கந்துவட்டி வசூலிப்போர் மீது கடும் நடவடிக்கை: அதிமுக வலியுறுத்தல்

புதுவையில் கந்துவட்டி வசூலிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவர்
Updated on
2 min read

புதுச்சேரி: புதுவையில் கந்துவட்டி வசூலிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.

அவர் புதன்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் சிறுகடைகள் வைத்திருக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் புதுச்சேரி அரசு மற்றும் புதுச்சேரியில் இயங்கும் வங்கிகளின் செயலற்ற, பொறுப்பற்ற காரணத்தினால் தொடர்ந்து கந்துவட்டியினரிடம் சிக்கி சீரழிந்து வருகின்றனர்.

இது அன்றாட நிகழ்வாக உள்ளது. இதை அ.தி.மு.க. பல முறை சட்டப்பேரவையிலும், முதல்வர்  பங்கேற்கும் அரசு விழாக்களிலும் சுட்டிக்காட்டி வந்துள்ளது. மேலும் புதுச்சேரி மக்களை கந்துவட்டி கொடுமையில் இருந்து காப்பாற்ற வங்கிகள் வியாபாரிகளுக்கு சிறு கடன்களை வழங்க வேண்டும் அதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் வற்புறுத்தி வந்தது.
ஆனால் கந்து வட்டிக்கு கடன் பெற்று பாதிக்கப்படுபவர்கள் மீது வங்கியும், அரசும் பாராமுகமாக உள்ளது.

தமிழகத்தில் ஒரு குடும்பமே கந்து வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அம்மாநில முதல்வர் இதுபோன்ற நடவடிக்கைகள் இனி நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் கந்து வட்டி கொடுமையால் பெண்கள் தற்கொலை செயஙிது கொள்கின்றனர். கந்து வட்டி கொடுமையை தடுக்க வேண்டிய போலீசார் உள்ளிட்ட அனைத்து அரசு துறையினரும் அத்தொழிலுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் புதுச்சேரியில் மீட்டர் வட்டி, தின வட்டி, நேர வட்டி, வார வட்டி, மாத வட்டி என பல வகைகளில் வட்டி வசூலிக்கப்படுகின்றது.

ரூ.10 ஆயிரம் கடனுக்கு தினம் ரூ.200 என மாதம் ரூ.6 ஆயிரம் 60 சதவீத வட்டி வசூலிக்கின்றனர். கந்து வட்டி கொடுப்பவர்கள் வெற்று காசோலை வாங்கி வைத்து கொண்டு,  காசோலையில் அதிக தொகையை நிரப்பி கேட்டு நெருக்கடி தருகின்றனர்.

இதனால் கடன் பெற்றவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.  கந்து வட்டி கொடுமையால்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கந்து வட்டி கும்பல் மாபியா கும்பல் போல்  அடியாட்களை வைத்து செயல்படுகின்றனர். அவர்களுக்கு போலீசும் ஆதரவாக உள்ளது.

போலீசார் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் வழக்கு பதிவு செய்வதில்லை. பஞ்சாயத்து மட்டுமே செய்கின்றனர். கந்து வட்டிக்கு பணம் பெற்ற குடும்பத்தினரின் பெண்களை தூக்கிச்சென்று 2 நாட்கள் அடைத்து வைக்கின்றனர். அப்போது சொத்துக்கள் ஏதேனும்  அவர்கள் பெயரில் இருந்தாலும் எழுதி வாங்கிக் கொள்கின்றனர்.

தமிழகத்தைப்போல் விரும்பத்தகாத சம்பவம் புதுச்சேரியில் நடைபெறுவதற்கு முன்பு முதல்வர் கந்து வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே கந்து வட்டியை தடுக்கும் நோக்கில் வங்கியும், அரசும் இணைந்து கடன் தர முன்வர வேண்டும். மேலும் கந்து வட்டி காரர்களுக்கு முதல்வர் உடனடியாக ஒரு எச்சரிக்கை வெளியிட வேண்டும். எச்சரிக்கைக்கு பின் திருத்தி கொள்ளாதவர்களை இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வங்கிகள் ரூ.1 கோடிக்கு மேல் கடன் கேட்பவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆவணங்களை கேட்டுப்பெற்று, சரி பார்த்து கடன் தருகின்றனர்.

ஆனால் ரூ.10 ஆயிரம் கடன் கேட்டு வரும் ஏழை, எளியவர்களை பல ஆவணங்கள் கேட்டு கடன் தராமல் அலைய விடுகின்றனர். இதனால் வங்கிகளால் ஏழைகள் பயன் பெறும் நிலை இல்லை. உண்மையானளர்களுக்கு  கடன் கொடுக்க வங்கிகளுக்கு சரியான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றார் அன்பழகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com