சுகம் தரும் சித்த மருத்துவம்: மூட்டு தேய்மானத்திற்கு ‘முடக்கறுத்தான்’ தீர்வு தருமா..?

நிமிர்ந்த கம்பீரமான சிங்க நடை உடைய உடல் உறுதியும், சிகரம் ஏறும் மன உறுதியும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு இல்லை என்றே கூறலாம்.
சுகம் தரும் சித்த மருத்துவம்: மூட்டு தேய்மானத்திற்கு ‘முடக்கறுத்தான்’ தீர்வு தருமா..?


‘சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு’ எனும் உற்சாக வரிகள் உடலும் மனமும் உறுதி என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டிய பாடல் வரிகள். ஆனால் நிமிர்ந்த கம்பீரமான சிங்க நடை உடைய உடல் உறுதியும், சிகரம் ஏறும் மன உறுதியும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு இல்லை என்றே கூறலாம். மன உறுதி ஒருபுறமிருக்க, அவரவர் நடையைப் பற்றி அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒருவர் நடக்கும் நடையை வைத்தே அவருடைய வியாதியை மருத்துவர் ஊகிக்க முடியும். அதன்படி, காலை தாங்கியபடி நடப்பது (லிம்பிங் கைட்) ஆர்த்ரைடிஸ் எனும் நோய் நிலையின் அடையாளம். தாங்கி தாங்கி நடப்பது மூட்டு தேய்மானத்தின் அறிகுறி. இன்றைய உணவு மற்றும் வாழ்வியல் நெறிமுறை மாற்றத்தால் அறுபதுகளில் வரவேண்டிய மூட்டு தேய்மானம், முப்பதுகளிலேயே வந்து விடுவது வருத்தம் தான்.

முடக்கறுத்தான்

டாக்டர் நான் மூன்று  மாதமாக காலைக் கீழே ஊணும் போதே வலி, தாங்கி தாங்கி தான் நடக்குறேன், என் வேலையை என்னால் செய்ய முடியல, கீழ உட்கார்ந்தால் எழக்கூட முடியல, டாய்லெட்ல கூட உட்கார முடியவில்லை என்று வருத்தப்படும் பலரும் ‘மூட்டு வாதம்’ எனும் ஆர்த்ரைடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிரமப்படுகின்றனர் என்பது தான் உண்மை.

வலி நிவாரணி மாத்திரைகளை தொடர்ந்து போடக்கூடாது பின்னாளில் ‘அனால்ஜெஸிக் நெப்ரோபதி’ எனும் சிறுநீரக பிரச்னை வரும் என்று மருத்துவரே வலியுறுத்திவிட்டார். வலியுடன் நடந்து நடந்து கால்கள் வளைந்து 'ஜெனு வேரம்' என்ற நோய் நிலையாகி, இனி இப்படி தான் வாழ்வை நகர்த்த வேண்டும் போலிருக்கு என்று எண்ணி வாழ்நாளை கடத்துபவர் ஏராளம்.

சரிங்க டாக்டர் வலியை போக்க, வேறு என்ன தான் வழி இருக்கு? என்று வருந்தும் பலரும், சித்த மருத்துவத்தை மறந்தவர்கள் தான்.

பாரம்பரிய உணவையும், மருந்தையும் நினைவில் வைத்துக்கொண்டால் அவர்களுக்கு தீர்வு நிச்சயம் என்பதோடு, வருங்கால சந்ததியினருக்கும் ஆரோக்கியத்திற்கான நல்ல வழியை உருவாக்கி கொள்வதற்கான வழியை கூற முடியும்.

அந்த வகையில் மூட்டு வாதம் எனும் ஆர்த்ரைடிஸ் எனும் நோய் நிலையில் தேய்ந்த மூட்டினை, குருத்தெலும்பினை புதுப்பிக்க காத்துக்கொண்டிருக்கும் சித்த மருத்துவ மூலிகைகளுள் ஒன்று தான் ‘முடக்கறுத்தான்’.

முடக்கறுத்தான் என்பதன் பெயர்க்காரணம் அனைவரும் அறிந்ததே. முடக்கு + அறுத்தான், அதாவது முடமாக்கும் மூட்டு வாத நோய்களை நீக்கும் (அறுத்து எறியும்) தன்மை உடையதால் அப்பெயர் பெற்றுள்ளது.

இதன் கீரையால் மூட்டு வாதத்தை உண்டாக்கும் வாயுவை, நம் உடலில் மட்டுமல்ல, உலகத்தை விட்டே ஓடிவிடும் என்று "காலைத் தொடு வாயுவுந் கன்மலமும் சாலக் கடக்கத்தான் ஓடு விடுங்காண்" என்ற அகத்தியர் குணவாகடம் பாடல் வரிகள் தெரிவிக்கின்றது. ‘வாதமலாது மேனி கெடாது’ என்ற பிணியின் முதல் காரணத்திற்கேற்ப ‘வாதம்’ என்ற வாயுவே மூட்டு நோய்களுக்கும் முதன்மை காரணம்.  

