திருநெல்வேலி மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் கடனாநதி, ராமநதி, அடவிநயினார் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அருவியில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டது. நான்குனேரியில் அதிகபட்சம் 133 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
வடகிழக்கு பருவ மழை ஒரு சில தினங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியிலும் பலத்த மழை பெய்துள்ளது.
விடிய விடிய பெய்த மழையால் மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 50, பாபநாசம் கீழ் அணை 24, சேர்வலாறு அணை 29, மணிமுத்தாறு அணை 57.2, கடனாநதி அணை 4, ராமநதி அணை 57, கருப்பாநதி அணை 36, குண்டாறு அணை 12.1, அடவிநயினார் அணை 45, நம்பியாறு அணை 17, கொடுமுடியாறு அணை 30.
மாவட்டத்தில் பிற பகுதியில் பதிவான மழை: நான்குனேரியில் அதிகபட்சம் 133, ஆய்க்குடியில் 80.8, தென்காசியில் 62, களக்காடு 42.4, ஆலங்குளத்தில் 40.6, செங்கோட்டையில் 19, ராதாபுரம் 19, அம்பாசமுத்திரம் 32.2, சேரன்மகாதேவி 21, கன்னடியன் அணைக்கட்டு 34, பாளையங்கோட்டை 35, திருநெல்வேலி 32, சங்கரன்கோவில் 6, சிவகிரி 6.2, ஸ்ரீவைகுண்டம் 39. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் கடனாநதி அணைக்கு விநாடிக்கு100 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 106.68 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 92 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 84 கனஅடியும், பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 508.91 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 313 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
நீர்மட்டம் உயர்வு:
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 68.30 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் ஒரு அடி உயர்ந்து 81.59 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 60.90 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 52 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 4.50 அடி உயர்ந்து 53 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 2.30 அடி உயர்ந்து 55.78 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 3.50 அடி உயர்ந்து 81 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 22.50 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 13.50 அடியாகவும் இருந்தது.
மணிமுத்தாறு அணை திறப்பு: மணிமுத்தாறு அணையிலிருந்து பிசான பருவ சாகுபடிகளுக்கான அணையின் பெருங்கால் மதகு பாசனத்திற்கு ஞாயிற்றுக்கிழமை 30 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பாபநாசம், சேர்வலாறு அணைகளிலிருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.