ஆக்ராவுக்கு சுற்றுலா வந்த ஸ்விஸ் தம்பதி ரெளடிகளால் தாக்கப்பட்டு படுகாயம்!

இருவரும் நேற்று தாஜ்மஹலைப் பார்த்து விட்டு இன்று ஃபதேபூர் சிக்ரிக்கு வந்து சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது அடையாளம் தெரியாத நால்வர் எங்களைப் பின் தொடர்ந்தனர். எங்களது அனுமதியில்லாமல் அவர்க
ஆக்ராவுக்கு சுற்றுலா வந்த ஸ்விஸ் தம்பதி ரெளடிகளால் தாக்கப்பட்டு படுகாயம்!
Published on
Updated on
2 min read

கடந்த வாரம் இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்த இளம் ஸ்விஸ் தம்பதி இருவர் கடந்த ஞாயிறு அன்று ஃபதேபூர் சிக்ரியில் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நான்கு ரெளடிகளால் பின் தொடரப்பட்டு, கடுமையான தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, இந்த ஸ்விஸ் தம்பதிகள் ஃபதேபூர் சிக்ரிக்கு வருவதற்கு முன்பு சனிக்கிழைமை அன்று தாஜ்மஹாலுக்குச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

ரெளடிகளால் தாக்கப்பட்டதில் ஸ்விஸ் ஜோடிகளில் ஆண்,  குவாண்டன் ஜெரிமி  கிளெர்க்குக்கு தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதோடு காது கேட்கும் திறனும் கடுமையான பாதிப்புக்கு உட்பட்டுள்ளதாக அவரைச் சோதித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனது நண்பர் தாக்கப்பட்டதை அறிந்து அவரை காப்பாற்ற வந்த குவாண்டனின் ஸ்விஸ் தோழியும் ரெளடிகளின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். பின்பு அவரது கதறலைக் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்த மனிதர்கள் இவர்களது உதவிக்கு வரத் தொடங்கியதும்... தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடி இருக்கின்றனர். தப்பி ஓடியவர்களில் ஒருவன் மட்டும் பிடிபட்டுள்ளதாகவும் பிறர் காவல்துறையின் தேடுதல் வலையில் இருப்பதாகவும் ஆக்ரா காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கு சுற்றுலா வந்த நேரத்தில் தனக்கேற்பட்ட இந்த மோசமான விபத்தைப் பற்றிப் பேசுகையில் குவாண்டன் ஜெரிமி கூறியது; நாங்கள் இருவரும் நேற்று தாஜ்மஹலைப் பார்த்து விட்டு இன்று ஃபதேபூர் சிக்ரிக்கு வந்து சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது அடையாளம் தெரியாத நால்வர் எங்களைப் பின் தொடர்ந்தனர். எங்களது அனுமதியில்லாமல் அவர்கள் என்னையும், எனது தோழியையும் புகைப்படம் எடுக்கவும் முயன்றனர். அறிமுகமில்லாத அந்த நால்வரும் எங்களை வீண் சண்டைக்கு இழுக்கப் பலவாறு முயன்றனர்.  அவற்றைப் பொருட்படுத்தாமல் நாங்கள் எங்கள் வழியில் நடந்து வந்து கொண்டிருந்த போது தான் திடீரென என்னைத் தாக்கத் தொடங்கினர். எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த எனது தோழி சத்தம் கேட்டு எனக்கு உதவ ஓடி வர, அதைத் தொடர்ந்து நால்வரும், தங்களிடமிருந்த ஸ்டிக் போன்ற ஆயுதத்தால் என்னைக் கடுமையாகவே தாக்கத் தொடங்கி விட்டனர். இதனால் என் தலை உடைந்து கடுமையான காயம் ஏற்பட்டதோடு, எனது செவிகளின் கேட்கும் திறனும் இப்போது பாதியாகக் குறைந்து விட்டது. என்று கூறி இருக்கிறார்.

இந்தச் சம்பவம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கவனத்துக்கு வர, அவர் உடனடியாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் இச்சம்பவம் குறித்து முழு விளக்கம் தருமாறு முதல்வர் அலுவலகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

உலக நாடுகள் அனைத்தும் சுற்றுலாப் பயணிகளின் மனம் கவர்ந்து அதிக அளவில் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா மூலமாக வருமானம் ஈட்டும் முயற்சிகளில் மூழ்கி இருக்கையில் இந்தியாவில், குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் மிரட்சி கொள்ளும் வகையிலான இம்மாதிரியான தாக்குதல்கள் நிச்சயம் கண்டிக்கத்தக்கவை. 

ஸ்விஸ் சுற்றுலாத் தம்பதிகள் தாக்கப்பட்டதின் நிஜமான பின்னணி குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை. தற்போது சிகிச்சையில் இருக்கும் அவர்கள் தெரிவித்த வரையில், அவர்கள் ஏன் தாக்கப்பட்டார்கள்? என்பதற்கான காரணம் வலுவின்றியே இருக்கிறது. மேலதிக விவரங்கள் பின்னர் காவல்துறை விசாரணையில் தெரிய வரலாம்.

Image courtesy: ANI NEWS WEB

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com