திருப்பூர், கோவை மாவட்டங்களில் ரூ.600 கோடி மதிப்பிலான  விசைத்தறி காடா துணி தேக்கம்

திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயக்கப்படுகின்றன.
திருப்பூர், கோவை மாவட்டங்களில் ரூ.600 கோடி மதிப்பிலான  விசைத்தறி காடா துணி தேக்கம்

பல்லடம்: திருப்பூர், கோவை மாவட்டங்களில் கரோனா பொதுமுடக்கத்தால் ரூ.600 கோடி மதிப்பிலான காடா துணிகள் தேக்கம் அடைந்துள்ளன.

திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சத்து 50 ஆயிரம் விசைத்தறிகள், 20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் தினசரி ரூ.100 கோடி மதிப்புள்ள 2 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த காடா துணி உற்பத்தி தொழில் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். கரோனா 2-ஆம் அலை பொதுமுடக்கத்தால்  விசைத்தறிகள் நிறுத்தப்பட்டன. ஏற்கெனவே உற்பத்தி செய்த துணிகளை அனுப்ப முடியாததால் ரூ.600 கோடி மதிப்பிலான காடா துணிகள் தேக்கம் அடைந்துள்ளன. உற்பத்தி செய்து வட மாநிலங்களுக்கு அனுப்பிய துணிக்கு அங்குள்ள மொத்த வர்த்தகர்கள் அதற்குரிய தொகையை அனுப்ப முடியாத அளவுக்கு அங்கும் கரோனா தாக்கம் உள்ளது. இதனால் உற்பத்தியாளர்களுக்கு வர வேண்டிய தொகை ரூ.1,500 கோடி அளவுக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு இருப்பதால் விசைத்தறிகளை நிறுத்தியதோடு தங்களது நிறுவனங்களில் வேலை செய்யும் பல்லாயிரம் தொழிலாளர் குடும்பங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் இலவச உணவு, தங்குமிடம், மருத்துவ வசதி, கை செலவுக்குப் பணம் என்று வழங்கி தொழிலாளர்களுக்கு நெருக்கடியான காலத்திலும் உற்பத்தியாளர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

இது குறித்து பல்லடம் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் கூறியதாவது:
திருப்பூர், கோவை மாவட்டங்களில் முக்கிய தொழிலாக விவசாயத்துக்கு அடுத்தப்படியாக விசைத்தறி ஜவுளித் தொழில் உள்ளது. ஆள் பற்றாக்குறை, உற்பத்தி செய்த துணிக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற காரணங்களால் ஜவுளித் தொழில் ஏற்கெனவே நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கத்தால் இத்தொழில் முற்றிலும் முடங்கியது. மத்திய, மாநில அரசுகளின் தளர்வுகள் அறிவிப்பால், சற்றே விசைத்தறி தொழில் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டு இருந்தது. இந்நிலையில் இரண்டாம் அலையும் பாதிப்பை அளித்தது.

இங்கிருந்து ஜவுளிகள் அதிகமாக அனுப்பப்படும் குஜராத், மகாராஷ்டிரம் போன்ற மாநில மொத்த ஜவுளி வியாபாரிகள் ஏற்கெனவே துணி ஆர்டர் கொடுத்து தயார் நிலையில் இருந்த காடா துணிகளை அனுப்ப வேண்டாம் என்றும், புதிய ஆர்டர்களை நிறுத்திவைத்தும், ஏற்கெனவே ஆர்டர் கொடுத்து பெற்ற துணிகளுக்கு இது வரை பணம் அனுப்பாமலும்  உள்ளனர்.

இதனால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளோம். பொதுமுடக்கத்தால் 80 சதவீத தொழில் முடங்கிவிட்டது. ஏற்றுமதி சம்பந்தப்பட்ட 20 சதவீத உற்பத்தியாளர்கள்  மட்டுமே தற்பொழுது விசைத்தறிகளை  இயக்கி வருகின்றனர்.

திருப்பூர், கோவை மாவட்டங்களில் ரூ.600 கோடி காடா துணிகள் தேக்கமடைந்துள்ளன. விசைத்தறிகள் இயங்காததால் இந்தத் தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்ள 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர்.

உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை சமாளிக்க வங்கிகளில் வாங்கிய கடனுக்கு 3 மாதங்களுக்கு வட்டியைத் தள்ளுபடி செய்து அறிவிக்க வேண்டும். அசல் தொகை செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும்.

ஜவுளித் தொழில் சீராகும் வரை கழிவுப்பஞ்சு ஏற்றுமதிக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும். ஆண்டு முழுவதும் நூல் விலை சீராக இருக்கும் வகையில் நூல் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும். துணி உற்பத்திக்கான மூலதன பொருள்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. எனவே பஞ்சு இறக்குமதிக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.

 விசைத்தறிக் கூடங்களில் பணியாற்றி வந்த வட மாநிலத் தொழிலாளர்கள் பலர் தங்களது சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். அவர்கள் திரும்பி வந்த பின்புதான் இந்த ஜவுளித் தொழில் இயல்பு நிலைக்குத் திரும்பும். அவர்களை தமிழகத்துக்கு அழைத்து வர அரசு சிறப்பு ரயில் இயக்க  வேண்டும். அதற்குரிய கட்டணத்தை நாங்கள் செலுத்தி தொழிலாளர்களை அழைத்து வர தயாராகவுள்ளோம்.

கரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு உள்ளதால் ஏராளமான தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்த முடியவில்லை.  தடுப்பூசி செலுத்தாததால் கரோனா பாதிப்புக்கு அஞ்சி பலர் வேலைக்கு வர விரும்பவில்லை. அரசு சலுகை விலையில்  தடுப்பூசி கொடுத்தால் விலை கொடுத்து வாங்கி தொழிலாளர்களுக்கு செலுத்த தயாராக உள்ளோம்.
எனவே கரோனா பொதுமுடக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள விசைத்தறி ஜவுளித் தொழிலை பாதுகாக்கத் தேவையான உதவிகள், சலுகைகள் அளிக்க வேண்டும்.

6,500 சதுர அடி பரப்பளவு கொண்ட 16 தறிகள் இயங்கும் விசைத்தறிக் கூடத்தில் 2 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். எனவே கரோனா பொது 
முடக்கத்தில் கூடுதல் தளர்வு அளித்து விசைத்தறிகளை இயக்க அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com