சுகம் தரும் சித்த மருத்துவம்: சினைப்பை நீர்க்கட்டிகளை 'வஜ்ஜிர பீஜம்' கரைக்குமா?

மாறிப்போன அன்றாட வாழ்வியல் நெறிமுறைகளும், மறந்து போன பாரம்பரிய உணவும், பாரம்பரிய மருத்துவமும் இது போன்ற பல நோய் நிலைகளை நம்மிடையே விதைத்துக் கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மை.
கழற்சிக்காய் விதை
கழற்சிக்காய் விதை


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிசிஓஎஸ் (PCOS) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி என்ற நோய் நிலையை பற்றி பெரிதாக யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், தற்போது சில ஆண்டுகளாக மாதவிடாய் கோளாறு என்று மருத்துவரை அணுகும் போது முதலில் ஸ்கேன் பண்ணுங்க என்று சினைப்பை நீர்க்கட்டியை ஊகித்து, பரிந்துரை செய்வது அதிகமாகிவிட்டது. 

தென்னிந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 9 முதல் 22 சதவிகிதம் வரை பெண்களுக்கு இந்த சினைப்பை நீர்க்கட்டி காணப்படுவதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. இன்னும் சில ஆண்டுகள் கழித்து பார்த்தல் மாதம் மாதம் சரியான தேதியில் மாதவிடாய் நிகழும், இது தான் இயல்பான உடல் செயலியல் என்பதை நாம் வரலாற்று செய்திகளாக பார்க்க வேண்டிய காலம் வந்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை. 

மாறிப்போன அன்றாட வாழ்வியல் நெறிமுறைகளும், மறந்து போன பாரம்பரிய உணவும், பாரம்பரிய மருத்துவமும் இது போன்ற பல நோய் நிலைகளை நம்மிடையே விதைத்துக் கொண்டிருக்கின்றன என்பது தான் உண்மை.

“டாக்டர் எனக்கு பீரீயட்ஸ் மாதம் மாதம் சரியான தேதியில் ஏற்படுவதில்லை, அத்துடன் உடல் எடை கூடிட்டே போகுது, முகத்தில் மயிர் வளர்ச்சி உண்டாகி பெண்மைக்கான அழகை குறைக்கின்றது, சில சமயம் மாதவிடாயின் போது தாங்க முடியாத வயிற்று வலி, சில சமயம் அதிக ரத்த போக்கு, தைராய்டு செக் பண்ணி பாக்க சொன்னாங்க அதுவும் நார்மல் தான்” என்று மகளிர் பலர் மனம் நொந்து மருத்துவரிடம் கேட்க தயங்கும் விஷயங்கள் இன்னும் பல. 

இது ஒரு புறமிருக்க, டாக்டர் தொடர்ந்து 21 நாள் மாத்திரை சாப்பிட்டு வந்தேன்,
உடல் எடை இன்னும் கூடிடுச்சு, இதனால் நிறைய பக்க விளைவு வரும்னு பக்கத்து வீட்டுக்காரங்க சொன்னாங்க? இது பாதுகாப்பானதா?, இயற்கை முறையில் இதற்க்கு தீர்வு காண முடியாதா?, சித்த மருத்துவத்தில் இதற்கு தீர்வு உண்டா?, பெற்றோர்களிடம் கூறினால் வருத்தப்படுவார்கள் என்று தயங்கி, சித்த மருத்துவத்தை அணுக நினைக்கும் பலருக்கும் உதவும் எளிமையான மூலிகை தான் வஜ்ஜிர பீசம் எனும் கழற்சிக்காய்.

கழற்சிக்காய் பார்ப்பதற்கு அழகான மஞ்சள் நிற பூவுடன் காணும் கொடிவகை. விதைகள் பெரிய வட்டமான. முட்டை வடிவ. முடியுடன் கூடிய சாம்பல் நிறத்தில் பளபளப்பாக, கசப்பு சுவையுடன் இருக்கும். பீவர் விதை, நிக்கர் விதை, பிஸிக் விதை என பல பெயர்களில் பல நாடுகளில் கழற்சிக்காய் பயன்படுத்தப்படுகிறது.

சித்த மருத்துவத்தில் இதன் இலை, விதை, வேர், பட்டை ஆகிய அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்ததாக கூறப்பட்டு உள்ளது.

முக்கியமாக இதன் விதையால் அண்ட வாதம், குன்மம், வயிற்று வலி இவை நீங்கும் என்பதை “கழற்காய் விதைக்கு கன அண்ட வாதம் தழற்பக்க சூலை குன்மம் சாந்தி” எனும் அகத்தியர் குணவாகட பாடல் வரிகளால் அறியலாம்.

