விடியோ அழைப்பில் நிர்வாணமாக வரும் பெண்: ஆன்லைன் மோசடிகளில் சிக்கும் ஆண்கள்

ஆசையைத் தூண்டு, சிக்க வை, பணம் பறி - இவைதான் இந்த மோசடிக்காரர்களின் திட்டம்.
விடியோ அழைப்பில் நிர்வாணமாக வந்த பெண்: ஆன்லைன் மோசடிகளில் சிக்கும் ஆண்கள்
விடியோ அழைப்பில் நிர்வாணமாக வந்த பெண்: ஆன்லைன் மோசடிகளில் சிக்கும் ஆண்கள்

இரு ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது இது. நகரில் ஆண்களுக்குப் 'பாதுகாப்பு சேவை' வழங்குவதாகக் கூறிக்கொண்ட ஓர்  இணையதளத்திலிருந்து ஓர் தொடர்பு எண்ணைப் பெற்றார் ராஜு. முறைப்படி இணையதளத்தில் நுழைந்ததும் ஒரு விடியோ அழைப்பு வந்தது - மற்றொரு முனையில் நிர்வாணமாகக் காட்சி தந்த ஒரு பெண் பேசினார். தான் செய்வதைப் போலவே செய்யுமாறு ராஜுவிடம் குறிப்பிட்டார். ராஜுவும் அப்படியே செய்திருக்கிறார், தன்னையும் நிர்வாணமாக்கிக் கொண்டு.

விடியோ அழைப்பு துண்டிக்கப்பட்ட ஒருசில நிமிஷங்களில் அவருக்கு ஒரு விடியோ வந்தது, அதில் அவர் நிர்வாணமாகப் பேசிக்கொண்டிருந்த காட்சி இடம் பெற்றிருந்தது. கேட்ட பணத்தைத் தராவிட்டால் இந்த விடியோவை அவருடைய நண்பர்களுக்கெல்லாம் 'டேக்' செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுவிடுவோம் என்று மிரட்டத் தொடங்கியுள்ளனர்.

கேவலத்துக்குப் பயந்து ராஜுவும் பணம் கொடுக்கத் தொடங்கியுள்ளார். கடந்த இரு ஆண்டுகளில் சுமார் ரூ. 17 லட்சம் வரைக்கும் பணம் கொடுத்திருக்கிறார். இனியும் தாங்க முடியாது சாமி என்ற நிலைக்கு வந்ததும் அண்மையில் இணையதளக் குற்றப் பிரிவில் புகார் செய்துள்ளார்.

இந்தக் குறிப்பிட்ட இணையதளத்தின் மீது இதுபோன்ற ஏராளமான பணப்பறிப்பு புகார்கள் வந்திருப்பதாகச் சென்னை காவல்துறை அதிகாரியொருவர் குறிப்பிடுகிறார்.

ராஜு சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம் மட்டுமல்ல, சென்னை மாநகரில் பல ஆண்கள் இதுபோன்ற இணையதள - ஆன்லைன் மோசடிகளில் சிக்கிப் பணத்தையும் பெயர், புகழ், அமைதி எல்லாவற்றையும் இழந்துள்ளனர்.

ஆண்களின் ஆசையைத் தூண்டப் பல்வேறு விதம்விதமான நுட்பங்களைப் பயன்படுத்தும் இந்த மோசடிக் கும்பல், அவர்களிடமிருந்து தொடர்ச்சியாகப் பணம் கறக்கத் தொடங்கிவிடுகின்றன.

இதற்கு செந்தில் மற்றும் நவநீத் ஆகியோர்  நல்ல எடுத்துக்காட்டு:

செந்தில் திருமணமானவர், இரு குழந்தைகளும் இருக்கிறார்கள். ஓராண்டுக்கு முன் ஒரு 'டேட்டிங் ஆப்' மூலம் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் நிறைய செய்திகளைப் பரிமாறிக்கொண்டிருக்கின்றனர்.

'அந்தப் பெண் தொலைபேசியில் அழைத்து இனிக்க இனிக்கப் பேசியதும் மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார் செந்தில். வேறொரு ஊரில் வசிப்பதாகக் கூறிக்கொண்ட அந்தப் பெண், எப்போதெல்லாம் நேரில் சந்திக்கலாம் என்று செந்தில் கேட்டாலும் ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி கழற்றிவிட்டிருக்கிறார்' என்றார் அந்தக் காவல் அதிகாரி.

