உலிபுரத்தில் 489 ஆண்டுகளுக்கு முற்பட்ட 2 கல்வெட்டுகள், 2 நவகண்ட சிற்பங்கள் கண்டெடுப்பு

தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் 489 ஆண்டுகளுக்கு முற்பட்ட 2 கல்வெட்டுகளையும், 2 நவகண்ட சிற்பங்களையும், வரலாற்று ஆய்வாளர்கள் புத்தாண்டில் கண்டெடுத்துள்ளனர்.
உலிபுரத்தில் கல்வெட்டினை ஆய்வு செய்யும்  ஆய்வாளர்கள் வீரராகவன், வெங்கடேசன்.
உலிபுரத்தில் கல்வெட்டினை ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் வீரராகவன், வெங்கடேசன்.

தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் 489 ஆண்டுகளுக்கு முற்பட்ட 2 கல்வெட்டுகளையும், 2 நவகண்ட சிற்பங்களையும் வரலாற்று ஆய்வாளர்கள் புத்தாண்டில் கண்டெடுத்துள்ளனர்.

சேலம் வரலாற்று ஆய்வுமையத்தை சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், ஆய்வுமையத் தலைவர் ஆறகளூர் பொன்.வெங்கடேசன் ஆகியோர், உலிபுரத்தைச் சேர்ந்த மாதவன் கொடுத்த தகவலின் பேரில், சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம், தம்மம்பட்டி அருகே உலிபுரம் பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர். 

அங்குள்ள சுவேதா நதியின் தென்கரையில் 16 ஆம் நூற்றாண்டில் ஒரு சிவன் கோவில் இருந்து தற்போது அழிந்து விட்டது. அதை புதிதாக கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இக்கோவிலின் முன்பு இரு கல்வெட்டுகளும், முன்புறமுள்ள வயலில் இரு நவ கண்ட சிற்பங்களும் கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

இக்கோவிலில் இரு கல்வெட்டுகள் காணப்படுகின்றது. இதில் ஒன்று முழுமையான கல்வெட்டு, மற்றொன்று துண்டு கல்வெட்டு ஆகும். இதன் காலம் 16 ஆம் நூற்றாண்டு ஆகும்.

இக்கோவிலின் முன்பு உடைந்த நிலையில் ஒரு துண்டு கல்வெட்டு காணப்படுகிறது. இதன் முன்புறம் சூரியன்,பிறை நிலா, சூலம் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன. சிதைந்த நிலையில் 3 வரிகள் உள்ளன. ஸ்வஸ்திஸ்ரீ சகாப்தம் என கல்வெட்டு துவங்குகிறது. இதன் மறுபுறத்தில் 13 வரிகளில் கல்வெட்டு உள்ளது. இங்கிருந்த கோவிலை அம்பலத்தாடி நாயனார் கோவில் என குறிக்கிறது.

நவ கண்ட சிலைகளுடன் ஆய்வாளர் வெங்கடேசனுடன், உலிபுரம் மாதவன்

16 ஆம் நூற்றாண்டில் ஆறகளூரை தலைநகராக கொண்ட மகதை மண்டலத்தின் ஒரு பகுதியாக உலிபுரம் இருந்துள்ளது. அப்போது மகதை மண்டலத்தின் பாளையக்காரராக துலுக்கண்ண நாயக்கர்  இருந்துள்ளார். இவரின் கீழ் உலிபுரம் பகுதியை ஆண்ட தளவாய் திருமலையார் என்பவர், இங்குள்ள இறைவன் அம்பலத்தாடி நாயனாருக்கு மடம் ஒன்றை அமைக்க அரை மனையையும், இந்த மடத்தை நிர்வகிக்க ஆகும் செலவுக்காக தும்மலப்பட்டி என்ற ஊரில் நன்செய் நிலத்தையும் தானமாக கொடுத்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.

கோவிலின் முன்புறம் நடப்பட்டுள்ள ஒரு பலகைக்கல்லில் இரு புறமும் 44 வரிகளில் இக்கல்வெட்டு காணப்படுகிறது. இக்கல்வெட்டு கி.பி.1531 ஆம் ஆண்டு அச்சுததேவ மகராயர் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது. உலிபுரம் என்றழைக்கப்படும் ஊர் அப்போது புலியுரம்பூர் எனவும், இறைவன் திருஅம்பலமுடைய தம்பிரான் என்றும் அழைக்கப்பட்டுள்ளனர். 

அச்சுததேவ மகராயர் காலத்தில் மகதை மண்டலத்து ஆத்தூர் கூற்றத்தில் புலியுரம்பூர் அமைந்திருந்தது. இப்பகுதிக்கு மாதைய நாயக்கர் , அப்போது பாளையக்காரராக இருந்துள்ளார். அவர் திரு அம்பலமுடைய தம்பிரான் கோவில் பூசைக்கும், திருப்பணிக்கும் அனந்தாழ்வார் பிள்ளை என்பவருக்கு புண்ணியமாக (தன்மமாக) செக்கடிக்கோம்பை, தும்பலப்பட்டி என்ற இரு கிராமங்களை தானமாக தந்துள்ளார். 

