லடாக் எல்லையில் வீரமரணமடைந்த தமிழக வீரர் பழனியின் உடல் நல்லடக்கம்

லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் உடல் ராமநாதபுரம் மாவட்டம் கடுக்களூரில் உள்ள சொந்த நிலத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 
லடாக் எல்லையில் வீரமரணமடைந்த தமிழக வீரர் பழனியின் உடல் நல்லடக்கம்
Published on
Updated on
2 min read


லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் வீரத்திருமகன் பழனியின் உடல் துப்பாக்கி குண்டுகள் முழங்க ராமநாதபுரம் மாவட்டம் கடுக்களூரில் உள்ள சொந்த நிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடுக்களூர் கிராமத்தில் விவசாயி காளிமுத்து என்பவருக்கு பழனி மற்றும் கனி இரு மகன்கள். இதில் பழனி கடந்த 20 ஆண்டுகளாக ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வானதி என்ற மனைவியும் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தற்போது கடுக்களூர் கிராமத்தில் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில், லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன வீரா்களுக்கு இடையே திங்கள்கிழமை இரவு திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் மோதிக் கொண்டனா். இந்தச் சம்பவத்தில் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள கடுக்களூர் கிராமத்தைச் சோ்ந்த கே.பழனி(40) உள்பட 20 வீரா்கள் வீர மரணமடைந்ததாக இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இச்செய்தி அவர்களது குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனால் இவருடைய குடும்பத்தினர் மற்றும் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரா் பழனியின் உடல் புதுதில்லியிலிருந்து ராணுவ சிறப்பு விமானம் மூலம் புதன்கிழமை இரவு 11.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. பழைய விமான நிலைய முனையம் அருகே வைக்கப்பட்ட பழனியின் உடலுக்கு, மதுரை தேசிய மாணவா் படை கா்னல் சத்யன்ஸ்ரீ வாசன் தலைமையில் முப்படை வீரா்கள் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், மதுரை விமான நிலைய இயக்குநா் செந்தில்வளவன், மதுரை மாநகர காவல் ஆணையா் டேவிட்சன் தேவாசீா்வாதம், மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசன், திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் பா.சரவணன், தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், டிஐஜி ஆனி விஜயா, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

தொடா்ந்து மதுரை விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக பழனியின் உடல் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கடுக்களூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

மலர்களால்அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் பழனியின் உடல் ராணுவ மரியாதையுடன் கொண்டு வரப்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் ஒப்படைக்கப்பட்டது. 

அங்கிருந்து ராணுவ வாகனத்தில் சொந்த கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. தேசியக்கொடி போர்த்திய வீரர் பழனியின் உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். பின்னர் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

நாட்டிற்காக லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் உடலுக்கு அவரது குடும்பத்தினர், கிராமத்தின் முதல் ராணுவ வீரருக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். முப்படை வீரர்கள், ஆட்சியர் வீரராகவ ராவ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்கள். தொடர்ந்து மனைவி பெற்றோர்கள், ஊறவினர்கள், அரசியல் பிரமுகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியதை அடுத்து 21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் பழனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நாட்டுப்பற்று காரணமாக தனது சகோதரரையும் ராணுவத்தில் இணைத்தவர் பழனி என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com