போக்குவரத்துத் தொழிலாளர் ஓய்வூதியம் அரசே வழங்க வேண்டும்: ஏஐடியூசி மாநில மாநாட்டில் வலியுறுத்தல்
அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை அரசே ஏற்க வேண்டும் என ஏஐடியூசி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.


திருநெல்வேலி: அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை அரசே ஏற்க வேண்டும் என ஏஐடியூசி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர் சம்மேளனத்தின் (ஏஐடியூசி) 13 ஆவது மாநில மாநாடு திருநெல்வேலியில் 3 தினங்கள் நடைபெறுகிறது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை பேரணியுடன் இம்மாநாடு தொடங்கியது. 2 ஆவது நாளான புதன்கிழமை பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டுக்கு அமைப்பின் தலைவர் கே.எம். செல்வராஜ் தலைமை வகித்தார்.
தொழிற்சங்கத்தின் மூத்தத் தலைவர் ஏ. சங்கரன் மாநாட்டு கொடியினை ஏற்றி வைத்தார்.
பொதுச்செயலர் ஜெ. லட்சுமணன் அறிக்கை வாசித்தார். நாகர்கோவில் கோட்டப் பொதுச்செயலர் பி. தயானந்தன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநாட்டு வரவேற்புக்குழு செயலர் ஆர். ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.
மாநாட்டை மாநில பொதுச்செயலர் டி.எம். மூர்த்தி தொடங்கி வைத்தார். மாநில துணைத் தலைவர் மு. அப்பாத்துரை, மாநில செயலர் எஸ். சந்திரகுமார், துணைப் பொதுச்செயலர் கே. ரவி, திருநெல்வேலி மாவட்டச் செயலர் ஆர். சடையப்பன், தூத்துக்குடி மாவட்டச் செயலர் இ. கிருஷ்ணராஜ்,
மாநில விவசாய தொழிலாளர் சங்க துணைத் தலைவர் பி. பெரும்படையார், விவசாய சங்க மாவட்டத் தலைவர் எஸ்.வி. கிருஷ்ணன், மாவட்டச் செயலர் ஆர். கசமுத்து, வரவேற்புக்குழுத் தலைவர் எல். குருசாமி, பொருளாளர் ஆர். சுடலைமுத்து உள்பட மாநிலம் முழுவதும் இருந்து 400 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாநாட்டையொட்டி தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகள் அடங்கிய புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
தீர்மானங்கள்: தமிழகத்தில் சமூக, பொருளாதார வளர்ச்சியில் அரசுப் போக்குவரத்து கழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் 90 லட்சம் கி.மீ தொலைவு வரை இயக்கப்படுகிறது. சுமார் 2 கோடி பேர் பயணம் செய்கின்றனர். இதில் 31 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஆகவே பேருந்து சேவையை கருத்தில் கொண்டு போக்குவரத்துக் கழகத்தை அரசு மேம்படுத்த வேண்டும்.
பொதுத்துறை போக்குவரத்து கழகங்கள் மற்றும் தொழிலாளர்கள் நலனுக்கு எதிரான வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சட்டம்-2015 ஐ கைவிட வேண்டும்.
போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் நிகழாண்டு ஆக. 31 இல் முடிவடைகிறது. விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் ஊதியத்தை கணிசமாக உயர்த்த வேண்டும். போக்குவரத்துப் பொதுத்துறையை மேம்படுத்த வேண்டும்.
அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு 1998 முதல் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. 1.4.2003 க்கு பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதில்லை. தொழிலாளர்களின் ஓய்வுகாலப் பணப்பலன்களை போக்குவரத்துக் கழக நிர்வாகம் முறையாக வழங்க வேண்டும்.
அகவிலைப்படி உயர்வு போன்ற சலுகையினை நிர்வாகம் நிலுவையின்றி வழங்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் ஏற்படும் பற்றாக்குறையினை அரசே ஏற்க வேண்டும். போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை அரசே ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பொதுச்செயலர் என். உலகநாதன் நன்றி கூறினார்.
நிறைவு நாளான வியாழக்கிழமை அறிக்கை மீது விவாதமும், அமைப்பின் புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...