

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் பிரச்னைகள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க அம் மாநில காவல்துறை டிஜிபி வருகின்ற நவம்பர் 7 ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் வினோத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக முழுநேர துணைவேந்தர், பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்து வருகிறது.
இந்நிலையில் ஆசிரியர்கள்,நிர்வாக ஊழியர்கள், மாணவர்களில் ஒரு பிரிவினர் குழுவாக சேர்ந்துகொம்டு மற்றொரு தரப்பினரிடம் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த வன்முறையில் பல்கலைக்கழகத்தின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தும் இதுவரை யாரையும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் சங்கங்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டு, மாணவர்களையும் அந்த போராட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளது.
இந்த போராட்டம் கல்லூரியின் அமைதியான சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, மாணவர்களின் கல்வியையும் பாதிக்கும். மேலும் சில மாதங்களுக்கு முன் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துணை வேந்தர் அவரது அறையில் பல மணி நேரம் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டார். எனவே பல்கலைக்கழக வளாகத்தில் அமைதியான சூழ்நிலை அமைய உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கிருபாகரன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, துணைவேந்தர் சிறை வைக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. காவல்துறையினர் பல்கலைக்கழகத்தின் அமைதியான சூழல் பாதிக்காத வகையில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழகத்தில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, யாராவது கைது செய்யப்பட்டனரா, மோதல் சம்பவத்தால் சேதமடைந்த சொத்து விவரங்கள் என்ன, வன்முறை சம்பவத்தின் பின்னணியில் ஏதாவது பயங்கரவாத அமைப்பு உள்ளதா, குற்றப்பின்னணி கொண்டவர்கள் யாரேனும் பல்கலைகத்தில் நியமிக்கப்பட்டு உள்ளனரா, பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளதா, வருகைப்பதிவு பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யப்படுகிறதா என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு புதுச்சேரி அரசு மற்றும் காவல்துறையினர் பதிலளிக்கவும், இந்த வழக்குத் தொடர்பாக புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி வருகின்ற நவம்பர் 7 ஆம் தேதி நேரில் ஆஜராகி அறிக்கைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.