கர்நாடகத்தில் அணை கட்டுவது இறையாண்மையைப் பாதிக்கும்: ஜி.கே.மணி
கர்நாடக அரசு புதிதாக அணை கட்டுவது இந்திய இறையாண்மையைப் பாதிக்கும் என்றார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணி. திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஜி.கே.


கர்நாடக அரசு புதிதாக அணை கட்டுவது இந்திய இறையாண்மையைப் பாதிக்கும் என்றார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணி. திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஜி.கே.மணி மேலும் கூறியதாவது:
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே 48 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய அணை கட்ட திட்டமிட்டு, முதல்கட்டமாக ரூ.25 கோடியை கர்நாடக அரசு ஒதுக்கியுள்ளது. இது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். அரசு மற்றும் தனிமனித இறுதிக்கட்ட புகலிடமாகத் திகழும் நீதிமன்றத்தின் அதுவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறும் செயலாகும். இந்தச் செயல் இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும்.அணைக்கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு தொடுத்த வழக்கை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
கர்நாடகம் அணை கட்டுவதைத் தடுக்க தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பின்பு தமிழக முதல்வர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பிரதமரைச் சந்தித்து அணை கட்டுவதைத் தடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும். கர்நாடக அரசைக் கண்டித்து பா.ம.க. சார்பில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திங்கள்கிழமை (மார்ச் 23) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தின்போது தமிழகத்தில் மதுக்கடைகள் பெருகி இளைஞர்கள், மாணவர்கள் உள்பட மனித சமுதாயம் சீரழிந்து வருகிறது. அதிலிருந்து காப்பாற்றப்பட மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அதனால்தான் பா.ம.க. தலைமையில் மாற்று அணி உருவாக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. , தி.மு.க. அல்லாத பிற கட்சிகள் இந்தக் கூட்டணியில் சேரலாம். இந்த அணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறார். பெண்கள், இளைஞர்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு உள்ளது. ஆட்சிக்கு வந்தால் ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கை மாற்றுஅணி கொண்டு வரும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் கட்சியினரையும், பொதுமக்களையும் சந்திக்க அன்புமணிராமதாஸ் திட்டமிட்டுள்ளார்.
இம் மாதம் 25 ஆம் தேதி காலை 10 மணிக்கு விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்திலும், மாலை 3 மணிக்கு திருநெல்வேலியிலும், 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு நாகர்கோவிலிலும், மாலை 3 மணிக்கு தூத்துக்குடியிலும், 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு ராமநாதபுரத்திலும், மாலை 3 மணிக்கு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலும் நடைபெறும் கூட்டங்களில் அன்புமணிராமதாஸ் பேச உள்ளார்.தென்மாவட்டங்களில் குடிநீர்த் தடுப்பாட்டைப் போக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நீர் ஆதாரத்தைப் பெருக்கும் வகையில் தாமிரவருணியில் 5 கி.மீ. தொலைவுக்கு ஒரு தடுப்பணைக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு காற்றாலை மின்உற்பத்தியாளர்களிடம் வாங்கிய மின்சாரத்துக்கு உரிய தொகையை செலுத்தாமல் உள்ளது. இது தவறானதாகும். மின்உற்பத்தியாளர்களுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
மத்திய அரசின் மீது மக்கள் மிகுந்த நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் வைத்துள்ளனர். அதை மீறும் வகையில் விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று பிடிவாதமாக இருப்பது ஏற்கத்தக்கதல்ல. இலங்கைத் தமிழர் மற்றும் மீனவர் பிரச்னையிலும் மத்திய அரசின் செயல்பாடு எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றதுடன் இல்லை. வேகமாகத் தீர்க்க வேண்டும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...