90 வயதிலும் தொடரும் இலக்கியப் பணி! தமிழறிஞர் மா.சின்னு

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் மூத்த தமிழறிஞர் மா.சின்னு (90) தள்ளாடும் வயதிலும் தமிழ் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். 
தமிழறிஞர் மா.சின்னு
தமிழறிஞர் மா.சின்னு

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் மூத்த தமிழறிஞர் மா.சின்னு (90). தள்ளாடும் வயதிலும் தமிழ் மீதான ஆர்வம் அவரை விட்டு விலகவில்லை. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் புத்தகங்கள் வாசித்தல், எழுதுதல், இலக்கியம் தொடர்பான ஆய்வு போன்றவற்றை இன்றளவும் மேற்கொண்டு வருகிறார்.

தன்னை ஒரு மாணவராக கருதிக் கொண்டு இலக்கியத்திலும், இலக்கணத்திலும் புதிய, புதிய அத்தியாயங்களை தேடிக் கொண்டிருக்கும் அவர் கூறியதாவது: 

தற்போது வயது 91 வயது நெருங்கி விட்டது. 1932 ஜூலை 1-ல் அரியலூர் மாவட்டம் தா.பழூர் என்ற கிராமத்தில் பிறந்தேன். தந்தை மாரிமுத்து, தாய் அலமேலு. பள்ளிப்படிப்புக்குப் பின்னர், உயர்கல்வியை திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியிலும், திருவையாறு அரசர் கல்லூரியிலும் முடித்து 1954-ல் புலவர் பட்டம் பெற்றேன். புதுக்கோட்டை குலபதிபாலையா நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினேன்.

அதன்பின் 1955 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமத்திவேலூர்(தற்போது நாமக்கல் மாவட்டம்) சங்கர கந்தசாமிக் கண்டர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். 37 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் 1992–-இல் ஓய்வு பெற்றேன்.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போதே எழுத்து மீது ஆர்வம் உண்டு. 1990 ஆம் ஆண்டு முதல் நாளிதழ், வார இதழ்களுக்கு கட்டுரைகளை அனுப்பி வந்தேன். தினமணி நாளிதழில் ஞாயிற்றுக்கிழமை தமிழ்மணி பகுதியில் கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்கின. சங்கப்பலகை என்ற தலைப்பில் இந்த கட்டுரைகள் அனைத்தையும் 2005 இல் புத்தக வடிவில் வெளியிட்டேன்.

இதுவரை நாலாந்தமிழ், கம்பன் காட்டிய வளங்கள், கவிச்சக்கரவர்த்திகள், ஹோமரும் கம்பரும், பரிமேலழகரின் இலக்கண உரைத்திறன், தொல்காப்பிய நெறியில் திருக்குறளும், சிலப்பதிகாரமும், தொழுதகை மடந்தையர், தோலாமொழியின் சூளாமணி, சங்கப்பலகை, தொல்காப்பியம் (எழுத்து, சொல் தெளிவுரை, தொல்காப்பியம் பொருள், அதிகாரம் தெளிவுரை), நன்னூல் தெளிவுரை என 11 ஆய்வு நூல்களை எழுதி உள்ளேன்.

மனைவி, இரு மகள்கள் காலமாகிவிட்டனர், மகன் வேளாண்மை பொறியியல் துறையில் பணியில் உள்ளார். தனியாக இருப்பதால், இலக்கியப் பணி, புத்தக வாசிப்பு போன்றவை மூலமாகவே நாள்களை கடத்திக் கொண்டு செல்கிறேன். வயது மூப்பாலும், கண் பார்வை மங்கியதால் எழுத்துப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் உள்ளது. என்னிடம் பயின்ற மாணவ, மாணவியர் இதற்கு உதவியாக உள்ளனர். 

சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூற்றிற்குச் சரியான விளக்கவுரை எழுத வேண்டும் என்பதுதான் எனது நீண்ட நாள் விருப்பம். தற்போது அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளேன். கடவுள் வாழ்த்து நீங்கலாக 400 பாடல்கள் கொண்ட அகநானூறு நூல் களிற்றியானைநிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை எனும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதாகும். முதல் பிரிவான களிற்றியானை 120 பாடல்களுக்கும் உரையெழுதி முடித்து விட்டேன். இந்த நூல் உவே.சா. பதிப்பு போல் உரை, விளக்கவுரை, ஒப்புமை மேற்கோள்களுடன் வெளியாக இருக்கிறது. கடந்த 2017-ல் தமிழக அரசு தமிழ் செம்மல் விருது வழங்கி கெளரவித்தது என்றார்.

இரு முதல்வர்கள் பாராட்டிய தமிழறிஞர்

தமிழ்மொழி சார்ந்த பிரச்னைகள் எழுந்தபோது மறைந்த முதல்வர்களான மு.கருணாநதி, ஜெயலலிதா ஆகியோருக்கு தமிழறிஞர் என்ற முறையில் மா.சின்னு உதவியுள்ளார். 1995 ஆம் ஆண்டு தஞ்சையில் எட்டாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்றது.

