சோபியாவுக்கு தீவிரவாத ஸ்டிக்கர் ஒட்டுவது பாஜகவை விமர்சிப்பவர்களுக்கான பகிரங்க அச்சுறுத்தல்!

சோபியாவுக்கு தீவிரவாத ஸ்டிக்கர் ஒட்டுவது பாஜகவை விமர்சிப்பவர்களுக்கான பகிரங்க அச்சுறுத்தல்!

கடந்த காலங்களில் பாஜகவைச் சேர்ந்த பிரபலங்களான எஸ்.வி.சேகர் மற்றும் H.ராஜாவை கைது செய்யும் நிலை வந்த போது அந்நிலையை தவிர்த்து கடைசி வரை அவர்களைக் காப்பாற்ற முனைந்த மத்திய, மாநில அரசுகள் இப்போது ஆய்வு

தூத்துக்குடிக்குச் சென்ற விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜனுடன் பயணித்த ஆய்வு மாணவி லூயிஸ் சோபியா பாஜகவின் பாசிஸ ஆட்சி ஒழிக என்று கோஷமெழுப்பியதால் தமிழிசை கொந்தளித்துப் போனார். மாணவி சோபியா மீது தமிழிசை அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சோபியா பின்னர் அன்றே ஜாமினில் வெளி வந்தார்.

சோபியா குறித்த கூடுதல் விவரங்கள்...

தூத்துக்குடியைச் சேர்ந்த சோபியா, கனடாவின் மாண்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் கணிதப் பிரிவில் ஆய்வு மாணவி. தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்பதால் தன் சொந்த ஊரில் ஸ்டெர்லைட்டால் நிகழும் பயங்கரங்களைப் பற்றி நன்கு அறிந்தவரான சோபியா ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவு செய்து வந்தார். ‘தி பொலிஸ் புராஜெக்ட்’ என்ற இணையதளத்தில் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து பத்திரிகையாளர் என்ற பெயரில் பேட்டி அளித்துள்ளார் சோபியா. மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கைதுக்கு எதிரான தமது கருத்துக்களை சமூக வலைத்தளத்தில்  பதிவு செய்திருந்தார் சோபியா. இதே போன்று சில மாதங்களுக்கு முன் குண்டர் சட்டத்தில் கைதான மற்றொரு சமூக ஆர்வலரான மாணவி வளர்மதிக்கு ஆதரவாகவும் சமூக வலைத்தளங்களில் தனது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார் சோபியா.

சோபியாவின் தந்தை அப்பாசாமி ஓய்வு பெற்ற அரசு மருத்துவர். தாய் மனோகரி தலைமை செவிலியராகப் பணியாற்றி வருகிறார்.

சோபியா கைது குறித்து ட்விட்டரில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினார்கள். அதில் ;

கைது நடவடிக்கை...  

  • தவறான முன்னுதாரணம் என 12 % பேரும். 
  • சரியான நடவடிக்கை என 15% பேரும்
  • தேவையற்ற சர்ச்சை என 21 % பேரும்
  • கருத்து உரிமைப் பறிப்பு என 52 % பேரும்

தங்களது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தனர்.

மாணவி சோபியா கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஸ்டாலின்,

‘ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்! அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை லட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கின்றேன்! பாஜகவின் பாசிச ஆட்சி ஒழிக!

- எனத் தமது கருத்தைப் பதிவு  செய்திருந்தார்.

விமானத்தில் நடந்த விஷயங்களைப் பிறகு செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்ட தமிழிசை ‘ஸ்டாலினின் கண்டனம்’ குறித்துப் பேசுகையில். ‘ சக பெண் அரசியல் தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் நேரும் வகையிலும், அவர் சார்ந்த கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையிலும்  ஒரு இளம்பெண் மோசமான கருத்துக்களைப் பேசி அதற்காக கைது செய்யப்பட்டால் அதை ஆதரிப்பதை விடுத்து சக பெண் தலைவரை ஏளனம் செய்யும் விதத்தில் இப்படியா கருத்துத் தெரிவிப்பது? கலைஞர் இருந்திருந்தால் நிச்சயம் இப்படி ஒரு பக்குவமற்ற கருத்தை பதிவு செய்திருக்கவே மாட்டார். ஏன் அண்ணன் ஸ்டாலின் என்னைப் போல விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தாலும் கூட அதற்கான முதல் கண்டனக் குரல் எழுப்பக்கூடியவளாக நான் இருந்திருப்பேன்.’ என்று தனது கருத்தைப் பதிவு செய்திருந்தார் தமிழிசை.