இக்கிராமங்களின் நான்கு எல்லைகளுக்குட்பட்ட நஞ்சை, புஞ்சை நிலங்களின் எல்லைகளை அளவிட்டு அங்கு சூலக்கல் எனப்படும் எல்லை கற்கள் நடப்பட்டன. அந்த நிலங்களில் வரும் வருவாய் இறைவனின் பூசைக்கும்,திருப்பணிக்கும் செலவிடப்படவேண்டும். இந்த தானத்தை போற்றி அழியாமல் காப்பவர்கள் கங்கை கரையிலே காரம் பசுவை தானமாக கொடுத்த புண்ணியத்தை பெறுவார்கள். இந்த தானத்தை அழிப்பவர்கள் கங்கை கரையிலே தன் தாய், தந்தை, குருவை, கொன்ற பாவத்தை அடைவார்கள் என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தானம் செய்யப்பட்ட இரு ஊர்களும் இன்றும் அதே பெயரில் வழங்கி வருகிறது.

நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வழக்கம் பல்லவர்கள் காலத்தில் இருந்தே இருந்து வந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே போர் நடக்கும் போது தன் நாடு வெற்றி பெற கொற்றவையின் துணை வேண்டி அத்தெய்வத்துக்கு ஒரு வீரன் தன்னையே சுயபலி கொடுத்துக்கொள்வது வழக்கமாகும். 

போர் நடக்கும் முன் கொற்றவை கோவிலுக்கு வீரர்கள் சென்று பூசை செய்வர். அப்போது நவகண்டம் கொடுத்துக்கொள்ளும் வீரர் தன் உடலில் உள்ள ஒன்பது இடங்களில் இருந்து சதையை அறிந்து கொற்றவையின் முன் வைப்பர், ஒன்பதாவதாக தன் தலையை தானே அரிந்து சுயபலி கொடுத்துக்கொள்வர். இப்படி பலி கொடுத்துக்கொள்ளும் வீரர்களுக்கு வைக்கப்படும் நடுகல்லே நவகண்டம் எனப்படும். இந்த வீரர்களுக்கு உதிரப்பட்டியாக வீடும், நிலமும் வழங்கும் வழக்கமும் இருந்துள்ளது.

உலிபுரம் அம்பலத்தாடி நாயனார் சிவன் கோவில் இருந்த இடத்திற்கு முன்புறம் உள்ள வயலில் ஒரு புதருக்குள் இரு நவகண்ட  நடுகல் சிற்பங்கள் கண்டறியப்பட்டன. இரண்டும் ஒரே மாதிரியான சிற்ப அமைதியை கொண்டுள்ளன. இதன் காலம் 16 ஆம் நூற்றாண்டாக கருதலாம். 

ஒரே போரில் வெற்றிபெற நவகண்டம் கொடுத்துக்கொண்ட வீரர்களாக இவர்கள் இருக்கலாம். பல்லவர்கள், சோழர்கள் காலத்தில் நடுகல்லில் அந்த வீரனின் பெயர், ஊர், எதற்காக இறந்தான் போன்ற விவரங்கள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டு இருக்கும். 

ஆனால் 12 ஆம் நூற்றாண்டுக்குப்பின் நடுகல்லில் கல்வெட்டை வெட்டி வைக்கும் வழக்கம் மறைந்து விட்டது. இந்த இரு நவகண்ட நடுகல்லிலும் எழுத்துக்கள் ஏதும் காணப்படவில்லை.

3 அடி உயரம், நேரான கொண்டை,கொண்டை முடிச்சுடன் உள்ளது. முகமானது சற்று தேய்ந்து சிதைந்துள்ளது. 

காதணிகள், கழுத்தில் சவடி,சரபளி போன்ற அணிகலன்கள் காணப்படுகிறது. வலது கையில் ஒரு நீண்ட வாளானது கழுத்துக்கு நேராக காட்டப்பட்டுள்ளது. ஒரு நடுகல் நவ கண்டம் என உறுதி செய்ய இப்படி கழுத்துக்கு நேரே கத்தி காட்டப்படும்.இடது கையில் ஒரு நீண்ட வாள் பூமியை தொட்ட நிலையிலும் உள்ளது. 

தோள்களில் தோள் வளையம், மணிக்கட்டில் கை வளையம், கால்களில் வீரக்கழலும் காணப்படுகிறது. அரையாடை ஆடை முடிச்சுடன் உள்ளது. வலது காலானது சற்று மடித்தும், பாதம் வலதுபக்கம் திரும்பிய நிலையிலும் உள்ளது. இப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் இன்னும் பல வரலாற்று தடயங்கள் கிடைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com