
கோவை: தமிழறிஞரும்,எழுத்தாளருமான கோவை ஞானி(86) முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலமானார்.
கோவை ஞானி என்று அழைக்கப்படும் கி. பழனிச்சாமி (86) ஒரு தமிழாசிரியர். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தீவிர தமிழிலக்கியச் சிந்தனையாளர், கோட்பாட்டாளர் மற்றும் திறனாய்வாளராக இயங்கி வந்தார்.
கோவை வட்டாரத்தில் 1935 இல் பிறந்து கிராமச் சூழலில் வளர்ந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியம் கற்றவர். கோவையில் தமிழாசிரியராக 30 ஆண்டுகள் பணியாற்றியவர். மார்க்சிய நெறியில் தமிழிலக்கிய ஆய்வில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வந்தார். தமிழ் மரபையும் மார்க்சியத்தையும் இணைத்ததன் மூலம் தமிழ் மார்க்சியத்தை படைத்துள்ளார்.
கோவை ஞானி கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக 28 திறனாய்வு நூல்கள், 11 தொகுப்பு நூல்கள், 5 கட்டுரைத் தொகுதிகள், 3 கவிதை நூல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளதோடு தொகுப்பாசிரியராகவும் பல நூல்களை வெளியிட்டிருக்கிறார்.
தமிழ்ப் பணிக்காக புதுமைப்பித்தன் ‘விளக்கு விருது’ (1998), கனடா–தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது (2010), எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய ‘பரிதிமாற் கலைஞர்’ விருது (2013) முதலிய பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவடைந்திருந்தார். இந்நிலையில் கோவை வெள்ளக்கிணறு பிரிவு பகுதியில் உள்ள இல்லத்தில் புதன்கிழமை அவர் காலமானார். இவரது மனைவி இந்திராணி ஏற்கெனவே காலமாகிவிட்டார். இவர்களுக்கு பாரி, மாதவன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.