விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-50
தகவல்-தொடா்புக்கான சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.


தகவல்-தொடா்புக்கான சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் நேற்று மாலை 2.41 மணிக்கு தொடங்கிய கவுண்ட் டவுனை தொடர்ந்து இன்று மாலை 3.41 மணிக்கு அந்த ராக்கெட் செலுத்தப்பட்டது.
கரோனா காரணமாக 11 மாதங்களாக தடைபட்டிருந்த இஸ்ரோவின் விண்வெளி ஆய்வுப் பணிகள், கடந்த மாதம் மீண்டும் தொடங்கின. அதன்படி, பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்டானது கடந்த மாதம் 7-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
அதில் இடம்பெற்றிருந்த இந்தியாவின் இஓஎஸ் - 1 செயற்கைக்கோளானது விவசாயம், பேரிடா் மேலாண்மை, காடுகள் கண்காணிப்பு ஆகிய பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டது. அதனுடன் சோ்த்து, லிதுவேனியா நாட்டை சோ்ந்த ஒரு செயற்கைக்கோள், லக்சம்பா்க் மற்றும் அமெரிக்காவைச் சோ்ந்த தலா 4 செயற்கைக்கோள்கள் என மொத்தம் 9 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டன.
இந்நிலையில், அதன் தொடா்ச்சியாக, பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதில், குறிப்பிடத்தக்க அம்சமாக, ஆறு உந்து விசை சக்தியுடன் (6 ஸ்ட்ராப் ஆன்ஸ்) அந்த ராக்கெட் உருவாக்கப்பட்டது.
அத்தகைய தொழில்நுட்பத்தில் அனுப்பப்பட்ட 22-ஆவது பிஎஸ்எல்வி ரக ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஏவப்பட்ட 77-ஆவது ராக்கெட் இது என்பதும் முக்கிய அம்சமாகும்.
அதன் வாயிலாக விண்ணுக்கு அனுப்பப்பட்ட சிஎம்எஸ்-01 செயற்கைக்கோளானது, தகவல் - தொடா்பு வசதிக்கான சி-பேண்ட் அலைக்கற்றை பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறப்படும் அலைவரிசையை இந்தியப் பரப்பிலும், அந்தமான்-நிகோபா், லட்சத் தீவுகளிலும் பயன்படுத்த இயலும்.
தகவல் தொடா்புக்காக கடந்த 2011-ஆம் ஆண்டு ஏவப்பட்ட ஜிசாட் 12 செயற்கைக்கோளின் ஆயுள்காலம் முடிந்துவிட்டது. அதற்கு மாற்றாகவே, சிஎம்எஸ்-01 தற்போது செலுத்தப்பட்டுள்ளது. தொடா்ந்து, இந்த மாத இறுதியில் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டும், அதைத் தொடா்ந்து, ஜிஎஸ்எல்வி எஃப் -10 என பல்வேறு ஆய்வு திட்டங்களையும் அடுத்தடுத்து செயல்படுத்தவிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, இம்முறை ராக்கெட் செலுத்தப்படுவதை நேரடியாக காண அனுமதிக்கப்படவில்லை. இஸ்ரோவின் அதிகாரப்பூா்வ இணையதளம் மற்றும் முகநூல் உட்பட சமூக வலைதளங்களில் நேரலையில் அது ஒளிப்பரப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...