உதயமாகுமா செய்யாறு புதிய வருவாய் மாவட்டம்? 

செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வேண்டும் என்றும், முதல்வர் ஸ்டாலின் அறிவித்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே பொது மக்கள் எதிர்பாப்பாக உள்ளது. 
62 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பழமை வாய்ந்த செய்யாறு வருவாய் கோட்ட அலுவலகம்.
62 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பழமை வாய்ந்த செய்யாறு வருவாய் கோட்ட அலுவலகம்.


செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வேண்டும் என்றும், முதல்வர் ஸ்டாலின் அறிவித்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதே பொது மக்கள் எதிர்பாப்பாக உள்ளது. 

செய்யாறு வருவாய் கோட்டம்:
சுமார் 1908 -ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சிக் (பிரிட்டிஷ்) காலத்தில் சித்தூர் மாவட்டம் செயல்பட்டு வந்தது. அதன் பிறகு கேரளம், ஆந்திரம், கோவா, ஒரிசா ஆகிய மாநிலங்கள் உள்ளடக்கி சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டது. 

1947 -இல் இந்திய நாடு சுதந்திரம் பெற்றப் பிறகு சென்னை மாகாணம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 

1956 - ஆம் வருடத்தில் மொழிவாரி மாநிலமாக பிரிக்கும் போது சித்தூர் மாவட்டத்தில் இருந்து வட ஆற்காடு மாவட்டம், வேலூர் தலைமையிடமாகக் கொண்டு புதியதாக வட ஆற்காடு மாவட்டம்  உருவாக்கப்பட்டது. வேலூர் தமிழ்நாட்டில் சேர்க்கப்பட்டது. அதேபோன்று சித்தூர் ஆந்திரம் மாநிலத்தில் சேர்க்கப்பட்டது. 

வேலூர் தலைமையிடமாக செயல்பட்டு வந்த வட ஆற்காடு மாவட்டத்தில் செய்யாறு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் என ஐந்து வருவாய் கோட்டங்கள் தொடங்கப்பட்டன. செய்யாறில் உள்ள வருவாய் கோட்டம்  01.04.1959 தேதியில் தொடங்கப்பட்டது. செய்யாறு வருவாய்க் கோட்டம் உதயமாகி  62 வருடங்கள் ஆகின்றன. 

அதன் பின்னர், வேலூர்  மிகப் பெரிய மாவட்டமாக இருந்து வந்ததால் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி 1989 -இல் வேலூர் மாவட்டத்தில் இருந்து புதியதாக திருவண்ணாமலை மாவட்டத்தை உருவாக்கினார். அப்போது வேலூர் மாவட்டத்திற்கு டாக்டர். அம்பேத்கார் மாவட்டம் எனவும்,  திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சம்புவராயர் மாவட்டம் எனவும் பெயரிடப்பட்டது. 

தற்போதைய திருவண்ணாமலை மாவட்டத்தில் மூன்று வருவாய் கோட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கோட்டத்திலும் நான்கு வட்டங்கள் வீதம் அமையப்பெற்று உள்ளன.

வேலூர் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் தொடங்கி 32 வருடங்களும், பழைய வட ஆற்காடு மாவட்டமாக இருந்தப்போது 30 வருடங்கள் என மொத்தம் 62 வருடங்களாக செய்யாறு வருவாய் கோட்டம் தொடங்கி சுமார்  62 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. 

01.04.1959 தேதியில் செய்யாறு வருவாய்க் கோட்டத்துடன் தொடங்கப்பட்ட திருவண்ணாமலை, திருப்பத்தூர், இராணிப்பேட்டை ஆகியன மாவட்டங்களாக பதவி உயர்வு பெற்று உள்ளன. ஆனால் செய்யாறு மட்டும் இன்று வரையில் வருவாய் கோட்டமாகவே செயல்பட்டு வருகிறது.    

