கணவனின் தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டு கொன்ற மனைவி! மீண்டுமொரு டாஸ்மாக் அவலம்!

சிறை சென்ற துரைராஜ் மீண்டும் விடுதலையாகி, வீடு திரும்பிய போது மகளுக்குத் திருமணமானது தெரிந்து கோபமாகி, தன் விருப்பத்துக்கு மாறாகத் திருமணம் செய்து கொண்டமைக்காக, மகள் பவித்ராவை மூர்க்கமாகத் தாக்கி 
கணவனின் தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டு கொன்ற மனைவி! மீண்டுமொரு டாஸ்மாக் அவலம்!
Published on
Updated on
2 min read

சென்னை மணலியைச் சேர்ந்த 45 வயது துரைராஜ், அடிக்கடி சிறு, சிறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு சிறை செல்வது வாடிக்கை! துரைராஜுக்கு மஞ்சுளா என்ற மனைவியும், பவித்ரா என்ற மகளும் இருக்கிறார்கள். தீராத குடிப்பழக்கம் இருந்ததால், குடிப்பதற்கு பணம் கிடைக்காத போது தன் மனைவி, மகளை அடித்து அவர்கள் வீட்டுச் செலவுக்கு வைத்திருக்கும் பணத்தையும் துரைராஜ் பிடுங்கிச் செல்வது வழக்கம்.

அவர்களிடமும் பணம் பெயராது போனால், திருட்டு, வழிப்பறி, தகராறு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதாகி சிறை செல்வார் துரைராஜ். வாழ்க்கை இப்படியே தொடர்வது துரைராஜின் மனைவி மஞ்சுளாவுக்கு பெரும் வேதனையாக இருந்தது. மஞ்சுளா, தன் மகள் பவித்ராவின் எதிர்கால நலனுக்காகவும், மகளுக்குத் திருமணம் நடத்த வேண்டியும் ஒரு சிறு தொகையை சேமித்து வந்துள்ளார். ஆனால் துரைராஜுக்கோ மகளுக்கு திருமணம் செய்யும் எண்ணமே இல்லை. சில மாதங்களுக்கு முன் துரைராஜ், தன் மனைவி சேமித்து வைத்துள்ள அந்த சொற்பத் தொகையையும் குடிப்பதற்காகத் தருமாறு கேட்டு சண்டையிட்டிருக்கிறார். மஞ்சுளா மறுக்கவே, சண்டை முற்றி, துரைராஜ், மஞ்சுளாவை பிளேடால் கீறி இருக்கிறார். கணவனின் அடாத செயலால் மனமுடைந்த மஞ்சுளா, உடனடியாக அப்போது அருகிலிருந்த காவல்நிலையத்தில் புகாரளிக்கவே, துரைராஜ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார். 

கணவன் சிறையிலிருந்த காலகட்டத்தில், தன்னிடமிருந்த தொகை கொண்டு மகள் பவித்ராவுக்கும், ஏ.சி மெக்கானிக்கான ஸ்டீஃபனுக்கும் திருமணத்தை நடத்தி முடித்தார் மஞ்சுளா. சிறை சென்ற துரைராஜ் மீண்டும் விடுதலையாகி, வீடு திரும்பிய போது மகளுக்குத் திருமணமானது தெரிந்து கோபமாகி, தன் விருப்பத்துக்கு மாறாகத் திருமணம் செய்து கொண்டமைக்காக, மகள் பவித்ராவை மூர்க்கமாகத் தாக்கி இருக்கிறார். அப்போது மஞ்சுளா வீட்டில் இல்லை.

ஆவடிக்குச் சென்றிருந்த மஞ்சுளா வீடு திரும்பிய போது, நடந்த விவரங்களைக் கேள்விப் பட்டு மிகுந்த ஆத்திரத்துக்குள்ளானார். அன்றிரவு, கணவன் மீதான உச்ச பட்ச கோபத்திலும், ஆத்திரத்திலும் உழன்று கொண்டிருந்த மஞ்சுளா, கணவன் தூங்கிய பின் அவரது தலையில் பெரிய பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டு கொன்று விட்டு... அருகிலிருந்த காவல்நிலையத்தில் சரண்டர் ஆனார்.

தமிழகத்தில்... குடிபோதைக்கு ஆட்பட்டு குடும்பப் பொறுப்பற்றுத் திரியும் ஆண்களிடையே நிகழும் எண்ணற்ற கொலைகளில் இதுவும் ஒன்றாகி இருக்கிறது இப்போது.

குடி போதையால் மனைவி மற்றும் பிள்ளைகளிடம் மிருகத்தனமாக நடந்து கொள்ளும் துரைராஜ் போன்ற குடிகாரர்களுக்கான மரணம் இப்படித்தான் அமைய வேண்டும் என்பது விதியோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com