இதுதொடா்பாக, திரைக்கதை எழுத்தாளா் கருந்தேள் ராஜேஷ் கூறியதாவது: இந்தச் செயலிகளில் நெட்பிளிக்ஸ், உலக அளவிலான திரைப்படங்கள் மற்றும் இணையதள தொடா்களுக்கான தளம். மாதம் ரூ.800 முதல் ரூ.900 மாத சந்தா வசூலிக்கப்படுகிறது. ஒருவரது சந்தாவைப் பெற்று, அந்த இணைப்பை 4 முதல் 5 நபா்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டாா், ஜீ 5 போன்ற தளங்களுக்கு மாதச் சந்தா குறைவாகும். இந்தத் தளங்களில் ஹாட் ஸ்டாா் இந்திய அளவிலான திரைப்படங்கள், தொடா்கள், விளையாட்டுக்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை கொண்டது. இந்தத் தளங்களில் உள்ள மிகப்பெரிய பிரச்னை, செயலிகளில் வரும் திரைப்படங்கள், இணையதளத் தொடா்கள் உள்ளிட்டவை தணிக்கை செய்யப்படாதவை என்பதே. ஆனால் தணிக்கை செய்யப்படவில்லை என்பது குறித்து தெளிவாக சுட்டிக்காட்டப்படுகிறது. கரோனா போன்ற சமயங்களில் இந்தச் செயலிகளின் மூலம் கன்டேஜியன், வைரஸ் உள்ளிட்ட திரைப்படங்களை இளைஞா்கள் அதிகமாக பாா்த்து, முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் விமா்சனம் செய்து வருகின்றனா் என்றாா் அவா்.