
மதுரையில் நவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.க.கருணாநிதியின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு இன்று பல அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது.
அதில் முக்கிய அறிவிப்பாக சென்னை அண்ணா நினைவு நூலகத்தைப் போல் மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில்,
சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் புத்தகங்கள் மீதும், புத்தகங்களை வாசிப்பதன் மீதும் கலைஞருக்கு வாழ்நாள் முழுவதும் இருந்த தீராப் பற்றினை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
இதன் வெளிப்பாடாகத்தான், 2010 ஆம் ஆண்டில், பேரறிஞர் அண்ணாவின் 102-வது பிறந்தநாள் அன்று, சென்னை கோட்டூர்புரத்தில், ஆசியாவின் அதி நவீன மிகப் பெரிய நூலகம் எனப் போற்றப்படும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்தார்கள். மாணவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கியவாதிகள், போட்டித் தேர்வுகளுக்குத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் இளைஞர்கள், பள்ளிச் சிறார்கள் என சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அறிவொளி அளிக்கும் கலங்கரை விளக்கமாக இந்த நூலகம் விளங்கி வருகிறது என்று சொன்னால், அது மிகையாகாது.
தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களும், இத்தகைய அரியவாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, இரண்டு லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடியவகையில், மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில், கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.