எலியைக் கட்டி வைத்து குரூரமாகப் பலி வாங்கிய மனிதன்! விலங்கிட வருமா விலங்குகள் நல வாரியம்?!

அந்த வீடியோவைப் பார்த்தவர்கள் அனைவரும் ராமண்ணாவை வசைபாடிக் கொண்டிருக்கின்றனர் ‘இப்படியா வாயில்லாத ஒரு அப்பாவி ஜீவனை வதைப்பது?! துளியும் மனிதாபிமானமற்ற செயல்.’
எலியைக் கட்டி வைத்து குரூரமாகப் பலி வாங்கிய மனிதன்! விலங்கிட வருமா விலங்குகள் நல வாரியம்?!

மளிகைக் கடைகளில் எலிகள் நடமாடுவது சகஜமான விஷயம். பழைய நாட்களில், சில புத்திசாலி மளிகைக் கடைக்காரர்கள் கடைகளில் முன்னெச்சரிக்கையாக பூனையையும் சேர்த்து வளர்த்து வருவதைப் பலருக்கும் பார்க்க வாய்த்திருக்கலாம். ஆனால் இன்றெல்லம், எந்த மளிகைக் கடைகளிலும் பூனைகளைக் காண முடியவில்லை. ஆனால் எலிகளாலான தொல்லைகளுக்கு மாத்திரம் எந்தக் காலத்திலும் எந்தக்குறையும் இருப்பதில்லை. சுண்டெலிகள் முதல் பெருச்சாளிகள் வரை போஷாக்குடன் வளர பெரும்பாலும் மளிகைக் கடைகள் நிறைந்த அங்காடித்தெருக்கள் தான் உதவுகின்றன. இதனால் எலிகளுக்கும் கடை உரிமையாளர்களுக்குமான பந்தம் எப்போதுமே ஜென்மப் பகையே!

பூனைகள் கூட சில நேரங்களில் எலிகளை மன்னித்து விடக்கூடும், ஆனால் இந்த மளிகைக்கடை எஜமானர்கள் இருக்கிறார்களே அவர்களுக்கு எலிகள் தான் ஜென்ம வைரிகள். கடைகளிலுள்ள எலிகளை ஒழிக்க எல்லோரும் என்ன செய்வார்கள்? எலிவலைகளை வாங்கி வைப்பார்கள், மருந்து உருண்டைகள் வாங்கி இரவுகளில் கடைகளுக்குள் போட்டு வைப்பார்கள். இவற்றில் அகப்படும் எலிகள் சாவது உறுதி. இவையெல்லாம் எலிகள் ஒழிப்பில் மக்கள் ஏற்றுக்கொள்ளும்படியான வழிமுறைகள்.

ஆனால், இதே எலித்தொல்லை விஷயத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மைசூரில் நடந்த ஒரு சம்பவம் பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

மைசூரில் மளிகைக்கடை வைத்திருக்கும் ராமண்ணாவுக்கு தன் கடையிலுள்ள பருப்பு வகைகள் மற்றும் மளிகைப் பொருட்களை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக துவம்ஸம் செய்துவரும் எலியார் மீது பல நாட்களாகவே  மகாக்கோபம் இருந்திருக்கிறது. ஆனால், எலியாருக்கு என்ன நல்ல நேரமோ,. பல நாட்களாக அவர் ராமண்ணாவின் கையில் அகப்படாமல் கடைக்குள் எவருக்கும் அடங்காத கோயில் எலியாகவோ, அல்லது ராஜா வீட்டு ராஜ எலியாகவோ சுற்றித் திரிந்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் தனது கடைப்பொருட்கள் எலியாரால் வீணாகிக் கொண்டிருப்பதைக் கண்டு மனம் பொருமிக் கொண்டிருந்த ராமண்ணாவுக்கு வகையாகக் கிடைத்தது ஒரு வாய்ப்பு. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற கணக்கில் எலியார், கடந்த வாரத்தில் ஒரு நாள் ராமண்ணாவிடம் சிக்கிக் கொண்டார். சிக்கிய எலியாரை ராமண்ணா, அப்படியே கொன்று யாருக்கும் தெரியாமல் தூக்கிப் போட்டிருந்தால் இன்றைக்கு இந்தியா முழுவதும் செய்திகளில் இடம்பிடித்திருக்க மாட்டார். எலியாரின் மேலிருந்த பகையில் ராமண்ணா செய்த விஷமத்தனமான தாக்குதல் தான் இப்போது அவர் மீதான கண்டனமாகக் குவிந்து கொண்டிருக்கிறது.

