குட்டியுடன் உலா வரும் சிறுத்தை: அச்சத்தில் பொதுமக்கள்
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம், கடையம் பகுதியில் குட்டியுடன் சிறுத்தை ஒன்று உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.


திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம், கடையம் பகுதியில் குட்டியுடன் சிறுத்தை ஒன்று உலா வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இரவில் சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்பதால் மலையடிவாரக் கிராம மக்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர்.
களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் மலையடிவாரக் கிராமங்களில் வனவிலங்குகள் அட்டகாசம் இருந்து வருகிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து மலையடிவாரத்தில் பயிரிட்டுள்ள விளைப் பொருட்களை சேதப்படுத்துகின்றன.
சிவசைலம், மணிமுத்தாறு, பொட்டல், புலவன்குடியிருப்பு உள்ளிட்ட பகுதியில் காட்டுப் பன்றி, காட்டு எருமை விளை நிலங்களில் புகுந்து நெல், வாழைப் பயிரை அழித்தும் வருகின்றன.
விக்கிரமசிங்கபுரம் அருகே அனவன்குடியிருப்பு, அருணாசலம்புரம், திருப்பதியாபுரம், கருத்தையாபுரம், சிவசைலம் போன்ற மலையடிவாரக் கிராமங்களில் அவ்வப்போது சிறுத்தை புகுந்து ஆடு, மாடு போன்ற கால்நடைகளை அடித்து தின்று வருகின்றன.
கோடை காலம் தொடங்கி விட்டால் தண்ணீருக்காகவும், இரை தேடியும் காட்டுக்குள் இருந்து வெளியேறும் சிறுத்தை, மிளா, மான் போன்ற விலங்குகள் பாபநாசம் அகஸ்தியர் அருவி, அனவன்குடியிருப்பு, சிவசைலம் பகுதிக்கு வருகின்றன. சிறுத்தை ஒன்று கடந்த சில ஆண்டுகளாக அனவன்குடியிருப்பு எரிகல்பாறை பொத்தையில் தங்கி உள்ளது.
இந்த பெண் சிறுத்தை அண்மையில் குட்டியினை ஈன்றுள்ளது. குட்டியுடன் வெளியேறும் இச்சிறுத்தை பிப். 18 ஆம் தேதி அகஸ்தியர் அருவி, சேர்வலாறு அணைக்கு செல்லும் பிரதான சாலையில் நடமாடியதை கணக்கெடுப்பில் ஈடுபட்டவர்கள் கண்டனர்.
கடந்த சில தினங்களாக அனவன்குடியிருப்பு, அருணாசலம், சிவசைலம் பகுதியில் உலா வரும் சிறுத்தையின் உறுமல் சப்தம் இரவு நேரங்களில் அதிகளவில் இருப்பதாக பொதுமக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். சனிக்கிழமை இரவில் அனவன்குடியிருப்பு, அருணாசலம்புரத்தில் சிறுத்தையின் உறுமல் கேட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர். பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் நடமாடி வரும் சிறுத்தையை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனினும் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து இருப்பதால் மலையடிவாரக் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். சிறுத்தை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...