ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

திருப்பூர் அரசு மருத்துவமனையில் பெண்ணின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் முற்றுகை

திருப்பூர் அரசு மருத்துவமனையில் பெண்ணின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் முற்றுகையில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

News image
Updated On :13 ஜூன் 2020, 11:14 am

DIN

திருப்பூர் அரசு மருத்துவமனையில் பெண்ணின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் முற்றுகையில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்புக்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனக்கூறி உறவினர்கள் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட கே.வி.ஆர். நகர் 2ஆவது வீதியைச் சேர்ந்தவர் பாண்டி(29), இவரது மனைவி மணியாள்(26), இந்தத் தம்பதிக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மணியாளை அவரது உறவினர்கள் பிரசவத்துக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் 2 நாள்களுக்கு முன்பாக சேர்த்துள்ளனர். 

இதையடுத்து, மணியாளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும், குழந்தையும் நலமாக இருந்துள்ளனர். இதனிடையே, மணியாளுக்கு வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனிடையே, உயிரிழந்த மணியாளின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் திருப்பூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Story image

அப்போது அவர்கள் கூறியதாவது:

மணியாளின் இறப்புக்கு அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியப் போக்கே காரணம். அரசு மருத்துவமனையில் இரவுப் பணியில் மருத்துவர்கள் இல்லாததால் அங்கிருந்த செவிலியர்கள் செல்லிடப்பேசி மூலமாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை அளித்ததால் தான் அவர் உயிரிழந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளனர். 

இதுகுறித்த தகவலின்படி அங்கு வந்த திருப்பூர் தெற்கு  காவல் உதவி ஆணையர் நவீன்குமார், ஆய்வாளர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த உறவினர்கள் மணியாளின் சடலத்தைப் பெற்றுச் சென்றனர். இந்த சம்பவம் காரணமாக திருப்பூர் அரசு மருத்துவமனையில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.