சுகம் தரும் சித்த மருத்துவம் : புற்று நோயை தடுக்குமா 'எள் எண்ணெய்'..?

எள்ளு ‘எண்ணெய்வித்துக்களின் ராணி’ என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. இதில் உள்ள பைடோஸ்டீரால் வகையான தாவர கொலெஸ்டிரால், நாம் உண்ணும் உணவில் உள்ள கொலெஸ்டிரால்-ஐ உட்கிரகிக்க விடாமல் தடுக்கக்கூடியது.
சுகம் தரும் சித்த மருத்துவம் : புற்று நோயை தடுக்குமா 'எள் எண்ணெய்'..?


இந்த எண்ணெய் நல்லது, அந்த எண்ணெய் நல்லது என்று நாள்தோறும் தொலைக்காட்சி பெட்டியை திறந்தவுடன் பார்க்கும் விளம்பரங்களால் குழப்பத்தில் உள்ளவர்கள் ஏராளம். விளம்பரத்திற்கு ஏற்றார் போல எண்ணெய் வகைகளை மாதம் ஒரு முறை, மாற்றி மாற்றி பயன்படுத்தி வருபவர்கள் மற்றொரு புறம். இவ்வாறு ஆடம்பர அறிவியல் தன்மை புகுத்தி செய்யப்படும் விளம்பரங்களால் பழமையை, பாரம்பரியத்தை, உண்மைத்தன்மையை பெரும்பாலான நபர்கள் மறந்துவிடுகின்றனர். சரிங்க டாக்டர் நல்ல எண்ணெய் எது தான்? என்று கேட்பவர்களுக்கு பதில், அந்த வினாவிலே இருப்பது தான் உண்மை.

‘இளைத்த உடலுக்கு எள்ளு’ என்ற பழமொழியை அறியாதவர் இல்லை. இங்கு இளைத்த உடல் என்பது சாதாரணமாக உடல்எடை குறைந்த நிலையை மட்டும் குறிப்பதல்ல. உடல்எடை குறைந்து செல்வதற்கு காரணங்கள் பல. அந்த வகையில் பார்த்தால் காச நோய், புற்று நோய் நிலையில் ஏற்படும் உடல் இளைத்தலுக்கு கூட உதவும் சித்த மருத்துவ மூலிகை தான் ‘எள்ளு’. பல்வேறு வெளிநாடுகளில் கூட பயன்படுத்தப்படும் சிறப்பு வாய்ந்தது இது.

எள் உருண்டை 

‘எறனலாம் திண்மை தரும்’ என்று எள்ளுவை பற்றி அகத்தியர் குணவாகடம் கூறுகின்றது. அதாவது உடலில் உள்ள என்புகள் அனைத்தையும் வலுவாக்குமாம். 'டாக்டர் எனக்கு வயசு ஆகிடுச்சு ,முழங்கால் மூட்டுகள் வலிக்குது, கேட்டால் 45 வயசுக்கு மேல எலும்பு தேய்மானம் வரும்-னு சொல்லுறாங்க' என்று ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ மற்றும்  ‘ஆஸ்டியோஆர்த்ரைடிஸ்’  நோய் நிலையால் வருத்தப்படும் தாய்மார்களுக்கு எள்ளு நல்ல பலனை தரும். இயற்கையாகவே இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற அத்தியாவசிய தாதுஉப்புகள் எலும்புகளை வலுவாக்கும் தன்மையாக உள்ளன.

‘எள் எண்ணெய்’ என்று கூறப்படும் நல்லெண்ணெய் மிகுந்த மருத்துவ குணம் உள்ளது. அதிக அளவு PUFA எனப்படும் மிகுந்த செறிவூட்டப்பட்ட கொழுப்பு அமிலமும், மலட்டு தன்மையை போக்கும் விட்டமின்-ஈ அதிக அளவு கொண்டது. ஆகையால் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயல்படக்கூடியது. இந்த எள்ளு எண்ணெய் இருதய-ரத்தவோட்ட நோய்களை தடுக்கும் தன்மையுடையது. ரத்தத்தில் ட்ரைகிளைசெரைடு அளவை குறைப்பதாகவும், இதன் மூலம் ரத்த அழுத்தம் குறைய ஏதுவாக உள்ளது. ரத்த குழாயில் ரத்த தட்டணுக்கள் திரட்சியையும், பல்வேறு அழற்சியை ஏற்படுத்தும் காரணிகளை தடுத்து மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க வழிவகை செய்யும். “கண்நோய் செவிநோய் கபாலஅழல் காசநோய் ,புண்ணோய் போம் எண்ணெய்யாற் போற்று“ என்று அகத்தியர் குணவாகடம் எள்ளு எண்ணையை பற்றி கூறுகின்றது.

