காத்திருக்கின்றன மோர்பியில் மரித்தவர்களின் ஆன்மாக்கள்!

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்  அடக்கிவாசிக்கப்படும் மோர்பி தொங்குபால உயிர்ப் பலிகள் பற்றி...
காத்திருக்கின்றன மோர்பியில் மரித்தவர்களின் ஆன்மாக்கள்!
காத்திருக்கின்றன மோர்பியில் மரித்தவர்களின் ஆன்மாக்கள்!

மோர்பியில் 136 பேரைப் புதைத்ததுடன் அல்லது எரித்தவுடன் தொங்குபாலத் துயரம் தீர்ந்துவிட்டதா? விபத்து என்ற பெயரில் நடந்த இந்தப் படுகொலைக்குக் காரணம் யார் என்பது தெரிய வேண்டாமா? கூடுதலாக டிக்கெட் கொடுத்தவர்களும் காவலாளிகளும்தான் குற்றவாளிகளா? உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டாமா? இப்போதும் கிணற்றில் இட்ட கல்லைப் போல, அல்ல, மோர்பியின்  சடலங்களைப் போலவே உண்மைகள் யாவும் ஒரேயடியாகப் புதைக்கப்பட்டுவிடுமா?

விபத்து நடந்தபோது வேண்டுமானால் மீட்பு பற்றியும் ஆறுதல் பற்றியும் மட்டும் கவலைப்பட்டிருக்கலாம், கோபமும் வராமல் இருந்திருக்கலாம். ஆனால், இன்னும்கூட குற்றமிழைத்தவர்கள் மீது கோபப்படாமல் சம்பந்தப்பட்ட அனைவரும் கள்ள மௌனம் சாதித்தால் செத்துப்போன 136 உயிர்களுக்கு என்னதான் மரியாதை?

சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலத்தில், 'குஜராத் மாடல்' என்பதாக நாட்டுக்கே  உபதேசிக்க முயன்று பெருமைப்பட்டுக் கொள்ளும் குஜராத்தில் நேர்ந்த இந்தப் பெருந்துயரத்தைக் கண்டும்காணாமல் விடுவதேன்?

சிலர் பெருந்தலைகளைக் குறைகூறுகிறார்கள், சிலரோ கொஞ்சமும் கூச்சமின்றி, நடிகர் கவுண்டமணியின் நகைச்சுவையைப் போல, இதெல்லாம் சாதாரணமப்பா என்று கூறுவதுடன், பாலங்கள் இடிவதெல்லாம் இந்தியா முழுவதும் எல்லா இடங்களிலும் நடப்பதுதானே என்று கடந்துசெல்கின்றனர்.

இந்த விபத்துகளெல்லாம் மனிதத் தவறுகளால் அல்ல, மனிதர்களால் மட்டுமே நேரிட்டவை. லஞ்ச ஊழலில் திளைக்கும் கட்டுநர்கள், ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் எல்லாம்தான் காரணம் என்பதை எவ்வாறு எல்லாருமே வசதியாக மறந்துவிடுகிறார்கள்? இத்தகைய எல்லா கொடூரங்களிலுமே பொறுப்புள்ளவர்களின் அலட்சியத்துக்குப் பெரும் பங்கிருக்கிறது என்பதை யாரால் மறுக்க முடியும்?

ஏதோ தொங்குபாலத்துக்குள் அளவுக்கு அதிகமானோர் சென்று தற்படம் எடுக்க முனைந்ததால்தான் விபத்து நேரிட்டதாக ஒரே குரலில் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். மாவட்ட, நகராட்சி நிர்வாகங்கள் பற்றிப் பேசுகின்றனர். புனரமைப்பு வேலையைச் செய்த நபர்களைப் பற்றியோ, நிறுவனங்களைப் பற்றியோ, அவர்களின் பின்னணி பற்றியோ, வசூலைக் கருத்தில்கொண்டு குறித்த காலத்துக்கும் முன்னரே பாலத்தைத் திறந்தது பற்றியோ ஈனஸ்வரத்தில்தான் முனகுகின்றனர்.

