

சென்னை: தமிழகத்தில் 2 ஆயிரம் மெகாவாட் மின்பற்றாக் குறை இருப்பதாக தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு(சி.ஐ.டி.யு.) மாநில செயற்குழு கூட்டம் அதன் மாநில தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் தலைமையில் சென்னையில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. பொதுச்செயலாளர் எஸ்.ராஜேந்திரன், துணை பொதுச்செயலாளர் ஜெய்சங்கர், பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு பின்பு எஸ்.எஸ்.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோடைவெயில் அதிகரித்துள்ள நிலையில் மின்துறை அமைச்சர் தேவையான மின்சாரம் இருக்கிறது என்றும், தடையின்றி வழங்க முடியும் என்றும் சொல்கிறார். அது உண்மையல்ல. தேவைக்கேற்ப மின் உற்பத்தி தமிழகத்தில் இல்லை. அதனால் அனல், அணு மின்நிலையங்களில் இருந்தும், மத்திய தொகுப்பில் இருந்தும் கூடுதல் மின்சாரத்தை கேட்டு பெறுவதோடு, வெளியில் குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்கி விநியோகம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் உற்பத்தி திறன் 25 ஆயிரத்து 800 மெகாவாட் என்று அரசு சொல்கிறது. தற்போதைய உச்சக்கட்ட மின்தேவை 15 ஆயிரத்து 600 மெகாவாட்டை எட்டி இருக்கிறது. காற்றாலை, நீர்மின் நிலையங்களில் பருவகாலத்தில் தான் உற்பத்தி இருக்கும் என்பதால் அதை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.
2 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை: தற்போதைய மின்தேவையில் 2 ஆயிரம் மெகாவாட் மின்பற்றாக்குறை இருந்து வருகிறது. இதை சமாளிக்கத்தான் ஆங்காங்கே முன்னறிவிப்பில்லாத மின்வெட்டு ஏற்படுகிறது. எனவே, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்ணாவிரதம்: அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்து, குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வலியுறுத்தி மே 22-ஆம் தேதி 4 அனல்மின் நிலையத்திலும் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பது என்றும், மண்டலரீதியாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். பிரச்னைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் ஜூன் 27-ஆம் தேதி உள்ளிருப்பு வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் மின்விநியோக பிரிவு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய ரூ.380 ஊதியத்தை அளிக்க வலியுறுத்தி நீதிமன்றம் செல்லவும்,
மின்சார பொதுத்துறையை பாதுகாக்க வலியுறுத்தி ஆகஸ்டு மாதம் 1-ஆம் தேதி நாடு முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெற இருக்கிறது என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.