

திருப்பதி: 'திருமலையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்துக் கோவில்களிலும் புத்தாண்டுக்கான (ஜன.1) சிறப்பு தரிசன ஏற்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் எதுவும் நடக்காது என, தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின்படி, திருப்பதி ஏழுமலையான் கோவில் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்துக் கோயில்களிலும் புத்தாண்டு பண்டிகை, சிறப்பு ஏற்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி, அனில் குமார் சிங்கால் கூறியதாவது:
திருமலையில் எப்போதும், ஆகம விதிப்படி நடக்கும் உற்சவங்கள், தெலுங்கு புத்தாண்டான உகாதி மட்டுமே விமரிசையாக கொண்டாடப்படும். வைகுண்ட ஏகாதசி, உகாதி, பிரம்மோற்சவம் உள்ளிட்ட உற்சவங்களின் போது, திருமலை ஏழுமலையான் கோவில், மாட வீதிகளில், மலர் அலங்காரங்கள், மின் விளக்கு அலங்காரங்கள் உள்ளிட்டவை செய்யப்படும்.
ஆங்கில புத்தாண்டிற்கு, திருமலை ஏழுமலையானை தரிசிக்க, பக்தர்கள் அதிக அளவில் வருவர். அதனால், அவர்களுக்காக சில அலங்காரங்கள் செய்வது வழக்கம். ஆனால், இம்முறை ஆங்கில புத்தாண்டு பண்டிகையைக் கொண்டாடுவது ஹிந்து கலாச்சாரத்திற்கு எதிரானது. அதனால், அதைக் கொண்டாட வேண்டாம் என கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி ஆந்திர அரசு, அனைத்துப் பெரிய, சிறிய கோயில்களுக்கும், அறநிலைத்துறை மேலாளர்களுக்குச் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியது.
இதைத்தொடர்ந்து உகாதி பண்டிகைதான் உலகம் முழுவதும் தெலுங்கிற்கான புத்தாண்டு, அன்றுதான் பக்தர்கள் கோயில்களில் பிரார்த்தனை மற்றும் சிறப்பு விழாக்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
இதையடுத்து, ஆந்திராவில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் உள்பட அனைத்துக் கோயில்களில் இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்வரின் உத்தரவின்படி ஜனவரி 1-ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் உள்பட அதோடு தொடர்புடைய மற்ற கோயில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்குப் பதிலாக உகாதி பண்டிகைக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
வைகுண்ட ஏகாதசியின் போது செய்த அலங்காரங்கள், பக்தர்களின் பார்வைக்காக ஒரு வாரத்திற்கு அப்படியே வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.