பாஜகவினர் கனவு காண்கின்றனர்; 150 இடமெல்லாம் கிடைக்காது: மல்லிகார்ஜூன் கார்கே

கர்நாடகாவில் வெற்றி பெறுவோம் என பாஜகவின் கனவு காண்கின்றனர். அவர்களுக்கு 60-70க்கும் மேற்பட்ட இடங்களில் கூட வெற்றி
பாஜகவினர் கனவு காண்கின்றனர்; 150 இடமெல்லாம் கிடைக்காது: மல்லிகார்ஜூன் கார்கே

பெங்களூரு: கர்நாடகாவில் வெற்றி பெறுவோம் என பாஜகவின் கனவு காண்கின்றனர். அவர்களுக்கு 60-70க்கும் மேற்பட்ட இடங்களில் கூட வெற்றி கிடைக்காது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே தெரிவித்தார். 

கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 28-ஆம் தேதியுடன் நிறைவடைவதால் இன்று தேர்தல் நடைபெறுகிறது. 

இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

30 மாவட்டங்களில் மொத்தம் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில், ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் பி.என்.விஜயகுமார் காலமானார். இதனால் அத்தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் அட்டைகள் ஒரு வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து அத்தொகுதியிலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2,654 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மொத்தம் 5,06,90,538 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 2,56,75,579, பெண்கள் 2,50,09,904, மூன்றாம் பாலினத்தவர் 5,055 பேர் வாக்களிக்கின்றனர். 70,04,700 வாக்காளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல்முறையாக 18 முதல் 19 வயதுடைய 15 லட்சத்திற்கும் அதிகமான இளம் வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கின்றனர். முதல்முறையாக வாக்கு ஒப்புகைச் சீட்டு கருவிகளும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ளன.  

இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக மாநிலம் முழுவதும் 80 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 58,302 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்காளர்கள் தங்களது வாக்குகளை வரிசையில் நின்று பதிவு செய்து வருகின்றனர். 

அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்களது வாக்கை பதிவு செய்தனர். 

பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஷிகர்பூரில் உள்ள வாக்குச் சாவடியிலும், மத்திய அமைச்சரும் முன்னாள் முதல்வருமான சதானந்த கவுடா புத்தூர் வாக்குச்சாவடியில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவே கவுடா தன் மனைவியுடன் ஹசன் மாவட்டம் ஹோலிநரசிபுரா நகரில் உள்ள வாக்குச்சாவடியிலும், முதல்வர் சித்தராமையா தனது சொந்த ஊரான சித்தரமனாகுண்டி கிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். 

பாஜக முதல்வர் வேட்பாளர் பி.எஸ். எடியூரப்பா தனது வாக்கை பதிவை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கர்நாடகாவிற்கு இது ஒரு நல்ல நாள், மாநிலத்தில் நல்ல ஆட்சிக்கு நடைபெற கர்நாடதா மக்கள் எல்லோரும் வாக்குச் சாவடிக்கு வந்து பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட எடியூரப்பா. மொத்தமுள்ள 222 தொகுதிகளில் பாஜக 150 இடங்களுக்கு மேல் கைப்பற்றி பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என்றும் பிரதமர் மோடியை சந்தித்து வரும் 17-ஆம் தேதி நான் முதல்வராக பதவியேற்க உள்ள விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பேன் என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜூன் கார்கே பசவநகர் பகுதியில் உள்ள பூத் எண் 108ல் தனது வாக்கை பதிவு செய்தார். 

பின்னர் மல்லிகார்ஜூன் கார்கே செய்தியாளர்களிடம் கூறுகையில், கர்நாடகாவில் பாஜக கட்சி 150 இடங்களை எல்லாம் பெறவே முடியாது, வேண்டுமென்றால் வெற்றிபெறுவது போல கனவு காணலாம். 60-70க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறாது என்று நாங்கள் உறுதியாக கூறுவோம். பாஜகவினர் ஆட்சி அமைப்போம் என கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்.

பாஜக என்ன முயற்சி எடுத்தாலும் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கவே முடியாது. ஆட்சி அமைக்கலாம் என்பது கனவு மட்டுமே. இந்த முறை கர்நாடகாவில் காங்கிரஸ்தான் ஆட்சி அமைக்கும். எப்போதும் இல்லாத வகையில், கர்நாடகாவில் தொடர்ந்து இரண்டு முறை ஒரு கட்சி வெற்றிபெற போகிறது. காங்கிரஸ் 150க்கும் அதிகமான இடங்களை கண்டிப்பாக பெறும் என்று மல்லிகார்ஜூன் தெரிவித்தார். 

இந்த தேர்தலில் முதலில் 150க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று பாஜக திட்டமிட்டு உழைத்தது. ஆனால் கருத்து கணிப்புகளில் அப்படி ஒன்று நடப்பதற்கான வாய்ப்பில்லை, எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்பட்டது. இதனால் பாஜக 150 இடங்களை பிடிக்கும் எண்ணத்தை விட்டுவிட்டு கூட்டணி உருவாக்க முயற்சி எடுத்து வரும் நிலையில், மல்லிகார்ஜூன கார்கே இவ்வாறு தெரிவித்துள்ளது கர்நாடகா பாஜகவினர் மத்தியல் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.  

பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள 12,001 வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

அங்கு தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

பாதுகாப்பு பணியில் 1.40 லட்சம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் 27,672 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3.5 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.

இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 15-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com