பங்காரு அடிகளார் காலமானார்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளார் சற்று முன் இன்று (அக்.19) மாலை காலமானார்.
பங்காரு அடிகளார் காலமானார்


செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளார் சற்றுமுன் இன்று (அக்.19) மாலை காலமானார். அவருக்கு வயது 82.

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிது காலமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே மாரடைப்பு காரணமாக இன்று மாலை 5 மணியளவில் உயிரிழந்தார். 

ஆதிபராசக்தி தொண்டு நிறுவன மருத்துவக் கல்வி மற்றும் கலாசார அறக்கட்டளையின் தலைவராக பங்காரு அடிகளார் இருந்தார். மேல்மருத்துவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு வரும் பக்தர்களால் 'அம்மா' என்று அழைக்கப்பட்டார். 

பெண்கள் எந்த நாளிலும் கருவறைக்கு சென்று பூஜைகள் செய்யலாம் என்று
ஆன்மிகத்தில் புதுமையை ஏற்படுத்தியவர்  பங்காரு அடிகளார். அதோடு ஆன்மிகத்திலும் சீர்திருத்தங்களை செயல்படுத்தியுள்ளார். தென்னிந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் சக்தி வழிபாட்டு தலங்களை உருவாக்கியவர் பங்காரு அடிகளார். 15-க்கும் மேற்பட்ட நாடுகளில் பங்காரு அடிகளாரை பின்பற்றுபவர்கள் உள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஆன்மிக சேவையைப் பாராட்டி பங்காரு அடிகளாருக்கு 2019 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு சிறப்பித்துள்ளது. 

சக்தி பீடம்

1970ஆம் ஆண்டு பங்காரு அடிகளார் சக்தி பீடத்தை நிறுவினார். அப்போதுமுதல் பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லிவந்தார். ஆன்மிகத்துடன் சமுதாய தொண்டையும்  மேற்கொண்டவர்.

1978ஆம் ஆண்டு முதன்முறையாக காஞ்சிபுரத்தில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தைத் தொடக்கி வைத்தார். இன்றுவரை 2,500-க்கும் மேற்பட்ட வார வழிபாட்டு மன்றங்களும், 25-க்கும் மேற்பட்ட சக்தி பீடங்களும் மேல்மருவத்தூர் சித்தா் பீடத்துக்கு தொண்டாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

பங்காரு அடிகளார்

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் கிராமத்தில் 1941ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி கோபால நாயக்கர் - மீனாம்பாள் தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணி.

செங்கல்பட்டு பகுதியில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி மையத்தில் படித்து அச்சரப்பாக்கம் பகுதியில் ஆசிரியராக தனது பணியைத் தொடங்கினார்.

1966ஆம் ஆண்டு, ஒருநாள் பங்காரு அடிகளாரின் குடும்பத்தில் நடந்த விழா ஒன்றில் பங்காரு அடிகளாரை ஆதி பராசக்தி ஆட்கொண்டதாகவும், தீப ஆராதனை தட்டு ஒன்றை வளைத்து தனது சக்தியை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com