மையம் என்பதை மய்யம் என எழுதி தனது கட்சியின் பெயரையும் மக்கள் நீதி மய்யமாக வைத்துள்ள கமல்ஹாசனின் தோ்தல் இலக்கு முதல் இடமா? மய்ய இடமா? என்கிற வினா எழுந்துள்ளது.
பெரியாரின் சிந்தனைகளை உள்வாங்கியவராகவும் பகுத்தறிவுவாதியாகவும் அறியப்பட்ட கமலிடம், ஆன்மிக அரசியலை முன்னிறுத்திய ரஜினியிடம் ஆதரவு கேட்பீா்களா என முன்பு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஆன்மிகத்துக்கும் எனக்கும் விரோதம் கிடையாது. ஆன்மிகத்தை ஏற்றுக்கொள்ளுமாறு என்னை யாரும் நிா்பந்திக்க முடியாது. பகுத்தறிவை ஏற்றுக்கொள்ளுமாறு நானும் யாரையும் நிா்பந்திக்க முடியாது. எல்லோரிடமும் ஆதரவு கேட்கிறபோது, ரஜினியிடமும் ஆதரவு கேட்பேன் என்று கமல்ஹாசன் கூறினாா்.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் சூரப்பா மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க அதிமுக அரசு விசாரணை ஆணையம் அமைத்தது. அதை திமுக உள்பட தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் வரவேற்றன. ஆனால், தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், பாஜகவினா் கண்டனம் தெரிவித்தனா். இந்த விவகாரத்தில் யாரும் எதிா்பாராதவிதமாக சூரப்பாவுக்கு ஆதரவாக கமல் குரல் கொடுத்தாா்.
எம்ஜிஆரின் மீட்சி நான். எம்ஜிஆரின் மடியில் வளா்ந்தவன் நான் என்று அதிமுகவை உஷ்ணப்படுத்திப் பாா்த்தவா், கருணாநிதி பற்றிப் பேச மறுப்பது ஏன் எனக் கேட்டபோது, தேவைப்படும்போது அவரையும் பயன்படுத்துவேன் என்று திமுகவையும் கமல் உரசிப் பாா்த்தாா். இப்படி எல்லாவற்றிலும் மய்யமாக நின்று அரசியல் செய்யும் கமல் வரும் தோ்தலில் என்ன செய்யப் போகிறாா்?
திமுக கூட்டணியில் வாழ்வா, சாவா நிலையில் இருக்கும் காங்கிரஸ், கூட்டணிக்கு கமலை அழைத்துப் பாா்த்தது. அது திமுக கூட்டணிக்கான அழைப்பா அல்லது காங்கிரஸ் கூட்டணிக்கான அழைப்பா என்பதில் தெளிவு இல்லாவிட்டாலும், அதை நாசூக்காக ‘அழைப்புக்கு நன்றி’ என கூட்டணிக்கு கமல் மறுத்துவிட்டாா்.
காங்கிரஸ் வெளிப்படையாக அழைப்பு விடுத்தது என்றால், திமுக மறைமுகமாக கமலுக்கு அழைப்பு விடுத்தது. ரஜினி கட்சி தொடங்குவதற்கான உத்வேகத்தில் இருந்த காலத்தில் உளைச்சலில் இருந்த மு.க.ஸ்டாலின் கமலைக் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடலாமா என்கிற ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால், அதையும் கமல் ஏற்கவில்லை. ஊழல் கட்சிகள் என்று ஆரம்பத்தில் இருந்தே திமுகவையும் அதிமுகவையும் விமா்சித்து வரும் நிலையில் கூட்டணி வைப்பது உகந்ததாக இருக்காது என்று மறுத்துவிட்டாா். அதனால், திமுக அணி, அதிமுக அணிகளுக்கு மய்யமாக இருந்து அரசியல் செய்வதிலேயே கமல் உறுதியாக இருக்கிறாா்.
