சுகம் தரும் சித்த மருத்துவம்: தொற்றா நோய்க்கூட்டங்களின் அரசனை அழிக்குமா ‘திரிபலை’?

ஒரு காலத்தில் ‘பணக்காரர்களின் நோய்’ என்று கருதப்பட்ட இவை இன்று அனைத்து வர்க்கத்தினரையும் பாதிப்பது, பல்வேறு நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
சுகம் தரும் சித்த மருத்துவம்: தொற்றா நோய்க்கூட்டங்களின் அரசனை அழிக்குமா ‘திரிபலை’?

இன்றைய நாளில் மருத்துவ உலகிற்கு மிகப்பெரும் சவாலாக இருப்பது தொற்றா நோய்கள் தான். ஒரு பக்கம், தொற்று நோய்கள் அவ்வப்போது நம்மை ஆட்டிப் படைக்க, என்றும் அசராமல் நம்மை அழித்துக்கொண்டிருப்பவை தொற்றா நோய்கள் தான். ஒரு காலத்தில் ‘பணக்காரர்களின் நோய்’ என்று கருதப்பட்ட இவை இன்று அனைத்து வர்க்கத்தினரையும் பாதிப்பது, பல்வேறு நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஏன் இந்த அச்சம் எனில், ஆண்டு தோறும் நடக்கும் இறப்புகளில் 71% அதாவது 4 கோடி இறப்புகள் இந்த தொற்றா நோய்களால் தான் என்கிறது அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள். அத்தகைய தொற்றா நோய்களில் முக்கிய இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பது சர்க்கரை நோய், இருதய நோய்கள், புற்றுநோய் இவை மூன்றும் தான். புகையிலை, மதுபானம் பயன்பாடு அதிகரிப்பால், பல தொற்றா நோய்களுக்கும் இவை காரணமாகி, உயிரை குடித்துக்கொண்டிருப்பதும் பலருக்கு தெரியும்.

மாறிப்போன வாழ்வியல் நெறிமுறைகளும், மறந்து போன பாரம்பரிய உணவும், மருத்துவ முறைகளும் இந்த தொற்றா நோய்க் கூட்டங்களை நம்மிடம் அழையா விருந்தாளியாக்கி விடுகின்றன. ஒரு புறம் சற்றே யோசித்து பார்த்தால் நடைப்பயிற்சி,யோகாசன பயிற்சி மேற்கொள்பவர்களில் பாதி பேர் சர்க்கரை வியாதி, உடல் எடை, அதிக கொழுப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோர்கள், மீதி பேர் இந்த நோய்கள் வரக்கூடாது என்று மெனக்கெடுப்பவர்கள். ஏன் இந்த அவலநிலை? இந்த அவலநிலையை போக்க முடியாதா? என்று எண்ணி வருத்தபடுபவர்கள் அனைவரும் பாட்டி வைத்தியமாய் பழகி வந்த சித்த மருத்துவத்தை மறந்தவர்கள் தான்.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை குடலை சுத்தம் செய்ய பேதி மருந்தும், வாரத்திற்கு இருமுறை எண்ணெய் குளியலும் மறந்து போன நம் தமிழனின் வாழ்வியல் நெறிமுறைகள். இன்னும் சொல்லப்போனால், நவீன நாகரிகம் என்ற பெயரில் தலைக்கு எண்ணெய் வைப்பதையும் மறந்து. முடி வளர பசைகளை பூசிக்கொள்வது போன்ற மாறிவிட்ட பழக்கவழக்கத்தால் வந்தது நோய்கள் தான். பேதி மருந்து எடுக்க குடல் சுத்தமாகும், வாதம் தணியும் என்கிறது சித்த மருத்துவம். ‘வாதமலாது மேனி கெடாது’ என்பது வெறும் வாக்கியமல்ல, வாழ்வியல் நெறிமுறையும் கூட தான்.

நம் உடலில் வாதம் 80 நோய்களையும், பித்தம் 40 நோய்களையும், கபம் 20 நோய்களையும் முதன்மையாக உண்டாக்கும். எனினும் சித்த மருத்துவம் கூறும் 4,448 வியாதிகளுக்கும் காரணம் வாதம், பித்தம், கபம் தான். அவற்றை சரி செய்தாலே, தொற்றா நோய்க்கூட்டங்கள் கொஞ்சம் தூர தள்ளி நிற்கும். 

சரி, இம்மூன்றையும் எவ்வாறு தணிப்பது என்று கேட்பவர்களுக்கு, உதவும் எளிமையான சித்த மருத்துவ மூலிகை கலவை தான் ‘திரிபலை’.

திரிபலை எனும் சித்த மருந்து புற்றுநோய் வரவிடாமல் தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை உடையது. இது நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதாகவும், பசியின்மையை போக்குவதாகவும், இரைப்பையில் அதிக அமிலச்சுரப்பை  குறைப்பதாகவும், வலி நிவாரணியாகவும், உடல் வெப்பத்தை தணிப்பதாகவும்,  கிருமிகளை கொல்லும் தன்மை, புண்களை ஆற்றும் தன்மை, மன அழுத்தத்தை போக்கும் தன்மையும், இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதாகவும், ரத்தத்தில் உள்ள கொழுப்பினை  குறைப்பதாகவும், கல்லீரல், இருதயம் மற்றும் சிறுநீரகம் இவற்றை காப்பதாகவும் உள்ளது. மேலும் இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்கவும் செய்யும்.

