வடலூரில் மக்கள் போராட்டம் வெடிக்கும்: ராமதாஸ் எச்சரிக்கை

சத்திய ஞானசபை பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க அரசு முயன்றால் அதற்கு எதிராக மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாமக முன்னெடுக்கும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

வடலூரில் வள்ளலார் பன்னாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டும் தமிழக அரசு முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், எதிர்ப்பை மீறி சத்திய ஞானசபை பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க அரசு முயன்றால் அதற்கு எதிராக மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாமக முன்னெடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞானசபையின் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைப்பதற்கு பக்தர்களும், சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதைப் புறக்கணித்து விட்டு, வள்ளலார் பன்னாட்டு மையத்திற்கு சனிக்கிழமை (பிப். 17) அடிக்கல் நாட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வள்ளலாரின் கொள்கைக்கும், மக்களின் விருப்பத்திற்கும் மதிப்பளிக்காமல் தமிழக அரசு செயல்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

வடலூர் சத்தியஞான சபையில் பெருவெளி அமைக்கப்பட்டு 157 ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஒன்றரை நூற்றாண்டு காலத்தில் அங்கு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பெருவெளி அமைக்கப்பட்ட நாளில் இருந்து 7 ஆண்டுகள் வள்ளலார் உயிருடன் வாழ்ந்தார். அப்போது பெருவெளியில் கட்டடங்களைக் கட்டலாம் என்றும், வேளாண்மை செய்யலாம் என்றும் யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், அவற்றை ஏற்க வள்ளலார் மறுத்து விட்டார். அதற்காக அவர் கூறிய காரணம், இன்னும் பல பத்தாண்டுகள் கழித்து தீபத்தின் ஒளியைக் காண பல லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள்; அதற்கு வசதியாக பெருவெளி அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும் என்பது தான். அவர் கூறியதைப் போலவே சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் ஒளி தீபத்தை காண்பதற்காக 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான பக்தர்கள் கூடினர். பெருவெளியின் தேவை 15 நாட்களுக்கு முன்பு கூட நிரூபிக்கப்பட்ட நிலையில், அதை உணராமல் அங்கு பன்னாட்டு மையத்தை கட்டி பெருவெளியை சிதைக்கத் துடிப்பதை அனுமதிக்க முடியாது.

கோப்புப்படம்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரடி மாற்றம்!

சத்திய ஞானசபையிலிருந்து 3 கி.மீ சுற்றளவில் வள்ளலார் பிறந்த மருதூர், அவர் தங்கியிருந்து நிர்வாகம் செய்த கருங்குழி, அவர் சித்தி அடைந்த மேட்டுக்குப்பம் ஆகியவை உள்ளன. அந்த பகுதிகளில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைப்பது தான் சரியானதாக இருக்கும். அதற்கு மாறாக, பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கப்பட்டால், அது அவருக்கு இழைக்கப்படும் அவமதிப்பாகவே கருதப்படும்.

எனவே, வடலூர் பெருவெளியில் பன்னாட்டு மையத்தை அமைக்கும் முடிவை கைவிட்டு, சத்திய ஞானசபைக்கு எதிரில் நிலக்கரி சுரங்கம் இருந்து மூடப்பட்ட நிலம், கடலூர் சாலை, கும்பகோணம் சாலை, சேத்தியாத் தோப்பு சாலை, விருத்தாசலம் சாலை ஆகியவற்றில் ஏதேனும் ஓரிடத்தில் மையத்தை அமைக்க வேண்டும்; அதுகுறித்து முடிவெடுக்கப்படும் வரை அடிக்கல் நாட்டுவதை ஒத்தி வைக்க வேண்டும்.

அதற்கு மாறாக, வடலூர் சத்திய ஞானசபை பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க அரசு முயன்றால் அதற்கு எதிராக மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பாமக முன்னெடுக்கும் என்று அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com