கழற்சிக்காயில் விதைகளில் இதுவரை 50-க்கும் மேற்பட்ட வேதிப்பொருள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பான்டுசெலின், சீசல்பினின், கேசேன் ஃபுரானோ-டைடெர்பீன்கள், டெர்பெர்னாய்டுகள், ஃபிளாவேனாய்டுகள், ஸ்டீரால்கள் போன்ற முக்கிய மூலக்கூறுகள் இதன் மருத்துவ செயலுக்கு காரணமாக உள்ளன. 

விதைகளில் கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்ற பிற ஊட்டச்சத்து கூறுகளும் உள்ளன.

மேலும் விதையில் மலட்டு தன்மையை போக்கும் வைட்டமின் ஈ, ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையுள்ள வைட்டமின் சி, தயாமின், நியாசின் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற வைட்டமின்களும் உள்ளது.

மேற்கிந்திய தீவுகளில் இதன் விதையை வறுத்த பொடியை பாரம்பரியமாக நீரிழிவு வியாதிக்காக பயன்படுத்தி வருகின்றனர். கழற்சிக்காய் விதைக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் தன்மையும், கொழுப்பின் அளவை குறைக்கும் தன்மையும், கட்டிகளை கரைக்கும் தன்மையும் புற்றுக்கட்டிக்கு எதிராக செயல்படும் தன்மையும், பிளவனாய்டுகள் இருப்பதால் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் தன்மையும் உடையது.

இதன் காய் (விதை) சுர நோய்களில் வெப்பத்தை தணிக்க அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. முக்கியமாக மலேரியா, யானைக்காலை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராக செயல்படும் தன்மை வாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

கழற்சிக்காயில் உள்ள டெர்பீன் வேதிப்பொருள் பிசிஓஎஸ் எனப்படும் சினைப்பை நீர்கட்டியில் நோய் நிலைக்கு காரணமான ஆன்ட்ரொஜென் மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களுக்கு எதிராக செயல்படக் கூடியதாகவும், நீர்கட்டியை கரைக்க கூடியதாவும் உள்ளது ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. 

பான்டென்லெய்ட் எனும் வேதிப்பொருள் நீரிழிவு நோய்க்கு எதிராக செயல்படும் தன்மை வாய்ந்ததாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றது.

இன்றைய உணவு பழக்க வழக்கங்களால் ரத்தத்தில் அதிகமான இன்சுலின், உடலில் அதிகப்படியான டெஸ்டோஸ்ட்ரோன் எனும் ஆண் ஹார்மோன் அளவை பெண்களுக்கு அதிகரித்து பிசிஓஎஸ் நோயின் குறிகுணங்களையும், கட்டிகளையும் தோற்றுவிக்கக்கூடியதாக மருத்துவ அறிவியல் கூறுகின்றது.

கழற்சிக்காய் மேற்கூறிய நோய்நிலை அனைத்திலும் செயல்படுவது இதன் சிறப்பு.

நான்கு பங்கு கழற்சிக்காய் விதைக்கு, ஒரு பங்கு மிளகு சேர்த்து எடுத்துக்கொள்ள சினைப்பை நீர்க்கட்டி மட்டுமல்லாது மேற்கூறிய நோய் நிலைகளுக்கு நல்ல பலன் தரும். இதை தேனுடன் சேர்த்து 48 நாள்கள் வரை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம்.

ஆகவே, வஜ்ஜிர பீஜம் எனும் கழற்சிக்காய் விதையினை மாதவிடாய் கோளாறுகளை நீக்க, முக்கியமாக பிசிஓஎஸ் எனும் மகளிர்க்கு ஏற்படும் வாழ்வியல் மாற்ற நோய்க்கு பயன்படுத்த தொடங்கினால் நல்ல பலன் தந்து பலரின் மனவருந்தங்களை போக்கும். உடல் பருமனையும் குறைத்து சினைப்பை நீர்க்கட்டி பாதித்தவர்களுக்கு பின்னாளில் வரும் நீரிழிவு நோயும் வரவிடாமல் தடுக்கும்.

இது பெரிய பக்க விளைவுகள் இல்லாத பாதுகாப்பான நம் நாட்டு மருத்துவம். பலரும் பயன்படுத்தி பலனடையலாம்.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் ஐடி:   drthillai.mdsiddha@gmail.com செல்லிடப்பேசி எண்: 91 8056040768 -

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com