சுகம் தரும் சித்த மருத்துவம்: இருதய நோய் வராமல் காக்கும் ‘பூண்டு’

சித்த மருத்துவத்தில் நோய்களுக்கு முதல் காரணமாக இந்த வாயுவையே சொல்லப்படுகிறது. 'வாதமலாது மேனி கெடாது' என்பது தேரையர் சித்தர் கூற்று.
சுகம் தரும் சித்த மருத்துவம்: இருதய நோய் வராமல் காக்கும் ‘பூண்டு’

                    
வாயு தொல்லை பலருக்கும் பெரிய மனத்தொல்லை. காலையில் எழுந்ததும் மலச்சிக்கலின்றி வயிற்றில் உள்ள வாயு முழுவதும் வெளிப்பட்டு வயிறு காலியானால் போதும் அதுவே உடல் ஆரோக்கியத்தின் அறிகுறி. 

டாக்டர் எனக்கு சரியாய் சீரணம் ஆகாம, வயிறு உப்பிசம் ஆகிடுது, அடிக்கடி ஏப்பம் வருது, பசி எடுக்கவே மாட்டேங்குது என்று வருத்தப்படுவோர்கள் வயிறு மீது அனாவசியமாக பழிசுமத்துவது பொதுவான நிகழ்வு. ஒரு பாவமும் அறியாத வயிற்றில் நொறுக்கு தீனிகளும், பதப்படுத்தப்பட்ட உணவுகளும், போட்டு அரைக்கும் இயந்திரம் போல் பயன்படுத்துவது தான் அதற்கு காரணம்.   
சித்த மருத்துவத்தில் நோய்களுக்கு முதல் காரணமாக இந்த வாயுவையே சொல்லப்படுகிறது. 'வாதமலாது மேனி கெடாது' என்பது தேரையர் சித்தர் கூற்று. குடலில் சேரும் அதிகப்படியான வாயுவே பல்வேறு உடல் வியாதிகளுக்கும் காரணம். பலரையும் பாதித்து துன்புறுத்தும் மாரடைப்பு போன்ற இருதய நோய்களை 'ருத்ர வாயு அல்லது இருத் ரோகம்' என்று வாயு சார்ந்த நோயாகவே சித்த மருத்துவம் பாவிக்கின்றது. 

என்னடா இது, சாதாரணமாக குடலில் சேரும் வாயு மாரடைப்புக்கு காரணமா ? என்று பலரும் யோசிக்க தோன்றும். ஆம். குடலில் நாட்பட சேரும் வாயு, உடலில் பரவி பாதிக்கும் உறுப்புகளை பொறுத்து வெவ்வேறு நோய்நிலையாக திரிகின்றது. உதாரணமாக இந்த வாயு என்கிற வாதம், மூட்டுகளில் உள்ள கபத்துடன் ஒன்றிணைந்து மூட்டு வாதமாக மாறுகின்றது. இடுப்பு எலும்புகளில் இந்த வாயு ஊடுருவி பலருக்கும் 'டிஸ்க் பல்ஜ்'  (DISC BULDGE) என்று சொல்லக்கூடிய இடுப்பு சவ்வு வீக்கத்தை உண்டாக்குகிறது. இந்த வாயுவே ரத்த குழாய்களில் கபமான கொழுப்புடன் சேர்ந்து இருதய ரோகத்தை உண்டாக்குவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. மொத்தத்தில் இந்த வாயுவாகிய வாதம், கபத்துடன் கூடி வாதகபமாகி பல்வேறு நோய்நிலைகளுக்கு காரணமாகிறது.

இவ்வாறு சித்த மருத்துவ தத்துவப்படி பார்த்தால், குடலில் வாயுவை சீராக்கும் சித்த மருத்துவ மூலிகை இந்த பல்வேறு வியாதிகளுக்கும் தீர்வாகுமா? என்பது பலருக்கும் மூளையில் பல்ப் பிரசாகமிட்டு எரிவது போன்று தோன்றும். அத்தகைய சிறப்புமிக்க மூலிகை நாம் உணவில், அன்றாடம் பயன்படுத்தும் வாயுவையும், கபவாதத்தையும் சீராக்கும் தன்மை உடையது தான் 'பூண்டு' அல்லது 'வெள்ளுள்ளி'.   

நாள்பட்ட நோய்களான பக்க வாதம், மாரடைப்பு, மூட்டு வாதம், இருதய நோய்கள், ரத்த குழாய் அடைப்பு , புற்று நோய் போன்ற பல்வேறு அச்சுறுத்தும் தொற்றா நோய்களை வரவிடாமல் தடுக்கும் தன்மை உடையது இந்த பூண்டு. இதன் மணமே இதன் குணத்திற்கு காரணம். சல்பர் நறுமணமுள்ள இந்த மணத்திற்கு அதில் உள்ள சல்பர் வேதிப்பொருள்களே.

‘அலிசின்’ என்ற முக்கிய வேதிப்பொருள் அதன் மருத்துவ குணங்களுக்கு முதன்மை காரணமாக உள்ளது. கொழுப்பில் கரையும் சல்பர் கூட்டுப்பொருள் இது. அதனால் தான் நம் முன்னோர்கள் பூண்டை எண்ணெயிட்டு தாளிக்கும் போது உபயோகிக்க கூறியுள்ளனர் போலும். அறிவியலை மிஞ்சும் அவர்களின் அனுபவம் வியப்பிற்கு உரியது.

தினசரி உணவில் இந்த பூண்டினை சேர்த்து எடுத்துக்கொண்டால் குடல் வாயுவை போக்கும் என்பதோடு இருதய நோய்களை வரவிடாமல் தடுக்கும். லேசான ‘பிளட் தின்னர், ஆக செயல்படுவதால் 'மூலிகை ஆஸ்பிரின்' என்றே சொல்லலாம். அதோடு ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதையும் தடுக்கும்.  உடல் பருமன், சர்க்கரை நோய் இவற்றிற்கு காரணமான இன்சுலின் தடையை நீக்குவதோடு இன்சுலின் சுரப்பையும் தூண்டும். 

மேலும் பூண்டில் உள்ள வேதிப்பொருள்கள்  ‘பிராட் ஸ்பெக்ட்ரம்’ கிருமி கொல்லியாகவும் செயல்படும். வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகாளான் இவற்றை அழிக்கும் தன்மையும் உடையது. ACE என்ற நொதியின் செயல்பாட்டை தடுத்து ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மூட்டு வாத நோய்களில் மூட்டு வீக்கத்திற்கு காரணமான சைட்டோகைன்களை தடுக்கும் தன்மை உடையது. புற்று நோயில் புற்று நோய் செல்களின் பெருக்கத்தை தடுப்பதாகவும், அபோப்டோசிஸ் எனும் திட்டமிட்ட செல் இறப்பினை தூண்டி தேவையற்ற புற்றுநோய் செல்களை அழிக்கிறது.

பூண்டு சாப்பிட்டால் வயிறு எரிச்சல் வருகிறது என்பவர்கள், தினசரி நான்கு பூண்டு பாலில் வேக வைத்து எடுத்தாலும் நல்ல பலன் தரும். இவ்வாறு வாயு தொல்லை முதல் இருதய ரோகம் வரை நீக்கும் மருத்துவ குணம் வாய்ந்த பூண்டினை தட்டில் ஒரு ஓரத்தில் ஒதுக்கி வைக்காமல் மென்று தின்று பயனடைந்தால் நலம் நிச்சயம்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் ஐடி: drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com