ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை வடபத்ரசயனர் கோவில் கும்பாபிஷேகம்: விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு வடபத்ரசயனர் (வடபெருங்கோவிலுடையான்) திருக்கோவில்.....


ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு வடபத்ரசயனர் (வடபெருங்கோவிலுடையான்) திருக்கோவில் ஜீர்ணோத்தாரண மஹாசம்ப்ரோக்ஷணம் வெள்ளிக்கிழமை நடைபெறுவதையொட்டி, விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதற்காக பல்வேறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரியாழ்வாரும், அவர் தம் திருமகளாய் ஸ்ரீஆண்டாளும் அவதரித்து மங்களாசாஸனம் செய்யப்பட்ட, ஸ்ரீவடபத்ரசாயி என்றும் வடபெருங்கோவிலுடையான் என்றும் திவ்ய திருநாமங்களுடன் உகந்து எழுந்தருளியுள்ள திவ்யதேசம் ஸ்ரீவில்லிபுத்தூர் க்ஷேத்திரம்.
பெரிய திருவடியின் அம்சமாய் அவதரித்த ஸ்ரீபெரியாழ்வார் வடபெருங்கோவிலுடையானுக்கு அழகிய நந்தவனம் அமைத்து மாலைக் கைங்கர்யம் செய்து வந்தார். பாண்டிய மன்னனின் சபையிலே பரத்துவ நிர்ணயம் செய்து அதனால் கிடைத்த பெரும் தனத்தைக் (பொற்கிளி) கொண்டு இந்த எம்பெருமானுக்கு உயர்ந்த ராஜகோபுரத்தையும் அமைத்தார்.
எம்பெருமான் ஸ்ரீவடபத்ரசயனருக்கும், ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீலக்ஷ்மி வராஹர், ஸ்ரீசக்கரத்தாழ்வார், ஸ்ரீபெரியாழ்வார், தமிழக அரசின் முத்திரைச் சின்னமான ராஜகோபுரம், விமானங்கள் மற்றும் அனைத்து மூர்த்திகளுக்கும் மஹா சம்ப்ரோக்ஷணம் நடைபெறுகிறது.
யாகசாலை பூஜைகள் 18-ம் தேதி திங்கள்கிழமை தொடங்கியது. பூஜைகளை கோவிலின் பட்டர் டாக்டர் வெ.வாசுதேவன் முன்னின்று நடத்தினார்.
வெள்ளிக்கிழமை அதிகாலை வில்வரூபம், புண்யாஹவாசனம், மஹாபூர்ணாஹூதி, அந்த ஹோமம், அக்னிம் கும்ப ஸமாரோபணம், தசதானம், தக்ஷிணாதானம், மாத்ராதானம், க்ரஹப்ரீதி, பஞ்சகதானம், யாத்ராதானம், கடம் புறப்பாடு, ஆலய ப்ரதக்ஷிணம், ஜீவஸ்தாநப் பிரவேசம் நடைபெறுகிறது.
பின்னர் மஹாசம்ப்ஹோக்ஷணம் நடைபெறுகிறது. மதியம் திருவாராதனம், சாற்று முறை கோஷ்டி, பிரம்மகோஷம், வாழி மங்கலம், இயல் சாற்று தீர்த்த கோஷ்டி நடைபெறுகிறது. இரவு ஸ்ரீபெரிய பெருமாள் கருட சேவை மற்றும் ஸ்ரீபெரியாழ்வார் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளுகிறார்கள்.
நிகழ்ச்சியில் ஸ்ரீமத் பரமஹம்ஸ வானமாமலை ஸ்ரீஸ்ரீஸ்ரீமதுரகவி ராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள், ஸ்ரீஸ்ரீஸ்ரீ த்ரிதண்டி ஸ்ரீமன்நாராயண சின்ன ஜீயர் ஸ்வாமிகள் எழுந்தருளி மங்களாசாஸம் செய்கிறார்கள்.
மஹா சம்ப்ரோக்ஷணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீநாச்சியார் சாரிட்டி டிரஸ்ட் தலைவர் மற்றும் ராம்கோ தொழில் குழுமத் தலைவர் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா, தக்கார் கி.ரவிச்சந்திரன் ஆகியோர் செய்துள்ளார்கள்.
விழாவில் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...