  ஆனால் பணிகளை செய்ய விடாமல் கவுன்சிலர்களுக்குள் தகராறு மூண்டுள்ளது.  மக்கள் பணியை செய்ய விடாமல் கவுன்சிலர்களே முட்டுக்கட்டை போடும் போது நாங்கள் என்ன செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.