மாவட்டத்திற்கு இணையான இரண்டாம் நிலை அரசு அலுவலகங்கள்:
செய்யாறு வருவாய் கோட்டத்தில் மாவட்டத் தலைநகர் திருவண்ணாமலையில் அமைந்துள்ள அரசு அலுவலகங்கள் அதற்கு இணையான இரண்டாம் நிலை அலுவலகங்கள் அனைத்தும் அமையப் பெற்று உள்ளன. தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை, சுமார்  30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணிபுரியும் செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டை, பல தனியார் கம்பெனிகள். பல தனியார் கல்லூரிகள். பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் என பல அமைந்து உள்ளன. 

தற்போதைய செய்யாறு வருவாய் கோட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம், சேத்பட் ஆகிய வட்டங்கள் அமையப் பெற்றுள்ளன. 

மாவட்ட தலைநகரான திருவண்ணாமலைக்கு செய்யாறு தொகுதியைச் சேர்ந்த தூசி, அப்துல்லாபுரம், நாட்டேரி, பிரம்மதேசம் ஆகிய பகுதிகளில் இருந்து ஒரு நாள் முழுவதும் பயணம் செய்து சுமார் 130 கி.மீ தூரத்திற்கு பயணிக்க வேண்டியுள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டம் தொடங்கி 32 வருடங்கள் ஆன நிலையிலும்,புதியதாக வெம்பாக்கம் வட்டம் தொடங்கி 6 ஆண்டுகள் ஆன நிலையில் இது வரையில் இன்று வரையில் வெம்பாக்கத்தில் இருந்து ஒரெயொரு அரசு பேருந்துக் கூட திருவண்ணாமலைக்கு இயக்கப்படவில்லை.  

புதியதாக செய்யாறு வருவாய் மாவட்டம் அமையப் பெற்றால் அரசு அலுவலர்கள், வியாபாரிகள், நெசவாளர்கள், உடல் ஊனமுற்றவர்கள், பள்ளி மாணவ. மாணவியர்கள் ஆகியோர் பெரிதும் பயன் அடைவார்கள்.

மேலும், செய்யாறை மையமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைந்தால் சுமார் 25 முதல் 45 கி.மீ தூரத்திற்குள் மாவட்ட எல்லை அமையும். அனைவரும் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் மாவட்ட தலைமையிடத்திற்கு  வந்து செல்ல வசதியாக இருக்கும்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2016 -இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது வந்தவாசி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர் கோரிக்கைகள்:
செய்யாறில் புதியதாக மாவட்ட அமைக்கக் கோரி சமூக ஆர்வலர்கள், பொது மக்கள், வியாபாரிகள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பல அமைப்பினர் முதல்வரின் தனிப் பிரிவு, தமிழக முதல்வர்கள், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்கள், வருடம் தோறும் நடைபெறும் ஜமாபந்தி நிகழ்வு, வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோருக்கு 2014 -இல் இருந்து தொடர் கோரிக்கையாக வைத்து வருகின்றனர். 

இது குறித்து சமூக ஆர்வலரும், வழக்குரைஞருமான தூசி (குரங்கணில்முட்டம்) தே.தமிழ்செல்வன் கூறியதாவது: 
செய்யாறு வருவாய் கோட்டத்தில் அதிக மக்கள் தொகை, அதிக அளவில் கிராமங்கள், அதிக பரப்பளவிலான தொழில் பகுதி, விவசாயம் நிறைந்த பகுதியாக உள்ளது எனவும், செய்யாறு கோட்டம் தொடங்கி சுமார் 60 வருடங்களை கடந்த பழமை வாய்ந்த செய்யாறு வருவாய் கோட்டத்தை மாவட்டமாக்கி அழகுப் பாரப்பதே திமுக அரசுக்கு பெருமையாகும் என தெரிவித்துள்ளார். 

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம்  அமைக்க வேண்டும் என அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பலரும் தொடர் கோரிக்கையாக வைத்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com