நீட் தோல்வியால் மாணவி தற்கொலை வருத்தமளிக்கிறது: ரஜினிகாந்த் இரங்கல்
சென்னை: நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் கிடைத்ததால் மனமுடைந்த விழுப்புரம் மாணவி பிரதீபா(18) தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது. இதனைத் தடுக்க நாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடகா முதல்வர் குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்து பேசியதில் எந்த தவறும் இல்லை, ஆரோக்கியமானதுதான். கர்நாடாகாவில் காலா படத்தை தமிழர்கள் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பினரும் பார்க்கவிரும்புகிறார்கள். காலா படத்தை வெளியிட கர்நாடக அரசின் முதல்வர் குமாரசாமி உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன். கர்நாடகாவில் காலா படம் வெளியாகும் என நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்தார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து நான் தெரிவித்த கருத்துகள் தவறாக சித்தரிக்கப்படுகின்றன. நான் என்ன பேசினேன் என்பதை வீடியோவில் பார்த்தாலே தெரியும்.
அரசியல் வேறு. சினிமா வேறு. என் படத்துக்கு தற்போது எதிர்ப்பு குறைவாக இருப்பதாகவே உணருகிறேன். படத்தில் நல்ல அம்சங்கள் இருந்தால்தான் மக்கள் வெற்றியடையச் செய்வார்கள்.
மேலும் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் கிடைத்ததால் மனமுடைந்த விழுப்புரம் மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். நீட் தேர்வால் தொடரும் உயிர்ப்பலிகளை தடுத்து நிறுத்தப்பட நாம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஜினிகாந்த் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

