ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா சங்கம், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தின.
முகாமிற்கு லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிக் குழுத் தலைவர் எஸ்.குணசேகரன் தலைமை தாங்கினார். அரிமா சங்கத் தலைவர் ஆர்.பி.ரஞ்சித், செயலாளர் இ.கே.எஸ்.குமாரசாமி, பொருளாளர் எம்.அகமது அனாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் கிளை மேலாளர் ரமேஷ் வரவேற்றார்.
அரவிந்த் கண் மருத்துவமனையில் மருத்துவக் குழுவினர் சுமார் 500 நோயாளிகளுக்கு நவீன கருவிகள் மூலம் பரிசோதனை மேற்கொண்டு, குறைபாடு உடையவர்களுக்கு தக்க ஆலோசனைகளை வழங்கினார்கள். இதில் 60 பேர் கண்புறை அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.முகாமில் அரிமா சங்கத்தின் முன்னாள் தலைவர் கு.சக்திவேல், எல்.சாத்தப்பன், பொ.மறக்கண்ணு, கார்த்திக் உள்ளிட்பட பலர் கலந்து கொண்டனர்.