அக்டோபர் முதல் ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபால் விருப்பம் கொண்டவர்கள் ரத்த தானம் வழங்க முடியாது!

ரத்த சேகரிப்பாளர்களுக்கு இந்தப் புதிய கேள்விகள் நிறைந்த வழிகாட்டு நெறிமுறைகளை ரத்ததானம் வழங்க ஆர்வத்துடன் முன்வருபவர்களிடம் கேட்டுப் பெறுவது சற்று சிரமமான காரியம் தான்.
அக்டோபர் முதல் ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபால் விருப்பம் கொண்டவர்கள் ரத்த தானம் வழங்க முடியாது!

மும்பையில் உள்ள ரத்த வங்கிகளுக்கு தேசிய இரத்தப் பரிமாற்ற கவுன்சில் புதிதாக ஒரு சர்க்குலர் அனுப்பியிருப்பதாகத் தகவல். வரும் அக்டோபர் மாதம் முதல் தேசிய ரத்தப் பரிமாற்ற கவுன்சில் அதன் வழிகாட்டு நெறிமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்துள்ளது. திருத்தங்களில் முக்கியமானது, இனிவரும் காலங்களில் ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், பெண் பாலியல்க் தொழிலாளர்கள், இருபால் விருப்பம் கொண்டவர்கள் உள்ளிட்டோரால் எச்.ஐ.வி மற்றும் ஹெபாட்டிடிஸ் B மற்றும் C    நோய்த்தொற்று ஏற்பட அதிகபட்ச காரணங்கள் இருப்பதால் மேற்கண்டோரிடம் இருந்து ரத்ததானம் பெறவே கூடாது. அவர்கள் தங்களது ரத்தத்தை யாருக்கும் தானமாக வழங்கக் கூடாது. என்று அந்தப் பிரிவினரை ஒட்டுமொத்தமாக விலக்க வலியுறுத்துகிறதாம் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள்.

இந்தத் தடையானது ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு மட்டுமல்ல, எந்த ஒரு தனி நபரும் நாள்பட்ட நோய்த்தொற்றில் இருந்தாலும், கேன்சர், உடலுறுப்பு செயலிழப்பு, ஒவ்வாமை, சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உட்பட்டவராக இருந்தாலும் அத்தகையோரிடம் இருந்தும் ரத்த தானம் பெறத் தடை விதிக்கின்றன புதிய நெறிமுறைகள்.
 
மருத்துவமனைகளில் ரத்த தானம் பெறுவது மற்றும் அளிப்பதற்கென வடிவமைக்கப்பட்ட இந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பற்றி பேசுகையில் ரத்த வங்கிகளில் பணிபுரிவோர் தெரிவித்தது என்னவெனில், வளர்ந்த நாடுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய ரத்தப் பரிமாற்ற கவுன்சில் இப்படியோர் திருத்தத்தை வடிவமைத்திருப்பதாகவும், முந்தைய நெறிமுறைகளில் மேம்போக்காக மட்டுமே மலேரியா, எச். ஐ வி, எய்ட்ஸ் , மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்ததானம் வழங்கக் கூடாது என்று சில நிபந்தனைகள் இருந்ததாகவும் தற்போது மேலும் சில நிபந்தனைகளைச் சேர்த்து காலம் தோறும் மாறி வரும் மக்களின் வாழ்க்கைமுறைக்கு ஏற்ப புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

ரத்த சேகரிப்பாளர்களுக்கு இந்தப் புதிய கேள்விகள் நிறைந்த வழிகாட்டு நெறிமுறைகளை ரத்ததானம் வழங்க ஆர்வத்துடன் முன்வருபவர்களிடம் கேட்டுப் பெறுவது சற்று சிரமமான காரியம் தான். ஆனால், இந்தக் கேள்விகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தே ரத்ததானம் வழங்க வரும் கொடையாளர்களிடம், அவர்களது பாலியல் தேர்வு மற்றும் விருப்பங்களைப் பற்றியெல்லாம் கேள்வி எழுப்ப வேண்டியதாக இருக்கிறது. வளர்ந்த நாடுகளில் இந்தக் கேள்விகளை சம்மந்தப் பட்ட மக்கள் எளிதாக எதிர்கொள்கிறார்கள். இந்தியாவிலும் காலப்போக்கில் அது சாத்தியப்படலாம் என்கிறார் ரத்தப் பரிமாற்ற அலுவலர் ஒருவர்.

ரத்த வங்கி நடத்தும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களில் ஒருவர் இதைப்பற்றிப் பேசும் போது தெரிவித்தது என்னவென்றால், ‘இப்படியான நெறிமுறைகள் புகுத்தப்படுவதற்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் விஷயத்தில் வழங்கிய தீர்ப்பு காரணம் அல்ல. அது சட்ட ரீதியானது. ஆனால், ரத்ததானத்தைப் பொருத்தவரை... இது நடத்தை மாற்றங்களுடன் தொடர்புடையது. ரத்தப் பரிமாற்றத்தின் முக்கிய நோக்கம், தேவை இருக்கும் நோயாளிகளின் வாழ்வை நோயற்று ஆரோக்யமானவராக மாற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, மேலும் நோயில் தள்ளுவதாக இருக்கக் கூடாது என்பதே! எனவே மேற்கண்ட புதிய ரத்தப் பரிமாற்ற நெறிமுறைகளை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்’ - என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com