ஆனால், பொதுமக்கள் கருத்துக் கணிப்பில் தெரிய வந்த செய்தி, மாணவி சோபியா விஷயத்தில் தமிழக பாஜக தலைவரான தமிழிசை நடந்து கொண்ட விதம் தான் பக்குவமற்றதாக இருந்ததாகப் பதிவாகியிருக்கிறது. ஏனெனில், விமானத்திற்குள் நடைபெற்ற இந்த கருத்து மோதல் குறித்து இருவரும் பயணித்த விமான நிறுவனம் இதுவரை எவ்வித புகாரும் எழுப்பியிருப்பதாகத் தெரியவில்லை. தமிழிசை தான் பாஜக குறித்த சோபியாவின் காட்டமான விமர்சனத்தைத் தாங்க இயலாது விமானத்திற்குள் அமைதியாக இருந்து விட்டு விமானத்தை விட்டு இறங்கிய பின் விமான நிலைய வளாகத்திற்குள் திரண்டிருந்த தமது ஆதரவாளர்களைக் கண்டதும் மாணவியைப் பயமுறுத்தும் நோக்கிலும், தம் மீதும் தமது கட்சியின் மீதும் வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்களுக்காக பழிவாங்கும் நோக்கிலும் மாணவி சோபியா மீது அவர் உபயோகிக்காத ஒரு வார்த்தையைப் பயன்படுத்தி பாஜக ஆட்சியை விமர்சித்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு பெண் தலைவர்... தமது அரசியல் முதிர்ச்சியைக் காட்டும் விதமாக இந்த விவகாரத்தை அப்படியே நிராகரித்திருக்கலாம் அல்லது அன்னை மனதோடு அந்தப் பெண்ணை அழைத்து தன் தரப்பு வாதத்தைப் புரிய வைத்திருக்கலாம். இரண்டுக்குமே வாய்ப்பில்லை என்றால் பிற அரசியல் தலைவர்கள் செய்வதைப் போல இளம் மாணவியின் பக்குவமற்ற விமர்சனம் எனக்கருதி சோபியாவின் விமர்சனத்தைப் பொருட்படுத்தாமல் இந்த விவகாரத்தை சிரித்துக் கொண்டே கடந்திருக்கலாம். அதையெல்லாம் செய்யாமல் தன் மீதும், தான் சார்ந்திருக்கும் கட்சியின் மீதும் விமர்சனம் என்ற பெயரில் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகப்படுத்தியதற்கு பழி வாங்கும் நோக்கில் மனமறிந்தே அந்த மாணவியின் செயலுக்கு தீவிரவாத முலாம் பூச வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள் தமிழகத்தின் அனுபவம் வாய்ந்த பிற அரசியல் கட்சித் தலைவர்கள்.

இவ்விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்ரமணிய சுவாமி வெளியிட்டுள்ள கருத்தைப் பாருங்கள்...

“அந்தப் பெண்மணி யார் என்பது பற்றி விசாரிக்க வேண்டும். அவர் கனடாவைச் சேர்ந்தவராக இருந்தால் அவர், விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஏனென்றால், கனடாவில் இருக்கும் பல தமிழர்கள் விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பாஜகவை வசை பாட பாசிஸ்ட் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். பாஜக ஒரு இந்து கட்சி. இந்துக்கள் தான் பரந்த மனப்பான்மையுடையவர்கள். அவர்களால் பாசிச மனப்பான்மையுடன் இருக்க முடியாது. அந்தப் பெண் விமானத்தில் கோஷமிட்டது விதிமீறலாகும்.எனவே அவரது கைது நியாயமானதுதான்” என்று கூறியுள்ளார்.