அப்போதைய முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், அறிவியல் தமிழ் 'நாலாந்தமிழ்' என்று தெரிவிக்க, அதற்கு தமிழறிஞர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். முத்தமிழ் என்பதே சரியாகும், அறிவியல் தமிழ் இயற்றமிழில் அடங்கும் என்றனர்.

தமிழகத்தில் அறிவியலை நாலாந்தமிழ் என அறிவித்தால்தான் தமிழ் வளரும் என்பதை இவர் கட்டுரைகள் வாயிலாக விளக்கினார். அதாவது இலக்கணத்தை எழுத்து இலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம் என தொல்காப்பியர் வகைப்படுத்தியிருந்தார். பிறகு எழுத்து, சொல்,  பொருள், யாப்பு, அணி என்ற ஐந்து இலக்கணம் உருவானது.

தண்டபாணி சுவாமிகள் இயற்றிய புலமை இலக்கணம் ஆறாவது இலக்கணமாக மாறியது. இதனை புலவர்கள் உலகம் எதிர்க்கவில்லை, எனவே நாலாந்தமிழ் என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும் என்ற கருத்தை தெரிவித்திருந்தார். அதற்காகவே தனது முதல் நூலுக்கு நாலாந்தமிழ் என்ற பெயரை வைத்தார்.

கடந்த 2002–ஆம் ஆண்டு கண்ணகி சிலை பிரச்னையில், சென்னை அன்பகத்தில் கண்ணகி சிலை அமைக்க மறைந்த முதல்வர் கருணாநிதி முயற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அந்த சிலையின் கையில் வளையல் இல்லாமல் இருக்கும் தகவலை அறிந்த இவர், கருணாநிதிக்கு தன் கைப்படக் கடிதம் எழுதினார். அதில், மதுரையை எரித்த பிறகுதான் கண்ணகி கொற்றவை வாயிலில் பொற்றொடி தகர்த்தாள், வழக்காடும்போது அவளது கையில் வளையல் இருந்தது என்பதை சிலப்பதிகாரம் தெளிவுபடுத்தி உள்ளது என்று கூறியிருந்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட கருணாநிதியும், மா.சின்னுவை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பாராட்டியதுடன், 'வளையலுடன் கண்ணகி சிலை' என்ற அறிக்கையை வெளியிட்டார். மேலும், கருணாநிதி எழுதிய தொல்காப்பியப் பூங்கா நூலை இவருக்கு அனுப்பி வைத்து திருத்தங்கள் செய்து தருமாறும்கோரி பெருமைப்படுத்தினார். இரு முதல்வருக்கும் தமிழ் வாயிலாக உதவியதை தனக்கு கிடைத்த பெரும்பேறு என்கிறார் மா.சின்னு. 

'பிறருக்கு கொடுப்பதே வாழ்க்கை'

தமிழறிஞர் மா.சின்னு தனது ஓய்வூதியத்தை, தன்னலம் கருதாமல் பிறருக்கு கொடுத்து உதவுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளார். கரோனா பொது முடக்கக் காலத்தில் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு உணவு வழங்கும் பணியை முதல் ஆளாக தொடங்கி வைத்தார்.

மேலும், உயர்கல்வி பயில முடியாத ஏழை மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவி வருகிறார்.

குமணவள்ளலிடம் பரிசு பெற்று வந்த சங்கப் புலவரான பெருஞ்சித்தரனார், மனைவியை நோக்கி மனைகிழவோயே! 'முதிரமலைத்தலைவன் குமணன் நல்கிய பெருஞ்செல்வம் கொண்டு வந்துள்ளேன். நம் பசி நீங்க நெடுநாளும் கடன் கொடுத்து உதவியோர்க்கு முதலில் கொடு. விருப்பம் உள்ளவர்க்கெல்லாம் கொடு. இதனை வைத்துக் கொண்டு நெடுநாள் வளமுடன் வாழலாம் என்று நினைக்காமல் எல்லோர்க்கும் கொடு(புறநானூறு-163) என்று கூறிய அவர் புலவராக அல்லாமல் புரவலராக (வள்ளல்) மாறினார்.

ஏழ்மை கண்டு இரங்கும் இப்பண்பாடு கற்றுவல்ல அறிஞரிடையே பரவ வேண்டும் என்பதும் 'பிறரிடமிருந்து எடுப்பது வாழ்க்கை அல்ல: பிறருக்குக் கொடுப்பதே வாழ்க்கை 'என்ற மார்க்ஸிம்கார்க்கியின் பொன்மொழியை பின்பற்றி வருகிறார் இத்தமிழறிஞர். 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் மலேசியப் பல்கலைக் கழகமும் இவரது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக வெளியிட்டுள்ளது.

இலக்கணக் கடல் என்றழைக்கப்படும் கோபாலய்யர் இவரது ஆசிரியராவார். மேலும், கம்பராமன் (இராமராசன்) தமிழண்ணல் ஆகியோரின் நெருங்கிய நண்பராவார். தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் பெருமை சேர்க்கும் மா.சின்னுவின் நூல்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்பதே தமிழறிஞர்கள் பலரின் விருப்பமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com