ரஜினியும் மேதகு ஆளும்தரப்பும் கூறும் அந்த சமூக விரோதிகள் யார்? வாழ்வாதாரத்துக்காகப் போராடுவது சமூக விரோதமா?

சரி தான், ஆனால் தனது செய்தியாளர் சந்திப்பில் ரஜினி கூறும் அந்த சமூக விரோதிகள் யார்?
ரஜினியும் மேதகு ஆளும்தரப்பும் கூறும் அந்த சமூக விரோதிகள் யார்? வாழ்வாதாரத்துக்காகப் போராடுவது சமூக விரோதமா?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்டதால் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைக் காண இன்று ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார். அங்கே மருத்துவமனையில் துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டு ஆறுதல் கூறி விட்டு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். பேட்டியில் ரஜினிகாந்த் தெரிவித்தது;

‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமூக விரோத சக்திகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கியிருந்தார். இப்போது அவரது மறைவின் பின் அந்த சமூக விரோத சக்திகள் தங்களது விஷமத்தனத்தை மீண்டும் தொடங்கியுள்ளன. கடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் இவர்களது ஊடுருவலால் தான் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்திலும் இவர்களது ஊடுருவலால் அப்பாவி பொதுமக்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகியுள்ளனர். இத்தகைய சமூக விரோதிகளை அடையாளம் கண்டு உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். மக்கள் சக்தியை சமூக விரோத சக்திகளால் ஒன்றும் செய்ய முடியாது.. தமிழகத்தில் சமூக விரோத சக்திகள் அதிகமாகி விட்டனர். ஜெயலலிதா வழியில் தற்போதுள்ள தமிழக அரசும் இத்தகைய சமூக விரோத சக்திகளைத் தங்களது இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். சில போராட்டங்கள் சமூக விரோதிகளால் தூண்டப்படுகின்றன, அதற்காக பதவி விலக வேண்டும் என ஆளும் தரப்பை நிர்பந்திப்பது தீர்வாகாது. சமூக விரோத சக்திகளை அடையாளம் காணும் விஷயத்தில் மக்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று செய்தியாளர்களிடையே பேசிய ரஜினிகாந்த்;

காயமடைந்தவர்களை நேரில் சென்று விசாரித்து ஆறுதல் கூறியதோடு காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 10,000, உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூபாய் 2,00000 ம் தன் சார்பில் வழங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார். அதோடு, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டே ஆக வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். 

சரி தான், ஆனால் தனது செய்தியாளர் சந்திப்பில் ரஜினி கூறும் அந்த சமூக விரோதிகள் யார்?

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ஆலையைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டம் 100 நாட்களை எட்டியதை ஒட்டி கடந்த வாரம் போராட்டக் குழுவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இது போராட்டத்தின் போது அதில் கலந்து கொண்டிருந்த மக்களின் நேரடி அனுபவங்களாக இணையத்தில் பகிரப்பட்ட உண்மை. முற்றுகையிட்டிருந்த போராட்டக்காரர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி துப்பாக்குக் குண்டுகளால் துளைத்தது காவல்துறை. விளக்கம் கேட்டால் ரப்பர் குண்டுகள் ஸ்டாக் இல்லை என்று விளக்கமளித்திருந்தார்கள். துப்பாக்கிச் சூடு தொடர்பாக பொதுமக்களிடையே எண்ணற்ற விமர்சனங்கள் இன்னும் வலுத்து வரும் நிலையில் ஆளும் தரப்பும் சரி, ரசிகர்கள் போற்றிப் புகழும் சூப்பர் ஸ்டாரும் சரி துப்பாக்கிச் சூடு பற்றி கண்டிக்காமல் சமூக விரோதிகளால் தான் துப்பாக்கிச் சூடு நடந்தது என்று பேசிக் கொண்டிருப்பது மிக்க மன வருத்தம் தருவதாக இருக்கிறது.

துப்பாக்கிச் சூட்டில் பலியான குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்க விரும்பினால், அநியாயமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான மூலகாரணம் என்ன? மக்கள் போராட்டத்தில் ஊடுருவிய சமூக விரோதிகள் யார்? என்ற உண்மையை அவர்கள் பொதுமக்கள் முன் வைக்க வேண்டுமேயொழிய அவரவர் அரசியல் லாபங்களுக்காக ஊடகங்களில் பரபரப்புப் பேட்டிகள் அளிக்கத் தேவையில்லை. இது மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகவெ இருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது பொதுமக்களே எனும் போது, அவர்களில் சிலரின் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. அப்படியானால் சுடப்பட்டவர்கள் அனைவரும் தீவிரவாதிகளா? காயமடைந்தவர்கள் அனைவரும் சமூக விரோதிகளா? அவர்களைப் பார்த்து ஆறுதல் சொல்லத்தான் ரஜினி தூத்துக்குடி சென்றாரா? என்றெல்லாம் மக்கள் மத்தியில் கேள்விகள் எழத்தான் செய்யும்.

அரசு இந்த விஷயத்தில் ஒளிவுமறைவின்றி நடந்து கொண்டு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப் பட்டதற்கான நியாயமான காரணங்களை பொது மக்களிடையே முன் வைக்குமெனில் அப்போது தான் இந்தப் பிரச்னைக்கான நிரந்தரத் தீர்வு கிட்டும்.

இதற்கு நடுவே தற்போது தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என அறிவித்திருக்கிறது.

வெறும் பேச்சளவிலான இந்த அறிவிப்பு நிஜமாக சாத்தியம் இருந்தால் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 11 பேரின் ஆன்மா சாந்தியடையக் கூடும்.

ஆனாலும், அரசியல்வாதிகளின் இந்த ‘சமூக விரோதிகள் ஊடுருவல்’ என்ற பேச்சு பொதுமக்களிடையே ஒரு ஊவாமுள்ளாக நீடிக்கத்தான் செய்யும்.

சமூக விரோதிகள் என்பவர்கள் யார்? அவர்கள் எங்கனம் உருவாக்கப்படுகிறார்கள்? அதையும் அந்த மேதகு அரசியல்வாதிகள் விளக்கியுரைத்தால் ஒருபாடு தெளிவாக இருக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com