வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் வகையில் திருத்தம், போலி வாக்காளர்கள் நீக்கம் செய்வது குறித்து வாக்குச் சாவடி அலுவலர்கள், அரசியல் கட்சியின் வாக்குச் சாவடி முகவர்கள் இடையேயான கலந்தாய்வுக் கூட்டம் இன்று(19-ம் தேதி) நடைபெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் 40 லட்சத்துக்கும் அதிகமான போலி வாக்காளர்கள் உள்ளதாகவும், பட்டியலில் ஒரு தடவைக்கு மேல் பெயர் இடம் பெற்றவர்கள், உயிரிழந்தோர் ஆகியோரை அகற்ற வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில் கடந்த 15-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரையில் வாக்காளர் பட்டியல் முறைப்படுத்தும் பணியை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் குறிப்பிட்ட காலை, மாலை நேரங்களில் வீடு, வீடாகச் நேரில் சென்று சரிபார்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் வில்லிவாக்கம், ஐ.சி.எஃப் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குச் சாவடி அலுவலர்கள் தீவிரமாக ஆய்வு செய்தனர். இதில், ஒவ்வொரு நாளும் கண்டறியப்படும் போலி வாக்காளர்கள், உயிரிழந்தோர் ஆகிய விவரங்கள் குறித்து தேர்தல் பிரிவு அலுவலகத்திற்கும் அலுவலர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், வாக்காளர்கள் பட்டியலை முறைப்படுத்துதல் பணி தொடர்பாக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், வாக்குச் சாவடி மேற்பார்வையாளர்கள், நிலை அலுவலர்கள், அரசியல் கட்சியின் பூத் முகவர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று(19-ம் தேதி) நடைபெற இருக்கிறது.
அதில் வாக்குச் சாவடி அலுவலர்கள் களப்பணியின் போது கண்டறிந்த இரட்டை பதிவு, முகவரி மாற்றம், உயிரிழந்தோர் தொடர்பான விவரங்கள் அரசியல் கட்சியினருக்கு அளிக்கப்படவும் உள்ளது. இதில் ஆட்சேபம் இருந்தால் அரசியல் கட்சியினர் மனுவையும் அளிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.