காவிரி நீர் விவகாரத்தில் சிம்புவுக்கு இருக்கும் பக்குவம் கூட ரஜினி, கமலுக்கு இல்லையே!: கன்னட நடிகர் அனந்த் நாக்!

சிம்புவுக்கு இருக்கும் பக்குவம் கூட ரஜினி, கமலுக்கு இல்லையே!: கன்னட நடிகர் அனந்த் நாக்!
காவிரி நீர் விவகாரத்தில் சிம்புவுக்கு இருக்கும் பக்குவம் கூட ரஜினி, கமலுக்கு இல்லையே!: கன்னட நடிகர் அனந்த் நாக்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தும் தமிழ்த்திரையுலகைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் சென்னையில் கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி மெளனப் போராட்டம் நடத்தினர்.

தென்னிந்திய நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி அமைப்பினர் உள்ளிட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடக்கும் இந்த போராட்டத்தில் நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், சிவகார்த்திகேயன், சிவக்குமார், சூர்யா, செந்தில், பசுபதி, வையாபுரி, பிரசாந்த், மன்சூர் அலிகான், நடிகைகள் ஆர்த்தி, குட்டி பத்மினி, ரேகா, ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், டைரக்டர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தப் போராட்டத்தில் நடிகர் சிம்பு கலந்து கொள்ளவில்லை. ஆனால், அன்றே இவ்விவகாரம் குறித்து தனது கருத்துக்களைப் பதிவு செய்ய செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டிய சிம்பு, அதில்; நடிகர் சங்கம் நடத்தும் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளத் தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் அதனால் தான் அதில் கலந்து கொள்ளவில்லை எனவும் கூறியதோடு; காவிரி நீர் விவகாரத்தை அரசியல்வாதிகள் மக்களின் தீர்க்கப் பட வேண்டிய பிரச்னையாகக் கருதாமல் தாங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அரசியல் செய்வதற்கான ஒரு காரணமாக மட்டுமே பார்த்து பிரச்னையை சுமுகமான முறையில் தீர்த்து வைக்க மறுக்கிறார்கள். கர்நாடகத்தில் இருப்பவர்கள் யார்? நம்முடைய சகோதரர்கள்... அவர்களிடம் உங்களது தேவைக்குப் போக எஞ்சிய நீரை எங்களுக்குத் தாருங்கள் என்று கேட்டுப் பெறுவதில் என்ன தவறு இருக்க முடியும்? இதை இந்த அரசியல்வாதிகள் தங்களது பிழைப்புவாதமாக்கி தொடர்ந்து மக்களைத் தூண்டி விட்டு போராட்டம் நடத்திக் கொண்டே இருக்கிறார்களே... ஆனால் ஏன் அதற்கொரு முடிவு கிட்டவில்லை. இன்று காவிரி நீர் தர வேண்டும் என்று போராடுகிறோம், இங்கே 2015 ஆம் ஆண்டில் வெள்ளம் வந்து தெருவெங்கும் ஆறாகத் தண்ணீர் ஓடியதே... அந்தத் தண்ணீரைப் பாதுகாக்க நாம் என்ன ஏற்பாடுகளைச் செய்திருந்தோம்? ஏப்ரல் 11 ஆம் நாள் கர்நாடகாவில் உள்ள தாய்மார்கள் அனைவரும் தங்களது தமிழ் சகோதரர்களுக்கு 1 டம்ளர் தண்ணீர் கொடுத்து அதை சமூக ஊடகங்களில் பதிவு செய்யுங்கள். அந்தப் பதிவுகளில் என் பெயர் வேண்டாம். அது போதும் காவிரி நீர் தமிழகத்துக்கு வர அது உத்தரவாதமளிக்கும். இதற்காக நான் ஏன் எனது கன்னட சகோதரர்களுடன் சண்டையிட வேண்டும்?! என்று கேள்வி எழுப்பி இருந்தார்.’

நடிகர்களின் மெளனப் போராட்டம் மற்றும் சிம்புவின் பத்திரிகையாளர் சந்திப்பை ஒட்டி இதைக் குறித்து பிரபல கன்னட நடிகரான அனந்த் நாக் தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார்.

நடிகர்கள் ரஜினியும், கமலும் காவிரி நீர் விவகாரத்தை தங்களது அரசியல் பலத்தை நிர்ணயிக்கும் காரணியாகப் பார்க்கிறார்கள். கர்நாடகாவில் இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் வரவிருக்கிறது. அதனால் இங்கே பரபரப்பான சூழல் நிலவுகிறது. தமிழகத்துக்கு இப்போதைக்கு தேர்தல் வர வாய்ப்பில்லை எனும் போது அவர்கள் இந்தப் பிரச்னையை, போராட்டத்தை கர்நாடகத் தேர்தல் முடிந்தபின் துவக்கி இருக்கலாம். அவர்களது அரசியல் விளையாட்டுக்கு காவிரி விவகாரத்தை பகடைக் காயாக்கி குளிர் காய நினைக்கிறார்கள். இந்த விவகாரத்தில் இளம் நடிகரான சிம்புவுக்கு இருக்கும் பக்குவமும், மனமுதிர்ச்சியும் கூட மூத்த நடிகர்களான ரஜினி, கமலுக்கு இல்லை என நினைக்கையில் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. கர்நாடகா தன்னால் முடிந்த அளவு தண்ணீரை தமிழகத்துக்கு திறந்து விடட்டும் என சிம்பு கூறியிருந்தார். ஆனால் காவிரி விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கும் தமிழக அரசியல்வாதிகள் தான் பிரச்னையை சுமுகமாகத் தீர்ப்பதை விட்டு விட்டு எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தப் பிரச்னை தீர்வதில் விருப்பமில்லை. அவர்களுக்கு அரசியல் செய்ய காவிரி நீர்ப் பிரச்னை வேண்டும். காவிரி உற்பத்தியாவது கர்நாடகாவில் தான், ஆனால் அது வழிந்து கீழிறங்கும் இடத்தில் தமிழகம் இருப்பதால் கர்நாடகாவை விட தமிழகத்துக்கே அதிக நீர் கிடைக்கிறது. இயற்கையான இந்தக் காரணம் புரிந்து கொள்ளத்தக்கது. கன்னடர்கள் மிக நல்லவர்கள், அன்பானவர்கள், அவர்களது தாராளமனப்பான்மையைப் பற்றி தமிழ் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள மறுப்பதோடு அதை பாழாக்கவும் நினைக்கிறார்கள். அவர்களுக்கு அவர்களது பாணியிலேயே உரிய பதிலை அளித்தால் தான் அவர்கள் அமைதியாவார்கள். இல்லையேல் இப்படித்தான் புரியாமல் பிர்ச்னையைக் கிளறிக் கொண்டே இருப்பார்கள். என்றும் நடிகர் அனந்த் நாக் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Image courtesy: times of india.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com