தன்னிடம் சிக்கிய எலியின் கால்களை ராமண்ணா ரப்பர் பேண்டால் கட்டி ஒரு ஜாருக்குள் சிறை வைத்து அவ்வப்போது குச்சியால் அடித்து, இனிமேல் என் கடைக்குள் வருவாயா? இனிமேல் என் கடையிலுள்ள கடலைப் பருப்பை தின்பாயா? கோதுமையைத் தின்பாயா? என்றெல்லாம் கேட்டு அடிப்பதை ஒரு ஹாபியாகச் செய்து வந்ததோடு, தன் செயலை வேடிக்கை பார்க்க நண்பர்களையும் அழைத்து வந்திருக்கிறார். அப்படி வந்த நண்பர்களில் ஒருவர் அந்தக் காட்சியை தனது அலைபேசியில் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட இன்று அந்த வீடியோ விலங்குகள் நல வாரிய உறுப்பினர் ஒருவரது கையில் சிக்கி இந்தியா முழுக்க டிரெண்ட் அடித்திருக்கிறது.

அந்த வீடியோவைப் பார்த்தவர்கள் அனைவரும் ராமண்ணாவை வசைபாடிக் கொண்டிருக்கின்றனர் ‘இப்படியா வாயில்லாத ஒரு அப்பாவி ஜீவனை வதைப்பது?! துளியும் மனிதாபிமானமற்ற செயல்.’ எலியைக் கட்டி வைத்து பலி வாங்குவதெல்லாம் முற்றிலும் மனிதத் தன்மையற்ற செயல், மனநோயாளிகள் தான் இப்படியெல்லா செய்வார்கள்!’ என்றெல்லாம்  கண்டனங்கள் வலுத்து வருகின்றன.’

32 வினாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோ காட்சியின் இறுதியில் அகஸ்மாத்தாக எலியைச் சிறை வைத்த ஜார் சரிந்ததில் உள்ளிருந்த எலி தப்பி விட்டது. ஆனால் காயங்களுடன் தப்பியுள்ள அந்த எலியின் தலையெழுத்தை எவர் அறிவர்?! அதற்கு இப்போது என்ன ஆகியிருக்கக் கூடுமென்று தெரியவில்லை. ஆனால் வீடியோவில் பின்னணியில் ஒலிக்கும் சிரிப்புக் குரல், அருமையான வீடியோ இதில் இசையையும் சேர்த்திருந்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும் என்கிறது.

இந்த வீடியோவைப் பார்வையிடக் கூடிய விலங்குகள் நல வாரிய உறுப்பினர்களை விடுங்கள் சாதாரண பொதுஜனங்களாலும் கூடத்தான் இத்தகைய வன்மங்களைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நாட்டில் எத்தனையோ விதமான மனநோயாளிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எளிய உயிர்கள் என்றால் அத்தனை உதாசீனமாகி விடுகிறது. எலி என்றால் மளிகைப் பொருட்களை உண்பது தான் அதன் வாழ்வியல் நீதி. அது இயற்கை அதற்குப் பணித்த வேலையை சரியாகத் தான் செய்திருக்கிறது. ஆனால் இங்கே மனிதன் தான் தன் வேலையை சாத்தான் தனமாகக் வெளிக்காட்டியிருக்கிறான். இம்மாதிரியான மனிதர்கள் தான் இந்தியாவின் தலையெழுத்தை உலகின் பார்வையில் மாற்றிப் பதிவிட்டுதலைகுனிய வைத்து விடுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com