முடக்கறுத்தான் கீரையானது மூட்டு வாத நோய்களுக்கு மட்டுமில்லாமல், தோல் நோய்களிலும், சுரத்தை குறைப்பதிலும், காது நோய்களிலும், வயிற்று வலி, வீக்கம், இடுப்பு வலி, இருமல் போன்ற பல நோய் நிலைகளில் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு பாரம்பரிய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் ஆண்மை குறைவு தீர்வுக்காக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இருதய வடிவ பலூன் போன்ற வடிவமைப்பை கொண்ட முடக்கறுத்தான் காய்

இருதய வடிவ பலூன் போன்ற வடிவமைப்பை கொண்ட காயையும், துவர்ப்பு, கசப்பு சுவையும் கலந்துள்ள முடக்கறுத்தான் கீரையில் சப்போனின்கள், ஸ்டீராய்டுகள், பினோலிக் அமிலம், பிளவனாய்டு க்ளுகோசைட்கள், பீனால், அல்கலாய்டுகள், குளோரோஜெனிக் அமிலம், கபியிக் அமிலம், மருத்துவ தன்மை மிக்க அபிஜெனின் குளுகுரோனாய்டு, லூட்டியோலின் குளுகுரோனாய்டு ஆகியவையும் உள்ளது. அதிலும் அபிஜெனின் எனும் மருத்துவ செயல் மூலக்கூறு தமிழகத்திலே கடலூர் மாவட்டத்தில் உள்ள முடக்கறுத்தான் கீரையில் தான் அதிகம் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

முடக்கறுத்தான் கீரையில் உள்ள பல்வேறு வேதிப்பொருள்கள் பல சிறப்புமிக்க மருத்துவ குணங்களை உடையதாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையும், வீக்கத்தை குறைக்கும் தன்மையும், வலி நிவாரணி தன்மையும், வயிற்று புண்ணை ஆற்றும் தன்மையும், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மையும், பிளவனாய்டுகள் உள்ளதால் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையும், புற்று நோய்க்கு எதிராக செயல்படும் தன்மையும் , கல்லீரல், சிறுநீரகம் போன்ற உள்உறுப்புகளை பாதுகாக்கும் தன்மையும், உடல் வெப்பத்தை குறைக்கும் தன்மையும், வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகளுக்கு எதிராக செயல்படும் தன்மையும் வாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் இலையில் உள்ள லூடியோலின்-7-o-குளுகுரோனைடு, அபிஜெனின்  7-o-குளுகுரோனைடு, மற்றும் கிரைசோரியல் ஆகிய வீக்கமுருக்கி செய்கை உடைய, ஆர்த்ரைடிஸ்-க்கு எதிராக செயல்படக்கூடிய மூலப்பொருள்கள், மூட்டு வாதத்தால் சிதைந்த குருத்தெலும்பை புதுப்பிக்கும் தன்மை உடையன. மேலும் வீக்கத்திற்கு காரணமாக உள்ள டி.என்.எப் போன்ற காரணிகளையும், தடுத்து வீக்கம் ஏற்படாமல் தடுக்கும் தன்மையுடையதும் குறிப்பிடத்தக்கது.

இதன் இலையில் ‘சபோனின்’ வேதிப்பொருள் அதிகம் காணப்படுவதால் அதிக அளவு உள்கொள்ள வயிற்று வலி, வயிறு கழிச்சல் ஏற்படும். டாக்டர் முடக்கறுத்தான் கீரை சாப்பிட்டா ஒத்துக்கவில்லை, ஹீட் (சூடு) ஆகிடுது, வயிறு வலிக்குது என்று கீரை மீது பழி சுமத்தும் பலரும், மூட்டு வலி பிரச்னை ஒரே நாளில் சரி ஆகிவிடணும் என்று ஒரு கட்டு கீரையை ஒரே நாளில் உண்பவர்கள் தான்.

முடக்கறுத்தான் இலையை எண்ணெயிலிட்டு அல்லது ஆமணக்கு எண்ணெயில் காய்ச்சி அவ்வப்போது மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர நல்ல பலனை தரும். அத்துடன் நாள்பட்ட மூட்டு வலியால் அவதியுறும் பலரும், மூட்டு வலி வரக்கூடாது என மெனக்கெடும் பலரும் உணவில் அடிக்கடி முடக்கறுத்தான் இலையை பயன்படுத்த நல்ல பலன் தரும்.

இது இயற்கையான எளிமையான சித்த மருத்துவ முறை. மூட்டுகளுக்கு வலிமை தருவது. பாதுகாப்பானது. அனைவரும் இதனை பயன்படுத்தி, அடுத்த சந்ததியையும் பயன்படுத்த செய்தால் மூட்டுகளின் ஆரோக்கியம் நிச்சயம்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: +91 8056040768

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com