சக்ரா திரைப்படத்தை வெளியிட தடை கோரி வழக்கு : நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு
சக்ரா திரைப்படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்க கோரிய வழக்கில் நடிகர் விஷால் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: சக்ரா திரைப்படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்க கோரிய வழக்கில் நடிகர் விஷால் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், எங்கள் நிறுவனம் நடிகர் விஷால், நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ஆக்ஷன் என்ற திரைப்படத்தை தயாரித்தது.
இந்த திரைப்படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திரும்பத் தருவதாக கூறி, டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரனுடன் நடிகர் விஷால் உறுதியளித்து ஒப்பந்தம் செய்தார். ஆனால் விஷால் ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை. இந்த நிலையில் இயக்குனர் ஆனந்தன் என்பவர் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்திடம் ஒரு கதையை சொல்லி அதை படமாக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. எங்கள் நிறுவனத்திடம் கூறிய அதே கதையை இயக்குனர் ஆனந்தன், நடிகர் விஷாலை வைத்து சக்ரா என்ற பெயரில் திரைப்படமாக எடுத்துள்ளார். வெளியீட்டுக்குத் தயாராக உள்ள இந்த திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
சக்ரா திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். எங்கள் நிறுவனத்துக்கு தர வேண்டிய ரூ.8.29 கோடியை திரும்பத் தராமல் சக்ரா திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
மேலும் தங்கள் நிறுவனத்திடம் சொன்ன கதையை வைத்து வேறு நபருக்கு படமெடுத்த ஆனந்தனுக்கு தடை விதிக்கவும், உத்தரவாத தொகையாக ஒரு கோடி ரூபாயை செலுத்த உத்தரவிட வேண்டும் என மற்றொரு வழக்கையும் தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது டிரைடெண்ட் ஆர்டஸ் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் விஜயன் சுப்ரமணியன், ஓடிடி தளத்தில் படம் வெளியாக இருப்பதால் குறுகிய காலத்தில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து வழக்குகள் குறித்து வரும் செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் நடிகர் விஷால், இயக்குனர் ஆனந்தன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...