இப்படியேதான் பேரங்காடி வளாகங்கள் இடிந்தாலும் பெரும் பாலங்கள் சரிந்தாலும் திரையரங்குகள் பற்றியெரிந்தாலும் சில காலம் பேசிவிட்டு எல்லாருமாக மறந்துவிடுகின்றனர். பிறகென்ன, ஆண்டுதோறும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்க வேண்டியதுதான். இந்த மோர்பியும் அவற்றைப் போலவே மறக்கப்பட்டுவிடுமோ, தெரியவில்லை. மக்கள் மறந்துவிட வேண்டும் என்றுதான் அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் விரும்பும் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க வாய்ப்பில்லை.

சட்டப்பேரவைத் தேர்தலில் மோர்பி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்துவிட்டபோதிலும் இன்னமும் பிரசாரம் என்று கூறிக்கொண்டு யாரும் ஊருக்குள் செல்லவில்லை. இந்தப் பெருந்துயரத்துக்கு பாரதிய ஜனதா கட்சி அரசுதான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. பாரதிய ஜனதாவுக்கு எதிராகக் குற்றப் பத்திரிகையொன்றை காங்கிரஸ் வெளியிட, ஆம் ஆத்மியோ புனரமைப்புப் பணியில் நடந்த லஞ்ச ஊழல்தான் இவ்வளவுக்கும் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளது.

மோர்பியில் அதிருப்தியும் எதிர்ப்பும் கனன்றுகொண்டுதானிருக்கின்றன. இன்னமும் இறந்தவர்கள், அவர்களின் உறவினர்கள் வீடுகளில் மட்டுமல்ல, நேரடி சம்பந்தமில்லாத மக்கள் மத்தியிலும்கூட துயரம் நீங்காமலிருக்கிறது. இந்த சம்பவத்துக்கு முன்னர் தொகுதியில் நிலைமை பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாகத்தான் இருந்தது. எனினும், இப்போதைய நிலையைப் பற்றிச்   சொல்லிக்கொள்ள முடியாது.

இந்த துயரம் காரணமாக, தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பிரிஜேஷ் மெர்ஜாவை மீண்டும் தேர்தலில் நிறுத்தாமல், முன்னாள் எம்எல்ஏ கந்தி அம்ரிதியாவை பாரதிய ஜனதா நிறுத்தியிருக்கிறது. பாலம் அறுந்துவிழுந்தபோது, அம்ரிதியாவே ஆற்றில் குதித்துச் சிலரைக் காப்பாற்றியதாக உள்ளூர் மக்கள் சிலர்  குறிப்பிடுகின்றனர்.

தேர்தல் பிரசாரம் தொடங்கியதும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். விறுவிறுப்பின் பெயரால் இந்தப் படுகொலை தொடர்பான விஷயங்கள் யாவும் பூசிமெழுகப்பட்டும்விடலாம்.

மோர்பி மக்கள் என்ன நினைக்கிறார்கள், குஜராத்தின் பிற பகுதிகளிலுள்ள மக்கள் என்ன நினைக்கிறார்கள்? குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில் மோர்பியின் உயிரிழப்புகள் எவ்வாறு எதிரொலிக்கும்? எதிரொலிக்குமா? அல்லது தேர்தல் பரபரப்பில், வானளாவிய வாக்குறுதிகளின் மிதப்பில் மோர்பியே மக்களால் மறக்கப்பட்டுவிடுமா?

தேர்தல் முடிவுக்காக மட்டுமல்ல, நீதி கிடைப்பதற்காக, உண்மையான குற்றவாளிகள் தப்பிவிடாமல் தண்டிக்கப்படுவதற்காக நாட்டின் பெருந்திரளான மக்களுடன் சேர்த்து மோர்பியில் உயிரிழந்தவர்களின் ஆன்மாக்களும்கூட காத்துக்கொண்டுதானிருக்கும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com