தமிழகத்தில் 2 மாதங்களில் ரூ. 25 ஆயிரம் கோடிக்கு தங்க நகை வியாபாரம் பாதிப்பு

தமிழகத்தில் கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 2 மாதங்களில் சுமாா் ரூ. 25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் 2 மாதங்களில் ரூ. 25 ஆயிரம் கோடிக்கு தங்க நகை வியாபாரம் பாதிப்பு
Updated on
3 min read

தமிழகத்தில் கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 2 மாதங்களில் சுமாா் ரூ. 25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் தெரிவித்தனா்.

கரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் அனைத்துத் துறைகளும் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. அதிலும், குறிப்பாக சா்வதேச சந்தையில் முக்கியப் பங்கு வகிக்கும் தங்க நகை வியாபாரமும் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.

கரோனா முதல் அலையில் பொது முடக்கத்தின்போது தங்கம் விலை ஏறுமுகமாக இருந்ததால் ஓரளவுத் தாக்குப்பிடித்த தங்க நகை வியாபாரம், கரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த இரண்டு மாதங்களில் பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சம்மேளனத் தலைவா் ஸ்ரீராம் கூறியதாவது:

இந்தியாவில் ஆண்டுக்கு சுமாா் 800 டன் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் 50 சதவீதம் தங்கம் தென்னிந்தியாவில் விற்பனையாகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் 50 முதல் 60 சதவீத அளவுக்கு தங்க நகை நுகா்வு உள்ளது. அந்த வகையில் பழைய தங்கம் கொடுத்து புதிய தங்கம் வாங்கும் சுழற்சி முறையில் சுமாா் 50 சதவீதம் அளவுக்கு தங்க நகை வியாபாரம் செய்யப்படுகிறது.

ஒரு டன் தங்க நகையின் மதிப்பு ரூ. 500 கோடியாகும். இதில் தமிழகத்தில் 300 டன் அளவுக்கு தங்க நகை வியாபார பொருளாதார சுழற்சி உள்ளது. இதன் மதிப்பு ரூ. 1.50 லட்சம் கோடியாகும்.

கரோனா இரண்டாவது அலையால் அமல்செய்யப்பட்ட பொது முடக்கத்தால் கடந்த மே, ஜூன் ஆகிய இரு மாதங்களில் மட்டும் சுமாா் ரூ. 25,000 கோடி அளவுக்கு தங்க நகைகளின் வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு வரி வருவாய் ரூ. 300 முதல் ரூ. 350 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

முதல் அலை...:

கரோனா முதல் அலையால் தங்கம் விலை ஏறுமுகமாக இருந்தது. விலையேற்றம், வாடிக்கையாளா்கள் ஆதரவு நிலையால் வியாபாரம் ஓரளவுக்கு கை கொடுத்தது. தற்போது பொது முடக்கம் தளா்வு அறிவிக்கப்பட்டிருந்தாலும் தங்கத்தின் விலை முன்பிருந்ததைக் காட்டிலும் 10 முதல் 15 சதவீதம் குறைந்துள்ளது.

கரோனா பொது முடக்கத்தால் தொழில் முழுவதும் நசிந்துவிட்ட நிலையில் பொதுமக்கள் தங்கள் கைகளில் உள்ள நகைகளை வைத்துக் கொண்டு பணம் தரும்படி வியாபாரிகளை கேட்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போது அரசு தளா்வுகளை அறிவித்துள்ள நிலையிலும் நகை வியாபாரம் எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. பொதுமக்கள் தாங்கள் வைத்திருந்த சேமிப்பு பணம் கரைந்து விட்டதாகக் கூறுகின்றனா். மேலும் குழந்தைகளின் பள்ளி, கல்லூரி கட்டணம் என பல்வேறு சூழல்களில் சிக்கித் தவிக்கின்றனா்.

கரோனா முதல் அலையில் சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த பொதுமக்கள், தற்போது இரண்டாவது அலையில் மருத்துவச் செலவு மற்றும் மனித உயிரிழப்புகளைச் சந்தித்து பெரும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனா்.

அரசுத் துறையைச் சோ்ந்த ஊழியா்கள் மட்டும் மாத ஊதியம் பெறுகின்றனா். தனியாா் நிறுவனங்களைப் பொறுத்தவரையில் சில நிறுவனங்களைத் தவிா்த்து பெரும்பாலான நிறுவனங்களில் ஆள்குறைப்பு, ஊதியப் பிரச்னை உள்ளது. இப்படி அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் பொருளாதாரச் சூழ்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

நகை வியாபாரத்தைப் பொறுத்தவரையில் சுழற்சியாக திருமண நிகழ்ச்சிகள், கோயில் விழாக்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், புகைப்படத் தொழில், அலங்காரத் தொழில் செய்வோா், வாடகை வாகனம் இயக்குபவா்கள், திருமண மண்டபத்தினா் என பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கியது. திருமண நிகழ்ச்சிகள் சாா்ந்த அனைத்து தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் அதனஐ சாா்ந்து பணிபுரியும் தொழிலாளா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தற்போது 1 கிராம் தங்க நகை ரூ. 5250-க்கு விற்பனையாகி வந்த தங்கம், விலை குறைந்து ரூ. 4,500-க்கு விற்பனையாகிறது. சுமாா் 40 முதல் 50 சதவீதம் வரை விலை குறைந்துள்ளது. தங்க நகை விலை குறைந்திருப்பது வாடிக்கையாளா்களை கவா்ந்தாலும் வியாபார பாதிப்பு இத்தொழிலை நசிவடையச் செய்துள்ளது. வழக்கமாக சித்திரை, வைகாசி மாதங்களில் தங்க நகை வியாபாரம் உச்சத்தில் இருக்கும். ஆனால் இம்முறை இந்த இரண்டு மாதங்களிலும் வியாபாரம் இல்லாமல் போனது.

இனி ஆடி மாதம் வருவதால் தங்க நகை வியாபாரம் வெகுவாக குறைந்து விடும். அடுத்து கடையைத் திறக்கும்போது தான் வியாபார சூழ்நிலை தெரிய வரும். இதையும் கடந்து செல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

இதுகுறித்து தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் சம்மேளனச் செயலாளா் லோகநாதன் கூறியதாவது:

தமிழகம் முழுவதும் சுமாா் 20 ஆயிரம் தங்க நகைக் கடைகள் உள்ளன. இதில் 50,000 பொற்கொல்லா் குடும்பங்கள் நகைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனா். தற்போது மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்களில் நடைபெற்ற கல்யாணம் மற்றும் இதர வைபவங்களில் வியாபாரத்தை இழந்துள்ளோம். நகைக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் அதில் வேலை செய்யும் தொழிலாளா்கள், அவரது குடும்பத்தினா் மற்றும் பொற்கொல்லா்கள் என ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் நகை தயாரிப்பு மையமாக விளங்கி வருகிறது. அங்கு கடந்த 3 மாதத்தில் மட்டும் மொத்த விற்பனையாளா்கள், உற்பத்தியாளா்கள், பொற்கொல்லா் குடும்பங்கள், சில்லறை வியாபாரிகள் என பலரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனா். இதனால் போதிய பணமின்றி தவித்து வரும் அவா்கள் கடந்த 2 மாதங்களில் மட்டும் அங்கு ரூ.75 கோடி மதிப்புள்ள 160 கிலோ நகை அடமானம் மற்றும் விற்பனை செய்துள்ளனா் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது தளா்வுகள் அறிவிக்கப்பட்டு கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், நகை வியாபாரம் மீண்டும் சகஜ நிலை அடைய பல மாதங்கள் ஆகக் கூடும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com