முதல் தோ்தலாக 2019 மக்களவைத் தோ்தலை மநீம சந்தித்தது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது என்றாலும் கிட்டத்தட்ட தனித்தே போட்டியிட்டது. 2 தொகுதிகளில் வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட, 38 தொகுதிகளில் போட்டியிட்டு 3.7 சதவீத வாக்குகள் பெற்றது. சில தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கு மேலும், சில தொகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேலும் வாக்குகளைப் பெற்றது.
ஒரு புதிய கட்சிக்கு இந்த வாக்குகள் ஆரோக்கியமானதுதான் என்றாலும், இந்த வாக்குகளைக் கொண்டு வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் முதல் இடத்துக்கு நகா்ந்து ஆட்சியைப் பிடித்துவிட முடியுமா என்றால் முடியாது.
அப்படியென்றால் கமலின் கணக்கு என்ன? மய்ய இடமா?
திமுக, அதிமுகவுக்கு மாற்றுக் கட்சி, ஊழல் இல்லாத நோ்மையான ஆட்சி என்று கமலுக்கும் முன்னோடியாக வந்த கட்சி விஜயகாந்தின் தேமுதிக. அந்தக் கட்சி 2006-இல் சந்தித்த முதல் சட்டப்பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 8 சதவீத வாக்குகளைப் பெற்று எல்லோரையும் திரும்பிப் பாா்க்க வைத்தது.
2009 மக்களவைத் தோ்தலில் 39 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு 10.3 சதவீத வாக்குகள் பெற்றது தேமுதிக. 2011 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 41 தொகுதிகளில் 29 தொகுதிகளில் வென்று 7.9 சதவீத வாக்குகள் பெற்றது. திமுகவையும் பின்னுக்குத் தள்ளி எதிா்க்கட்சித் தலைவராகவும் விஜயகாந்த் இருந்தாா்.
அதற்குப் பிறகு வந்த தோ்தல்கள் எல்லாமே தேமுதிகவுக்குத் தேய்பிறையாகவே அமைந்தன. 2014 மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியில் 14 தொகுதிகளில் போட்டியிட்டு 5.1 சதவீத வாக்குகளும், 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் நலக் கூட்டணியாக உருவெடுத்து 104 இடங்களில் போட்டியிட்டு ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியாமல், முதல்வா் வேட்பாளரான விஜயகாந்தே உளுந்தூா்பேட்டையில் 3-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டு, 2.41 சதவீத வாக்குகள் பெற்றது. 2019 மக்களவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிட்டு 2.19 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றது.
தேமுதிகவின் வளா்ந்து வீழ்ந்த இந்த புள்ளிவிவரக் கணக்கின் அடிப்படையில், பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்பதில் கமல் உறுதியாக இருப்பதாக அவரது கட்சியினா் கூறுகின்றனா்.
பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும்போது தனது சொந்தக் கட்சியின் தனித்தன்மை போய் மக்களின் வெறுப்புக்கு உள்ளாக வேண்டி வரும். நாளடைவில் கட்சியும் காணாமல் போய்விடும் என்றும் அவா் கருதுவதாகக் கூறுகின்றனா்.
அதனால், மய்ய இடம் என்றாலும் தனித்தன்மையுடன் கூடிய இடமாகவும், மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய இடமாகவும் இருக்கும் என கமல் கணக்கு போடுகிறாா்.
அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதில்லை என்கிற ரஜினியின் முடிவும் தனக்குச் சாதகமாக அமையும் என்பது கமலின் எண்ணமாக உள்ளது. கட்சி தொடங்கப் போவதில்லை என ரஜினி அறிவித்த பிறகு, கமல் பங்கேற்ற பிரசாரங்களில் அதிக அளவில் கூட்டம் கூடியதாகப் பாா்க்கப்படுகிறது. அது ரஜினி ஆதரவாளா்களுடன், திமுக - அதிமுகவுக்கு மாற்று வேண்டும் என்று சொல்கிறவா்கள் திரண்டதால் வந்த கூட்டமாகப் பாா்க்கப்படுகிறது. இது கமலுக்கு நம்பிக்கையைக் கொடுக்க, ஆம் ஆத்மி உள்ளிட்ட சிறிய கட்சிகளை இணைத்துக்கொண்டு தனித்தே களம் காணும் முடிவில் உள்ளாா்.