எள்ளு ‘எண்ணெய்வித்துக்களின் ராணி’ என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. இதில் உள்ள பைடோஸ்டீரால் வகையான தாவர கொலெஸ்டிரால், நாம் உண்ணும் உணவில் உள்ள கொலெஸ்டிரால்-ஐ உட்கிரகிக்க விடாமல் தடுக்கக்கூடியது. இதில் உள்ள லிக்னேன் என்று வேதிப்பொருள் மற்ற தாவரங்களில் உள்ளதை விட 100 மடங்கு அதிகம் உள்ளது. செசாமின், செசமோலின் ஆகிய பைட்டோஈஸ்ட்ரோஜென் இதில் உள்ளதால் இருதய நோய்களை வரவொட்டாமல் தடுக்கும் தன்மை உடையது. எள்ளு விதையினால் செய்யப்படும் உருண்டை வளரிளம் பெண்களுக்கு மாதவிடாயை தூண்டி சீராக்கும். பிரசவித்த பெண்களுக்கு பால் சுரப்பை அதிகமாக்கும். மலச்சிக்கலை போக்கும் தன்மையும் உடையது. பெண்களுக்கு ஏற்ற மிகச்சிறந்த உணவு எனலாம்.

எள்

எள் எண்ணெயில் உள்ள செசாமின் என்ற வேதிப்பொருள் அதன் பல்வேறு மருத்துவ குணங்களுக்கும் முக்கிய காரணமாக உள்ளது. இதுவே புற்று நோயின் பல்வேறு நிலைகளை தடுக்கும் தன்மை உடையது. இது புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பதாகவும், திட்டமிட்ட செல் இறப்பை தூண்டுவதாகவும், புற்று நோய் நிலைகளை தூண்டும் பல்வேறு காரணிகளை தடுப்பதாவும், புற்று நோயின் இறுதி நிலையான மெடாஸ்டேஸிஸ் எனும் பரவக்கூடிய நிலையினை தடுப்பதாகவும் உள்ளதை பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கிறது. ஆயில் புல்லிங் எனப்படும் நல்லெண்ணெய் வாய்க்கொப்பளிப்பு வாய்ப்புண் முதல் வாய்ப்புற்று நோய் வரை வர விடாமல் தடுக்கும் என்றும் இதன் மூலம் அறிய முடிகிறது. நல்லெண்ணெய் குளியல் வாரம் இருமுறை எடுத்தால் எந்த நோயும் அணுகாது 'தேரையர் பிணி அணுகா விதி' அறிவுறுத்துகிறது.

மொத்தத்தில் எண்ணெய் (எள்நெய்) என்றாலே அது எள்ளு எண்ணெய் (நல்லெண்ணெய்) மட்டும் தான் குறிப்பதாக உள்ளது. காலப்போக்கில் இந்த நல்லெண்ணெய்  மட்டும் தான் நல்ல எண்ணெய் என்பதும் மறைக்கப்பட்டது வருத்தம் தான். எள்ளு தூவிய பிட்சாவை விரும்பி உண்ணும் நவீன கலாச்சார நாயகர்கள், நம்ம ஊர் எள்ளு பொடியையும், எள்ளு உருண்டையும் கொண்டாட முன் வருவதில்லை. ஆகவே மருத்துவ குணங்கள் வாய்ந்த எள்ளுவையும், நல்லெண்ணெய்யும் பயன்படுத்த துவங்கினால் அச்சுறுத்தும் தொற்றா நோய்களான இருதய நோய்க்கும், புற்று நோய்க்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.


மருத்துவரின் தொடர்புக்கு...
மெயில் ஐடி: drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com