ஒரு நாள், செந்திலை அழைத்து, நிறைய பணப் பிரச்னை என்றும் உடனடியாகத் தனக்குப் பணம் தேவைப்படுவதாகவும் கேட்டிருக்கிறார். செந்திலும் சில மாதங்களில் ரூ. 2 லட்சம் வரைக்கும் அந்தப் பெண்ணுக்கு அனுப்பியுள்ளார். ஒரு நாள், செந்திலுடைய எண்ணை அந்தப் பெண், 'பிளாக்' செய்துவிட்ட விஷயம் தெரிந்தபோது, தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை உணர்ந்திருக்கிறார் செந்தில். பிறகென்ன, சென்னை இணையதள குற்றப் பிரிவில் புகார் செய்துள்ளார்.

நவநீத் கதை வேறு மாதிரி. சமூக ஊடகத்தில் ஒரு 'பெண்'ணின் பெயரிலிருந்த கணக்கிலிருந்து நட்பு வேண்டப்பட்டுள்ளது. இவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். தான் பிரிட்டனில் வசிப்பதாக அந்தப் 'பெண்' தெரிவித்துள்ளார். நிறைய செய்திகளை - மெசேஜ்களைப் பரிமாறிக்கொண்ட நிலையில், ஒரு மாதம் கழித்து நவநீத்தைப் பார்ப்பதற்காகத் தான் சென்னைக்கு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பிறகு சில நாள்கள் கழித்து, நவநீத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார் அந்தப் 'பெண்'. தன்னிடம் பணம் இல்லை என்றும் டிக்கெட், விசா, சுமைக் கட்டணம் மற்றும் வரிகளுக்கான தொகை எனப் பணம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். எல்லாவற்றுக்குமாகச் சேர்த்து, ரூ. 5 லட்சம் செலவிட்டிருக்கிறார் நவநீத்.

பணம் வேண்டும் என்று தொடர்ந்து அந்தப் பெண் கேட்கவே, சந்தேகம் நவநீத்துக்கு சந்தேகம் வந்திருக்கிறது. கடைசியாக, எரிச்சலுற்ற  நவநீத், விமான டிக்கெட்களின் புகைப்படங்களை அனுப்புமாறு அந்தப் பெண்ணைக் கேட்டிருக்கிறார். அதன் பிறகு அந்தப் பெண், தொடர்பில் வரவேயில்லை, சமூக ஊடகத்தில் அவருடைய கணக்கும் அகற்றப்பட்டுவிட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நவநீத், காவல்துறையில் புகார் செய்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவரும் ஒரு டாக்டரும் புகார் தந்திருக்கின்றனர்:

முகநூலில் பெண்களின் படங்கள், பெயரிலுள்ள ஐடியிலிருந்து நட்பு வேண்டி அழைப்பு வந்திருக்கிறது. ஏற்றுக்கொண்டவுடன் மெசேஜ்கள் அனுப்பிய அவர்கள், தொலைபேசி எண்களையும் பகிர்ந்துள்ளனர். பிறகு... ஆசையைத் தூண்ட வேண்டியதுதான், அப்படியே ராஜுவுக்கு நடந்த கதைதான், வாட்ஸ்ஆப் விடியோ காலில் சிக்கிக்கொண்டிருக்கின்றனர்.

இந்தக் கல்லூரி மாணவர், முகநூலில் அந்தப் பெண்ணை பிளாக் செய்துவிட்டார், எண்ணையும் பிளாக் செய்துவிட்டார். ஏமாந்துபோன மோசடி கும்பலோ, மாணவரின் 'ராஜு பாணி' விடியோவை, அவருடைய தாய் உள்பட அவருடைய முகநூல் நண்பர்களுக்குப் பகிர்ந்துவிட்டது.

இந்த பாணியில் ஏமாற்றப்பட்ட நிலையில் புகார் செய்ய  முன்வருகிறவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. நிறைய பேர் அசிங்கம் எனக் கருதி புகார் அளிக்கவே முன்வராமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

ஆசையைத் தூண்டு, சிக்க வை, பணம் பறி - இந்தக் குறிக்கோளுடன் இணையதள உலகில் வலம்வருவோரைக் கண்டு எச்சரிக்கையாக இருப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

[பெயர்கள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளன]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com