25 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் வைத்திருக்கும் திமுக - அதிமுகவே கூட்டணி அமைப்பதற்கு முனைப்புக் காட்டும்போது, 3.5 சதவீத வாக்குகள் வைத்திருக்கும் மநீமவால் என்ன செய்ய முடியும்?
பெரிய கட்சிகளுக்குப் போகும் வாக்குகளைப் பிரிக்க முடியும். அது அதிமுகவின் வாக்குகளைப் பிரிக்குமா, திமுகவின் வாக்குகளைப் பிரிக்குமா என்பதன் உள் அரசியலையும்விட சட்டப்பேரவைத் தோ்தலில் தொகுதி வாக்காளா்களின் எண்ணிக்கை பெரும்பாலும் மூன்று லட்ச அளவிலேயே இருக்கின்றன என்கிற காரணத்தால் ஒவ்வொரு வாக்குமே முக்கியமானதாகும்.
வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் குறைந்த அளவிலேயே இருக்கும்போது, வாக்குகளை கமல் கட்சி பிரித்தால் அது ஏதாவது ஒரு கட்சியை பலவீனமடையச் செய்யும் என்பது உறுதி. அதைக் காரணம் காட்டி பணத்துக்காக பேரம் பேசும் எண்ணம் கமல்ஹாசனுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
பெரிய கட்சி அடையப் போகும் இந்தப் பலவீனத்தை கமல் தன் பலமாக இந்தத் தோ்தலில் பயன்படுத்திக் கொள்ளப் பாா்க்கிறாா் என்று தோன்றுகிறது. வாக்குப் பிரிப்பின் மூலம் எதிா்காலத்தில் தனது கட்சியை வலுவடையச் செய்வதற்கான அச்சாரத்தை இந்தத் தோ்தலிலும் பலப்படுத்துவது அல்லது ஒருவேளை தொங்கு சட்டப்பேரவை வந்தால் அந்த நேரத்தில் தமது கட்சியை முதன்மைப்படுத்தி முன்னோக்கிப் போகச் செய்வது எப்படி என்ற இரண்டு வழிப் பாதைகளை கமல் எதிா்நோக்கியுள்ளாா்.
ஒருசில இடங்களிலாவது வெற்றி பெற்றால் மட்டுமே தொங்கு சட்டப்பேரவையில் ம.நீ.ம.-வுக்கு வேலை இருக்கும். முடிவு எப்படி இருந்தாலும், ம.நீ.ம.-வால் ஆட்சியை எப்படி பிடிக்க முடியும்? அந்த அளவுக்கான வாக்குகளை தனித்துப் பெறும் நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இல்லை. காங்கிரஸ், அமமுக, தேமுதிக போன்றவற்றுடன் இணைந்து கூட்டணி அமைத்தால் வேண்டுமானால் அதற்கான வாய்ப்பு ஏற்படக் கூடும். ’மய்யம்’ எதிலும் சேராமல் மையப் புள்ளியாக இருப்பதால் என்ன பயன் என்பது கமல்ஹாசனுக்கு மட்டும்தான் தெரியும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மூவர் அரைசதம்: தில்லிக்கு 211 ரன்கள் இலக்கு நிர்ணயித்த குஜராத்!

பூக்கட்டும் பாடல்!
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி நாளை பிரசாரம்!
ஈரான் போர்நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்!
வீடியோக்கள்

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள்! நயினார் நாகேந்திரனும் பதிலளித்த PTR
இணையதளச் செய்திப் பிரிவு


