செங்கோட்டையில் 6 பேரை லாரி ஏற்றி கொன்ற டிரைவர் போலீசாரிடம் சிக்கினார்
திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகே ஆட்டோ- லாரி மோதியதில் 6 பேர் பலியான சம்பவம் திட்டமிட்ட கொலை என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை அருகே ஆட்டோ- லாரி மோதியதில் 6 பேர் பலியான சம்பவம் திட்டமிட்ட கொலை என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, லாரி ஓட்டுநர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கோட்டை அருகேயுள்ள எஸ்.புதூர் பகுதியில் கடந்த வியாழக்கிழமை ஷேர் ஆட்டோவும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கற்குடி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கருப்பசாமி, அடிவெட்டி, இவரது மகன் மகேஷ், லாலாகுடியிருப்பைச் சேர்ந்த கனகு, இசக்கியம்மாள், மேலபுதூர் பகுதியைச் சேர்ந்த முருகன் ஆகிய 6 பேர் இறந்தனர்.
இதுகுறித்து புளியரை போலீஸார் வழக்குப் பதிந்து, லாரியை ஓட்டிவந்த, கற்குடியைச் சேர்ந்த காளி மகன் திருமலைக்குமாரை தேடி வந்தனர். இந்நிலையில் அவர், செங்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை (செப். 12) சரணடைந்தார். விபத்து வழக்கில் ஜாமீனும் பெற்றுச் சென்றார்.
இதற்கிடையே, தென்காசி ஏ.எஸ்.பி. அரவிந்தன் தலைமையிலான போலீஸார் இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தியதில், இந்த சம்பவம் விபத்தல்ல, திட்டமிட்ட கொலை எனத் தெரியவந்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஏ.எஸ்.பி. ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கற்குடியைச் சேர்ந்த காளி, ஹரிஹரன் தலைமையில் இரண்டு தரப்பினர் செயல்பட்டு வருகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையே கற்குடி பகுதியில் குளங்களை குத்தகைக்கு எடுப்பது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட குளங்களில் மீன்பாசி குத்தகை விடுவது தொடர்பான ஏலத்தில் காளி பங்கேற்றுள்ளார். அந்தக் குளத்தை ஹரிஹரன் தரப்பினர் ஏலம் எடுத்ததால், காளி தரப்பினர் அந்தக் குளத்தில் விஷத்தை கலந்து மீன்களைக் கொன்றுள்ளார். இதுகுறித்து புளியரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு காளி தரப்பினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மீண்டும் ஏற்பட்ட பிரச்னையில், புளியரை காவல் நிலையத்தில் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்ற ஹரிகரன் தரப்பைச் சேர்ந்த அடிவெட்டி, மகேஷ் ஆகியோர் புளியரை காவல் நிலையத்தில் கையெழுத்திடுவதற்காக தினமும் ஆட்டோவில் செல்வது வழக்கம். இவர்களைக் கொலை செய்ய காளி தரப்பினர் முடிவு செய்தனர்.
அதன்படி, ஆட்டோ மீது லாரியால் மோதவிட்டு, சம்பவத்தை விபத்துபோல சித்திரிக்க அவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக வரைபடங்களையும் வரைந்து திட்டத்தை நிறைவேற்ற தயாராகியுள்ளனர்.
சம்பவ தினத்தில் காளி மகன் திருமலைக்குமார் லாரியை ஓட்டியுள்ளார். அவருடன் உதயகுமார், முருகன் ஆகியோர் அரிவாளோடு சென்றுள்ளனர். திட்டமிட்டவாறு எதிரே அடிவெட்டி, மகேஷ் ஆகியோர் வந்த ஆட்டோ மீது லாரியால் மோதியுள்ளனர். இந்த சம்பவத்தில் இவர்கள் இருவர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் முருகேசன் ஆகியோர் இறந்தனர். இவர்களுடன் ஆட்டோவில் இருந்த இசக்கி, கனகு, முருகன் ஆகியோரும் இறந்தனர். இவர்கள் மூவரும் கோயிலுக்குச் செல்வதற்காக தற்செயலாக அந்த ஆட்டோவில் ஏறியவர்கள்.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக காளி தரப்பைச் சேர்ந்த கோட்டூர்சாமி, மாரித்துரை ஆகியோர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். லாரி ஓட்டுநர் திருமலைக்குமார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். இவர்கள் செங்கோட்டை நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் பலரைக் கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