தமிழிசைக்கு எதிரான இயக்குனர் பாரதிராஜாவின் கண்டனம்...

’சோபியா பா.ஜ.கவுக்கு  எதிராக கோஷமிட்டார்  என்றால்  அவரை அழைத்துப் பேசி, அவர் தரப்பு பிரச்சனைகளை  கேட்டு, அவரை  சமாதானம் செய்து அவருக்கு  தேவையான உரிய  விளக்கங்களை பா.ஜ.க மாநிலத்தலைவர் தமிழிசை சொளந்தராஜன் கொடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவர்  மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தது என்பது அநாகீரிகமான செயல்’
- என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சோபியாவுக்கு தூத்துக்குடி நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்ய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு வழக்கறிஞர் சண்முக சுந்தரம் தெரிவித்திருந்தார்.

சோபியா விவகாரம் குறித்து இப்போதும் நீறு பூத்த நெருப்பாக கனல் அணையாமலிருக்கையில் பாதுகாப்பு வேண்டி சோபியா தரப்பில் இருந்து கோரிக்கை வந்தால், பாதுகாப்பு வழங்க தயார் - என தூத்துக்குடி எஸ்பி முரளி ரம்பா அறிவித்திருப்பதாக தந்தி தொலைக்காட்சியின் ட்விட்டர் தளத்தில் செய்தித் துணுக்கொன்றைக் காண நேரிட்டது.

இந்நிலையில் சோபியா விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்னவென ஆராய்ந்தால், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து காணக் கிடைக்கிறது. அஃதாவது, ஜனநாயக ரீதியில் யார் வேண்டுமானாலும் போராட்டம் நடத்தலாம், கருத்து சுதந்திரம் உள்ளது என்பதால், விமானத்திற்குள் சோபியா கோஷமிடலாமா? என்றும், விளம்பரத்திற்காக இது போன்று பலர் இப்போது செய்து வருகின்றனர் என்றும் பதில் சொல்லி முடித்திருக்கிறார்.

சோபியா விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்,

‘பொது இடங்களில் குரல் எழுப்புவதும்,விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப்பட வேண்டிய குற்றவாளிகளே’

- என கூறியிருக்கிறார். தாமும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே இதைச் சொல்வதாக குறிப்பிட்டிருக்கிறார்.

சோபியா விவகாரத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி இன்றி தள்ளி நின்று நடுநிலையான மனதுடன் அணுகினால், இதை தமிழிசையால் அரசியல் முதிர்ச்சியுடன் அணுகியிருக்க முடியும். தமிழிசை தமது சொந்த மனக்குமுறலில் யோசிக்காமல் எதிர்வினையாற்றி உள்ளூரில் முடிந்திருக்க வேண்டிய விவகாரத்தைப் பெரிதாக்கி இன்று சோபியாவை சர்வதேச பிரபலமாக்கியதோடு பாஜக குறித்த வெறுப்புணர்வு மக்களிடையே மென்மேலும் அதிகரிக்க வித்திட்டு விட்டார் என்பதாகவே பொதுமக்களிடையே கருத்துகள் வலுத்து வருகின்றன.

கடந்த காலங்களில் பாஜகவைச் சேர்ந்த பிரபலங்களான எஸ்.வி.சேகர் மற்றும் H.ராஜாவை கைது செய்யும் நிலை வந்த போது அந்நிலையை தவிர்த்து கடைசி வரை அவர்களைக் காப்பாற்ற முனைந்த மத்திய, மாநில அரசுகள் இப்போது ஆய்வு மாணவி என்றும் கருதாமல் சோபியாவை உடனடியாகக் கைது செய்ய உத்தரவிட்டது எங்கனம்? கருத்துச் சுதந்திரத்துக்கான அப்பட்டமான மிரட்டல் இது. இது பாஜகவின் தோல்வி பயத்தையே காட்டுகிறது’ என்று பாஜக ஆட்சி மீதான விமர்சன நிலைப்பாடு கொண்ட அனைத்துத் தரப்பினரும் கருதி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com