

பொதுமக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்துவிட்டு, எதையும் செயல்படுத்தாத நிலையில் மோடியின் அரசு செயலிழந்த அரசாக உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் முகில்வாஸ்னிக் குற்றஞ்சாட்டினார்.
விருதுநகர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாக்குச்சாவடி முகவர்களுடனான நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை மாலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகிலந்திய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக் பங்கேற்பதற்காக வந்தார். அதையடுத்து, விருதுநகர் காமராஜர் நினைவில்லத்துக்கு சென்று அவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் நினைவு இல்லத்தில் உள்ள புகைப்பட தொகுப்புகளையும், அவர் பயன்படுத்திய பொருள்கள் ஆகியவைகளை பார்வையிட்டார்.
அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்துக்கு வந்தது பெருமையாக இருக்கிறது. அவர் வாழ்ந்த எளிமையான வாழ்க்கை, சந்தித்த போராட்டங்கள் தற்போதைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருந்து வருகிறது. இதேபோல் காங்கிரஸ் கட்சியை மாநில அளவிலும், இந்திய அளவிலும் திறமையாக அவர் வழிநடத்தியுள்ளார். அந்த வழிகாட்டுதல் அடிப்படையிலேயே எங்கள் செயல்பாடுகளும் இருக்கிறது.
தற்போது, தமிழகத்தில் சட்டப்பேரவை தொகுதிவாரியாக சென்று தொண்டர்களை பலப்படுத்தும் வகையில் நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதில், 12-வது தொகுதியாக விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இதில், நி்ர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் தொகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்து, அதன் அடிப்படையிலேயே 2016-ல் சட்டப்பேரவை தேர்தலை சந்திப்பதற்கான கலந்தாய்வு மேற்கொள்ளப்படும்.
தற்போது, மத்தியில் மோடியின் அரசு செயலிழந்த அரசாக உள்ளது. மக்களவை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதில், கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.15 லட்சம் வழங்குதல், விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் கொடு்த்தல் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது போன்றவைகளில் ஒன்றைக்கூட நடைமுறைப்படுத்தவில்லை.
அதேபோல், லலித் மோடி விவகாரத்தில் நரேந்திர மோடியின் ஆதரவு உள்ளது. எனவே ஊழலற்ற நிர்வாகம் நடத்துவதாக கூறும் மோடி, சுஷ்மாசுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரராஜே ஆகியோரை பதவி விலகச் செய்திருக்க வேண்டும்.எனவே மோடியின் அரசு செயலிழந்த அரசாக உள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும், தேவையான இடத்தில் பேசாமல், தேவையில்லாத இடத்தில் அதிகம் பேசுகிறார். பா.ஜ.கவின் தோல்விகளை பொறுப்புள்ள எதிர்கட்சியில் உள்ள காங்கிரஸ் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
அப்போது, உடன் முன்னாள் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மாவட்ட தலைவர் வேலாயுதம், முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் பாலகிருஷ்ணசாமி மற்றும் நகர செயலாளர் வெயில்முத்து உள்பட நிர்வாகிகள் இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.