சாத்தான்குளம் சம்பவம்: திருச்சியில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
திருச்சி: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்புக்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில், திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞர் முருகானந்தம் தலைமை வகித்தார். சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழப்புக்கு காரணமான காவலர்கள் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த அனைவரையும் கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும். சிறையில் அடைக்க உதவியாக போலி மருத்துவச் சான்றிதழ் வழங்கிய அரசு மருத்துவரைக் கைது செய்ய வேண்டும். தந்தை, மகன் இருவரையும் எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல் சிறையில் அடைக்க காரணமான அனைவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும். சம்பவத்தின்போது அந்த மாவட்டத்தில் பணிபுரிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை பணிநீக்கம் செய்ய வேண்டும்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அமைத்து வழக்கை விரைந்து விசாரித்து உடனடியாக தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய நிர்வாகிகள் மற்றும் வழக்குரைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.