திரிபலையில் டானின்கள், கேலிக் அமிலம், எலாஜிக் அமிலம் மற்றும் செபுலினிக் அமிலம் ஆகிய முக்கிய வேதிப்பொருள்கள் உள்ளன. ஃபிளாவனாய்டுகள் (முக்கியமாக குர்சிட்டின் மற்றும் லுடோலின்), சபோனின்கள், ஆந்த்ராகுயினோன், அமினோ அமிலங்கள், மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற வேதிப்பொருள்களும் இதில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவை மூன்றும் சேர்ந்த திரிபலையில் மருத்துவ குணமிக்க பல்வேறு வேதிப்பொருள்கள் உள்ளதால் இவை தொற்றா நோய்களை தொட ஒட்டாமல் தடுக்கும் தன்மையுடையதாக உள்ளது.

திரிபலையை நாள்தோறும் 5 கிராம் வரை எடுத்துக்கொள்ள ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். சர்க்கரை வியாதி எனும் நீரிழிவு நோய் தான் இன்றைய தொற்றா நோய்க்கூட்டங்களின் அரசன் என்றே சொல்லலாம். இதனை பயன்படுத்தி தான் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் வணிகமே உள்ளது. அதனால் தான் என்னமோ திரிபலை போன்ற நூற்றுக்கணக்கான எளிய மருந்துகளை பற்றி பேச தயங்குகிறது நவீன உலகம். 

திரிபலை நம் உடலில் சர்க்கரை அதிகரிக்க காரணமாகும் நொதிகளை தடுத்து சர்க்கரை பொருள் உருவாவதை தடுப்பதோடு, செல்கள் சர்க்கரை பயன்படுத்தவும் தூண்டுகிறது. இதனால் ரத்த சர்க்கரை அளவு இயற்கையாக குறைவதாக ஆய்வுகளும் கூறுகின்றது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நாள்தோறும் திரிபலையை எடுத்துக்கொள்ள, சர்க்கரை அளவு குறைவதுடன் நாள்பட்ட நீரிழிவினால் உண்டாகும் கண் பார்வை இழப்பு, நரம்புதளர்ச்சி ஆகிய பின் விளைவுகளை தடுக்கும் தன்மை உடையது.

இதில் உள்ள வேதிபொருள்களால் திரிபலை, நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்பு பொருள் உட்கிரத்தலை தடுக்கும்படியாகவும், இதன் மூலம் ரத்தத்தில் கொழுப்பினை குறைத்து உடல்பருமனை குறைக்கும்படியாக, இருதய நோய்களை தடுக்கும்படியாக உள்ளது. உடல் பருமன் இன்றைய நவீன உலகில் பலருக்கும் மிகப்பெரிய சவால். உடல் எடை அதிகரிப்பே, சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள் போன்ற பல தொற்றா நோய்களுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

உடலில் உள்ள செல்களுக்கு ஆதாரமான மரபணு எனப்படும் டிஎன்ஏ மாற்றமே பின்னாளில் உலகையே அச்சுறுத்தும் கொடிய நோயான புற்றுநோய்க்கு ஆதாரமாகின்றது. திரிபலை ஆனது, மரபணு எனப்படும் டிஎன்ஏ சேதத்தை அதனால் ஏற்படும் பிறழ்வுகளைத் தடுக்கவும், மாற்றியமைக்கவும் உதவக்கூடும் என்கின்றன நவீன ஆய்வுகள். சில ஆய்வுக்கூட பரிசோதனைகளும் புற்றுநோய் வளர்ச்சியை திரிபலை தடுக்ககூடியது என்று தெரிவிக்கின்றன. ஒரு மருத்துவ ஆய்வில் சைட்டோடாக்சிக்-டி செல்கள் மற்றும் என்.கே செல்களை திரிபலை அதிகரித்ததாக சோதனை முடிவுகள் தெரிவிக்கிறது. எனவே, திரிபலை புற்றுக்கட்டிகள் வளர்ச்சியை தடுக்கும் தன்மை உடையது என்றும், பெருங்குடல் மற்றும் பிற புற்றுநோய்களின் சிகிச்சையில் நல்ல பலனளிக்கும் என்பதும் அறியப்படுகிறது.

இவ்வாறு நோய்களை தடுப்பதிலும், நோய்களை நீக்குவதிலும் திரிபலை சிறப்பான பங்களிப்பை அளிக்கக்கூடியது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த திரிபலை எனும் சித்த மருந்து இன்றைய நவீன வாழ்வியலை நாடும் ஒவ்வொருவர் வீட்டிலும் நிச்சயம் இருக்க வேண்டிய அமிர்தம். 

இத்தகைய அமிர்தத்தை அளவோடு எடுத்துக்கொள்ள, அளவில்லா தொற்றா நோய்களை அடியோடு விரட்டி, ஆரோக்கியமுடன் வாழ முடியும். சித்த மருத்துவம் நம் வாழ்வியலோடு இணைந்தது மட்டுமல்ல அறிவியலையும் விஞ்சக்கூடியது.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com